Wednesday 2 August 2017

விவசாயிகளை ஏமாற்றும் வங்கிகள்... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Image may contain: outdoorதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும், 2016-ம் ஆண்டிலிருந்தே கடுமையான வறட்சியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன. இதுபோன்றதொரு வறட்சி கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். இந்த வறட்சியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மாண்டுபோன விவசாயிகள் அத்தனைபேருமே, வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் கடன்வாங்கி விவசாயம் மேற்கொண்டவர்கள். கடன்கொடுத்த வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், கடனைக்கேட்டு நெருக்கடி கொடுத்ததால், செய்வதறியாது தற்கொலை முடிவைத் தேடிய விவசாயிகளே அதிகம்.
இத்தகைய கொடூர விளைவுகள் ஏற்பட்ட பிறகும், கடனைக்கேட்டு விவசாயிகளை மிரட்டுவதை வங்கிகள் நிறுத்தியபாடில்லை. ‘கடன் வாங்கிய விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது’ என ரிசர்வ் வங்கி, தெளிவாக வழிகாட்டுதல் வழங்கியிருந்தாலும், அவற்றை நடைமுறைபடுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
2015-ஆம் ஆண்டில் வடஇந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதைத்தொடர்ந்து, பெரும்பாலான வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அகில இந்திய அமைப்பான ‘ஸ்வராஜ் அபியான்’ (சுயஆட்சி இயக்கம்), வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள் நிவாரணத் திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மீதும், மத்திய அரசின் மீதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்தவழக்கில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களையும், திட்டங்களையும் ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், 2016-ம் ஆண்டு மே மாதம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் வறட்சி நிலவும் பகுதிகளுக்கான பிற நிவாரணங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, தொடர் ஆய்வு செய்யும் வகையில் வழக்கைத் தொடர்ந்து நடத்தவும் நீதிமன்றம் முடிவுசெய்தது.
ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குச் செவிசாய்க்காததால், மாநில அரசுகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது, ஸ்வராஜ் அபியான். இவ்வழக்கில், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், நிவாரணம் எனப் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தபடும் விவசாயக் கடன் சம்பந்தப்பட்ட மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி ஆகியவற்றின் சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து, கடந்த 01.07.2016-ஆம் தேதியன்று மத்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் ‘இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகள்’ என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடந்த 10.1.2017 அன்று தமிழகமும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழகத்தில் உள்ள வங்கிகளையும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
இதேபோல, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகளைக் கட்டுப்படுத்தும், நபார்டு வங்கியும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதிகாரபூர்வமாக வறட்சிப்பகுதி என அறிவிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் கடன் காலத்தை நீட்டிக்கும் நிவாரண நடவடிக்கைகளை வங்கிகள் முடித்துவிட வேண்டும் என்பதால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியுடன் கடன்மறுசீரமைப்பு கெடு முடிவடைந்து விட்டது. ஆனால், கடந்த மார்ச் 31-ஆம் தேதிவரை, தமிழகத்தின் 17 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும்தான் பயிர் இழப்பு குறித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனால், கடன் மறுசீரமைப்புக்கான காலக்கெடுவை ஜூலை 10-ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனாலும், இதுவரை விவசாயிகளுக்குச் சாதகமாக எந்தச் சீரமைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.
இந்நிலையில், “இவ்விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, இன்னமும் காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அதோடு, விவசாயிகளும் வங்கி அதிகாரிகளும் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பரப்புரை செய்ய வேண்டும். பயிர் இழப்புச் சான்றிதழ் வழங்கும் பணியைத் துரிதப்படுத்தி விவசாயிகளின் கடன் மறுசீரமைப்பில் நிவாரணம் பெற உதவ வேண்டும். வறட்சிக்காலத்தில் வங்கிகள் வசூலித்தத் தொகையை மீண்டும் விவசாயிகளுக்குப் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஏலம் விடப்பட்ட நகைகள், விவசாயிகளுக்கு மீண்டும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்பவைதான், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளாக உள்ளன.
அணு அணுவாகச் செத்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் தமிழக அரசு பால் வார்க்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

தமிழகத்துக்கும் நிவாரணம் வேண்டும்!

