Wednesday 21 March 2012

சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு கூறும் உபதேசம் ....

மார்ச் மாதம் தொடங்கியாச்சு! லீவு விட்டாச்சு! சுற்றுலா செல்ல அனைவரும் கிளம்பி கொண்டிருக்கும் நேரத்தில் உங்களுக்காகவே இந்த இடுகையை எழுதுகிறேன். சுற்றுலா செல்லப்போகும் அனைவருக்கும் இந்த இடுகை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 

1) தமிழகத்தைப் பொறுத்தவரை வெயில் நம்மளை வாட்டி எடுக்கப் போகிறது. எனவே பெரும்பாலும் மக்கள் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிரான இடங்களையும் தண்ணீர் அதிகம் இருக்கும் இடங்களுக்கும் செல்லத் தயாராகிக் கொண்டிருப்பார்கள்.  இந்த இடங்களுக்குச் செல்ல இப்போது டிக்கெட் கிடைப்பதெல்லாம் மிகவும் சிரமம். நீங்களும் இது போன்ற இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் இப்போதே முன்பதிவு செய்துவிடுங்கள். 


2)  என்னைப் பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று பேர் சுற்றுலா செல்வதற்கு பதிலாக ஒரு கூட்டமாக செல்வதே நல்லது. கூட்டமாக செல்வது நமக்கு பாதுகாப்பு தருவதோடு மட்டுமல்லாமல் சில செலவுகள் குறையும். மேலும் நம் உறவினர்களோடு வாழ்க்கையின் சந்தோஷ தருணங்களை அனுபவிக்கவும் முடியும். என்ன சில செலவுகள் கூடும், அதையெல்லாம் பார்த்தால் முடியுமா! குடும்பத்தோடு சந்தோஷமாக போயிட்டுவாருங்கள்.


3)  நீங்கள் எங்கு சென்றாலும் சரி உங்களுக்கு ஏதாவது வியாதி இருந்தால் மருத்துவரை பார்த்துவிட்டு செல்வது மிகவும் அவசியம்.  உங்களுக்குத் தேவையான மாத்திரைகளை சுற்றுலா செல்லும் முன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் உங்கள் வீட்டுத் தண்ணீரையும் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். பல நாட்கள் சுற்றுலா செல்லப் போகிறீர்கள் என்றால் தண்ணீரை எடுத்துச் செல்வது முடியாத காரியமாகும், அச்சமயங்களில் மினரல் வாட்டரை பயன்படுத்துங்கள்.


4)  அப்புறம் நம்து சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆட்டோக்காரர்கள். அவர்களை சமாளிப்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு கலை. அவர்கள் சொல்லும் விலை நாம் நினைப்பதை விட இரும்டங்காக இருக்கும். கேட்டால் டிராபிக், ஒன்வே, பெட்ரோல் விலை ஏற்றம் என்று பெரிய அறிக்கையே வாசிப்பார்கள். முடிந்தவரை அவர்களை நாம் நினைத்த விலைக்கு ஒத்துக்கொள்ளவையுங்கள். இல்லையென்றால் வேறு ஆட்டோவா இல்லை? அடுத்த ஆட்டோவை பாருங்க பாஸ்!


5)  டிராவல் ஏஜெண்ஸிஸ் - நம்மளை குறிவைத்து மிகவும் பிரமாதமாக விளம்பரம் எல்லாம் செய்வார்கள். ஆனால் போய்ப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. சில பேர் நன்றாக விளம்பரம் செய்துவிட்டு சுற்றுலாவின் போது அவர்களின் சுயரூபத்தை காட்டிவிடுவார்கள்.  சில நம்பிக்கையான டிராவல் ஏஜென்ஸிஸும் இருக்கின்றன. என்னைக் கேட்டால் பல பேரிடம் விசாரித்துவிட்டு சுற்றுலாவுக்கு புக் செய்வது நல்லது. சில ஏஜெண்டுகள் விள்ம்பரமே செய்யமாட்டார்கள், ஆனால் சுற்றுலா மிகவும் சிறப்பாக இருக்கும். நல்ல டிராவல் ஏஜெண்டுகளை கண்டுபிடிப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

6) சுற்றுலாத் துறையும் நமது சுற்றுலாவில் பங்கெடுக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் தமிழக சுற்றுலாத் துறையின் இணைய தளத்தைஅணுகலாம்.  இந்த தளத்தில் பிரபலாமான சுற்றுலாத் தளங்களைப் வீட்டில் இருந்தே பார்வையிட வசதியாக virtual tour  என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் இந்த தளத்தில் நமக்குத் தேவையான அனைத்து தகவல்கள்,  அரசின் சுற்றுலா தொடர்பான சேவைகள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.



7) சரி. நாம் பெரும்பாலும் நமக்குப் பழக்கப்படாத இடங்களுக்கே சுற்றுலா செல்வோம். அது மாதிரியான நேரங்களில் அங்கு இருக்கும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அந்த இடத்தைப் பற்றி கேட்டறிய வேண்டும்.  அப்படி யாரும் இல்லையென்றால் மேலே சொன்னது போல பல இணைய தளங்கள் நமக்கு உதவ காத்திருக்கின்றன. இது போன்று அறிந்து கொள்வதால் அந்த இடத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளமுடியும், சுற்றுலாவும் சுவாரசியமானதாக இருக்கும்.


8) அப்புறம் நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்ட ஒன்று, ரயிலில் சென்றால் மற்றவர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களை உண்ணாதீர்கள். முக்கியாமாக பிஸ்கெட் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். இப்போது திருடர்கள் வேறு ஏதாவது வழியைக் கண்டுபிடித்திருப்பார்கள்.  இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருங்கள். வருமுன் காப்போம்.


9) ஜாக்கிரதை - சில சுற்றுலாத் தளங்களில் உங்களை மகிழ்விக்க சில அபாயகரமான(த்ரில்லான) விளையாட்டுகள் இருக்கும். உதாரணமாக paragliding, motorboat, roller coster போன்றவை.  இது போன்றவைகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறவில்லை, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் - உயிர் மேல் ஆசையிருந்தால்.


10) சரணாலயங்கள், வனவிலங்கு பூங்காக்களும் நம் சுற்றுலாவில் இடம்பெற வாய்ப்புண்டு.  அது போன்ற இடங்களுக்கு செல்லும் போது விலங்குகளிடம் உங்கள் குறும்பை காட்டாதீர்கள். அவையும் உயிரினங்கள் தான், பேச முடியா உயிரினங்கள். அழிவில் இருக்கும் பல விலங்குகள் சரணாலயங்களில்தான் பெரிதும் காணப்படுகின்றன. பல வேலைகளுக்காக அவைகளைச் சார்ந்திருக்கும் நாம் அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும்


முக்கிய்மாக சுற்றுலாத் தளங்களை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள், சுற்றுலாத் தளங்களை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள். நம் நாட்டின் மீது வெளிநாட்டவர் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் நமது சுற்றுலாத் தளங்களின் தூய்மையில்தான் இருக்கிறது.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment