இப்போது கடைகளில் அதிகமாக விற்பனையாகும் குழந்தைகளுக்கான பொருட்களில், தோள்களில் குழந்தைகளை லாவகமாக மாட்டும் பெல்ட்கள் அடங்கிய தோள் பைகள்(Baby Carry Sling) மற்றும் குழந்தைகளை உட்கார வைத்து கைகளால் தள்ளிக் கொண்டு போகும் சிறியதள்ளு வண்டி(Baby Stroller) போன்றவை மிக முக்கியமானவை.
எங்கள் வீட்டில் என் மனைவி வெளியே செல்லும் போது பெரிய மகன் மற்றும் என் இளைய மகன் தனிஷ்ஐ இப்படி தூக்கி செல்வது வழக்கம்.
நகரங்களில் மாலையில் சாலையின் இரு பக்கங்களிலும் இந்த வண்டிகளில் குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு போகும் தாய்மார்கள் அதிகம். அந்த வண்டியில் குழந்தையானது கொலுவில் வைக்கப்பட்ட பொம்மை போல் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதைச் சுற்றி கயறுகளால் கட்டியது போல் பெல்ட்டுகள் மாட்டப்பட்டு இருக்கும். அந்த தள்ளுவண்டியும் பூ, பலூன், மணி போன்ற விளையாட்டு பொருட்கள் ஏதாவது ஒன்று கட்டபட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். எனக்கு அந்த குழந்தையை பார்க்கும் போது பரிதாபமாக தான் தோன்றும். காரணம் அந்த குழந்தையின் முகத்தில் சிரிப்பை பார்க்கமுடியாது. மாறாக திருவிழாக் கூட்டதில் வழி தெரியாமல் தத்தளிக்கும் குழந்தைப் போல் அதன் கண்கள் மிரளும். வழியில் வருவோரையும், போவோரையும் ஒரு பயம் கலந்த பார்வையுடன் தான் பார்க்கும். அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் சர்வசாதரணமாக அந்த குழந்தையின் தாய் அந்த வண்டியை தள்ளிக்கொண்டு போவார். நமது சாலைகளை சொல்ல வேண்டியது இல்லை, அந்தஅளவு பளபளப்பாக இருக்கும். ஒரு சிறியகல்லின் மீது அந்தவண்டி ஏறினால் போதும் மொத்தவண்டியும் அதிரும், அதனுடன் சேர்ந்து குழந்தையும் ஒரு ஆட்டம் போடும்.
இவ்வாறு குழந்தைகளை அழைத்து செல்லும் அம்மாக்களை எங்க கிளம்பிட்டீங்க? என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதிலைக் கேட்டால் சிரிப்பதா? அல்லது அந்த குழந்தையின் நிலையை பார்த்து வருத்தபடுவதா? என்று நமக்கே தெரியாது. தினமும் நடைப்பயிற்ச்சி செய்தால் உடம்புக்கு நல்லது என்று மருத்துவர் கூறினார், அதனால் தான் மாலையில் தினமும் இவ்வாறு குழந்தையுடன் நடக்கிறேன் என்று பதில் தருவார். அதோடு குழந்தையும் எப்போதும் வீட்டில் இருப்பதால் அதற்கும் ஒரு மாறுதலுக்காக வெளியில் அழைத்து வந்தேன் என்று சொல்வார். ரெம்ப நல்லவிசயம் தான். ஆனால் உடம்பு குறைவதற்காக நடக்கிறோம் என்றால் குழந்தையை தூக்கி கொண்டு நடந்தால் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே உடம்பு குறையும். அது மட்டும் அல்லாது அந்த குழந்தையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் இயற்கையை ரசிக்கும். நடைப்பயிற்ச்சி மேற்கொள்ளும் போது நமது உடலின் எடையை கால்கள் தாங்க வேண்டும். ஆனால் இவர்கள் குழந்தையை தாங்கும் வண்டியின் மீது முழு எடையையும் கொடுத்து விட்டு, அந்த வண்டியின் சொல்படி நடப்பார்கள். அதற்கு நடைப்பயிற்ச்சி என்று ஒரு பெயரும் வைத்து விடுவார்கள்.
