Sunday, 20 October 2013

நாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோமே!!நாவல்பழம்,நாகப்பழம்,நவாப்பழம் என்று பல பெயர்களில் இந்த பழம் அழைக்கப்படும்.
பழங்களில் அதிக மருத்துவ குணம் நிறைந்தது நாவல்பழம்தமிழ் இலக்கியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் இடம் பெற்ற பழம் இது..  புராண காலம் முதல் சுட்டப்பழம் என புகழ்பெற்ற நாவல்பழங்கள் ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவு உற்பத்தியாகி விற்பனைக்கு வரும்.பெங்களூர், கோயம்புத்தூர், மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு  நாவல் பழங்கள் வரும்.
பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து, உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது.  இந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம். 

நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன.
ஏரிக் கரைகளிலும், கண்மாய், குளக் கரையிலும் நாவல் மரம் பெரியதாக வளர்ந்திருக்கும்.  தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவற்பழம் பெரியதாகவும், அதிகமாகவும் விளைவிக்கப் படுகிறது.
நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை.
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.  இதில் சிறப்பம்சமாக, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது.
நாவல் பழத்தின் பயன்கள்...
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.  மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
தூக்கமின்றி  அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும்,  உடல் சூட்டைத் தணிக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் கொட்டை
நாவல் பழத்தின் கொட்டைகளை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.  சர்க்கரை நோய் கட்டுப்படும்.   சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு ஆளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம்.
நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்டது.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  நாற்பது வயதை அடைந்தவர்கள் அனைவரும்  நாவல் கொட்டைச்  சூரணம் சாப்பிடுவது நல்லது.
நாவல் கொட்டையை லேசாக வறுத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து டி, காஃபி க்கு பதிலாக அருந்தலாம்.   இன்றும் மலைவாழ் மக்கள் நாவல் கொட்டையை டீ, காஃபிக்கு பதிலாக அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நாவல் இலை..
நாவல் கொழுந்து இலைச்சாறு     – 1 ஸ்பூன்
தோல் நீக்கிய ஏலக்காய் அரிசி    – 4
இலவங்கப்பட்டை தூள்    – 1/2 ஸ்பூன்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.
நாவல் பட்டை..
100 ஆண்டுகள் பழமையான நாவல் மரப் பட்டை காயகற்ப மருந்து செய்ய பயன்படுத்தப் படுகிறது.நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.
எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில்  அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment