கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்த மூன்றாண்டுகளுக்கு 105 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி சென்னை வரை சுமார் 16 கிமீ நீளமுள்ள கூவம் நதி, கடந்த பல ஆண்டுகளாக மாசடைந்து கிடக்கிறது. சென்னை ஆறுகளை மீட்கும் அறக்கட்டளை என்கிற அரசு அமைப்பின் மூலம் கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிக்குத் திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதல் திட்டம் மூன்று ஆண்டுகள் வரை குறுகிய கால திட்டம், நான்கு முதல் எட்டு ஆண்டுகள் வரை நடுத்தர கால திட்டம், எட்டு ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால திட்டம் என மூன்று கட்டங்களாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.
குறுகியகால திட்டத்தில் ஆற்றைச் சுத்தப்படுத்துவது, கரைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தில் ஆற்றைப் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், நேற்று ஜூலை 9ஆம் தேதி கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அதாவது 105 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டுகள் பணி நடைபெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலோர முகத்துவாரம் முதல் சேத்துப்பட்டு வரை முதற்கட்டப் பணிகள் தொடங்கவுள்ளன. இதில் கரைகளைச் சீரமைத்து பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட 61 பணிகள் நடைபெறவுள்ளன.
No comments:
Post a Comment