நாம் வெளியில் நடந்து போகும்போது ஏதாவது ஒன்றின் மேல் தடுக்கினாலோ! அல்லது ஒரு பயங்கர சத்தத்தினால் தடுமாறினாலோ, நாம் எப்படி பக்கத்தில் உள்ளவர்களின் துணையை நாடுகிறோம் அல்லது அவர்களை கட்டிபிடித்து கொள்கிறோம், அதேப்போல் தான் குழந்தைகளும். எந்த வித ஆபத்து வந்தாலும் நாம் ஒருவரின் அரவணைப்பில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் அது சிரித்துக் கொண்டே இருக்கும். ஒரு அதிர்வோ, அல்லது சத்தமோ கேட்டால் அம்மாவை இறுக கட்டி, முகத்தை மார்பில் புதைத்து கொள்ளும். பின்பு சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு வந்து விடும். இது குழந்தைகளின் இயல்பு.
எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது, எனது அம்மா என்னை தோளில் தூக்கி சுமந்த நாட்கள். என்னை அவ்வாறு தூக்கி செல்லும் போது அனைவராலும் கிண்டல் செய்யப்பட்டது கூட எனக்கு மறக்கவில்லை. அவ்வாறு எழு, எட்டு வயது இருக்கும் போது கூட என்னை எனது அம்மா வெளியில் செல்லும் போது தூக்கி கொண்டு தான் போவார்கள். இத்தனைக்கும் நான் எங்கள் வீட்டில் தனியாக பிறந்து வளர்ந்தவன் கிடையாது. இது எனது வீட்டில் நடக்கும் அதிசயம் என்று நான் சொல்ல வரவில்லை. பெரும்பாலான கிராமத்து நன்பர்கள் அனுபவித்த ஒன்றாக தான் இருக்கும். ஆனால் ஒரு குழந்தை வைத்திருக்கும் இப்போதைய தாய்மார்களோ, அந்த குழந்தையை சுமக்க தள்ளுவண்டி வைத்திருப்பது தான் பரிதாபம். எங்கள் வீட்டில் என் மனைவி வெளியே செல்லும் போதுஎன் இளைய மகன் தனிஷ்ஐ இப்படி தொக்கி செல்வது வழக்கம்.
எங்கள் உறவுக்காரர் ஒருவர் இருக்கிறார். அவர் மது அருந்தினால் அமைதியாக வந்து தூங்குவது கிடையாது. வழியில் வருவோர் மற்றும் போவோரை கெட்டவார்த்தைகள் சொல்லி வம்புசண்டைக்கு இழுப்பது தான் அவருடைய வழக்கம். ஆனால் அவரும் ஒருவரின் குரலைக் கேட்டால் பெட்டி பாம்பாக அட்ங்கி போய், அமைதியாக வீட்டிற்குள் தூங்க சென்று விடுவார். அது யாருடைய குரல் என்றால் அவரை சிறு வயதில் தூக்கி வளர்த்த அவருடைய அக்காவின் குரல் தான். அந்த அளவுக்கு அவரின் மேல் மதிப்பு வைத்திருந்தார் எனது உறவுக்காரர். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் நம் மீது சிறுவயதில் ஒருவர் காட்டும் அக்கறை வாழும் நாள் முழுவதும் நமக்கு மறப்பதில்லை. அந்த ஒருவரின் மீது மதிப்பும், மரியாதையும் கூடுகிறது என்பதே உண்மை.