நடப்பு ஆண்டில் ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று, தமிழ்நாடு மாநிலத்தையும் வழக்கில் இணைத்து, ‘தமிழ்நாட்டுக்கும் நிவாரணத்திட்டங்கள் அறிவிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது, ஸ்வராஜ் அபியான். அதற்காக, இந்த அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையிலான ஒரு குழு, மே முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து நேரடியாக ஆய்வு செய்தது. 'உழவர் உரிமைப் பயணம்' என்ற பெயரில் நடந்த இந்த ஆய்வை, ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் ஒரு பிரிவான, 'வாழ்க விவசாயி இயக்கம்' (ஜெய் கிசான் அந்தோலன்) ஒருங்கிணைத்தது.

மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள்
:
* குறுகியகால உற்பத்திக் கடனில் (பயிர்க்கடன்) அடிப்படைக் கடன்தொகை மற்றும் வட்டித்தொகை இரண்டையும் சேர்த்து நீண்டகாலக் கடனாக மாற்ற வேண்டும். 33 % முதல் 50 % வரை பயிரிழப்பு இருந்தால், பாதிப்புக்குள்ளான ஆண்டையும் சேர்த்து அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கும்; 50 % அளவுக்குமேல் பயிரிழப்பு இருந்தால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கும் கடன்காலம் நீட்டிக்கப்பட வேண்டும். கடன் காலத்தை நீட்டிப்பதற்காகச் சொத்து ஆவணங்கள் மற்றும் ஜாமீன் கேட்கக் கூடாது.
* எந்த வகைக்கடன் மறுசீரமைப்பிலும், குறைந்தபட்சம் ஓர் ஆண்டு வரை, அதாவது பாதிக்கப்பட்ட ஆண்டில் எந்தவகையிலும் கடனையோ, வட்டியையோ வசூலிக்கக் கூடாது.
* நீண்டகால விவசாயக் கடனாக இருக்கும்பட்சத்தில், பயிரிழப்பு மட்டும் ஏற்பட்டுள்ளதா அல்லது நிலங்களுக்கும், உபகரணங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். பாதிப்பின் அளவைப் பொறுத்து ஓர் ஆண்டுமுதல் ஐந்து ஆண்டுகள்வரை, கடன் காலத்தை நீட்டிக்க வேண்டும். கடந்த காலங்களில் நீண்டகாலக் கடன்களை வேண்டுமென்றே கட்டாமல்விட்ட விவசாயிகளுக்கு இந்தக் கடன் மறுசீரமைப்பு பொருந்தாது.
* எந்தவகைக் கடனாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட காலகட்டத்தில், தண்டனை வட்டி விதிப்பதோ, கூட்டுவட்டி விதிப்பதோ கூடாது. ஏற்கெனவே இப்படி வசூலித்திருந்தால் அந்தப் பணத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும்.
* கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு, வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த தொழில்களுக்குப் புதிய நீண்டகாலக் கடன்களை வழங்க வேண்டும்.

விவசாயிகளை ஏமாற்றும் வங்கிகள்
கடந்த ஜூலை 1-ஆம் தேதி, திருச்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழகப் பிரிவு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் வந்துகலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே “மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பெரும்பாலான வங்கிகள் கடைபிடிக்கவில்லை. இன்னமும் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தச்சொல்லி, விவசாயிகளை வங்கிகள் நெருக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. பல வங்கிகளில் விவசாயக்கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நகைகள் ஏலம் விடப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டினர்.
‘‘தெரியாது எனச் சொல்வது சரியில்லை”
இந்தப் பிரச்னை குறித்து, SLBC-யின் ஒருங்கிணைப்பு பொறுப்பிலுள்ள வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேளாண்மை மற்றும் கிராமப்புற துறையின் (Agriculture & Rural Initiatives Department) முதன்மை மேலாளர் அருண்குமாரிடம் பேசினோம். அவர், "31.03.2017 வரை 17 மாவட்டங்கள் மட்டுமே அணாவாரிச் சான்றிதழை வழங்கியிருந்தன. அதனால்தான் RBI-யின் காலக்கெடுவை 10.07.2017 வரை நீட்டித்தது. ஆனால் முன்பே எல்லா மாவட்டங்களிலும் அணாவாரிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டன. மாவட்டங்கள் அணாவாரிச் சான்றிதழ் வழங்கியபிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குச் சென்று கடன் மறுசீரமைப்பிற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கடன் மறுசீரமைப்பிற்குக் கடைசி நாள் 10.07.2017 தான். தவிர எல்லா மாவட்ட முன்னோடி வங்கிகளுக்கும், RBI வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்குத் தெரியாது எனச் சொல்வது சரியில்லை” என்றார்.
நன்றி
விகடன்

No comments:

Post a Comment