ஒரு நாள் நான் இருசக்கர வாகனத்தில் அல் அமீன் நகர்லிருந்து பெரியார் செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது வண்டிக்கு முன்னால் ஒரு தம்பதிகள் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தார்கள். அப்போது எனது பார்வை அந்த குழந்தையின் மீது திரும்பியது. அந்த குழந்தை முகம் மிகுந்த இறுக்கத்துடன் அதன் பிடி தளர்ந்தது போல் எனக்கு காட்சியளித்தது. உடனே அந்த அம்மாவை பார்த்தேன். அவர்கள் ஏதோ தூக்ககலக்கத்தில் இருப்பது போல் கண்கள் சுழன்றது. ஒரு கையால் தனது கணவனின் தோளை இறுக்கியபடி இருந்தார். அந்த அம்மாவின் கவனம் சிறிதும் குழந்தையின் மீது இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. பின்னால் இருப்பவர்களில் நிலைமையை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த அம்மாவின் கணவர் வண்டியை அறுபது மைல்களுக்கு மேல் வேகமாக செலுத்தினார். ஒரு கட்டத்தில் என்னால் குழந்தையின் நிலைமையை பார்க்க முடியவில்லை. அது விழுந்து விடுவது போலவே எனக்கு தோன்றியது. அதனால் எனது வண்டியை வேகமாக செலுத்தி அவரிடம் வண்டியை நிறுத்த சைகை செய்தேன். அவரும் உடனே வண்டியை ஓரமாக நிறுத்தினார். அவரிடம் குழந்தையை பற்றி சொன்னேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே எனது மனைவி குழந்தையை மார்புடன் சேப்டி பெல்டால்(Baby Carry Sling) கட்டியுள்ளார் என்று அவர் மனைவியை சுட்டி காட்டினார். அப்போது தான் நானும் கவனித்தேன், கங்காரு தனது வயற்றில் உள்ள பையில் குழந்தையை சுமப்பது போல அந்த பெண்மணியும் தனது மார்புடன் அந்த குழந்தையை சேப்டி பெல்டால் கட்டியிருந்தார்.
எந்த ஒரு தாய்க்கும் தனது குழந்தையை தூக்கி சுமக்க வலு இல்லாமல் கடவுள் படைப்பது இல்லை. அப்படி சொல்லுவதற்கு காரணங்கள் இருந்தால், அது தாய்பால் கொடுப்பதற்கு நாம் சொல்லும் காரணங்கள் போல் தான் அமையுமே தவிர மற்றவை ஒன்றும் கிடையாது. தாவரங்களை பாருங்கள், அவைகளின் கனிகளையும், மலர்களையும் தாங்க முடியாமல் கீழே முறிந்து விழுந்து விடுவது கிடையாது.
"மனமிருந்தால் மார்க்கமுண்டு"
நான் இந்த பதிவை எழுதுவதற்கு காரணம், எனது நன்பர் ஒருவர் ஊருக்கு பார்சல் அனுப்ப வேண்டும் அதற்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் நீயும் வா? என்று என்னை அழைத்தார். சரி நன்பனின் அழைப்பை ஏற்று, என்ன பொருள் வாங்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவன் தனது மனைவி அலைபேசியில் பேசும் போது குழந்தையை வைத்து தள்ளுவதற்காக ஒரு வண்டி வாங்கி அனுப்பி வைக்க சொன்னாள், உனக்கு தான் தெரியுமே அதை பற்றியுள்ள செய்திகளை இனையதளத்தில் இருந்தால் சேகரித்து சொல்லு என்றான். எனது நன்பர் ஒன்றும் ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் கோமான் கிடையாது, ஒரு சராசரி கட்டிட தொழிலாளி. அவனுடைய மனைவி குடியிருக்கும் ஊர் ஒன்றும் அடையாறு பீச்ரோடு இல்லை, நமது மாவட்டத்தில் உள்ள பதினேழு பட்டியில் அதுவும் ஒரு பட்டி. இதற்கு மேலும் நான் அவனுக்கு அந்த வண்டியை வாங்கி கொடுத்திருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
குறிப்பு: இவை அனைத்தும் நாகரீகம் என்ற பெயரில் நடமாடும் மாயைகள். அவைகளில் நம்மில் சில பேர்களும் அறிந்தோ, அறியாமலோ விழுந்து விடுகிறோம். எது நாகரீகம் என்பதை முழுமையாக அடையாளம் காணவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.
No comments:
Post a Comment