Tuesday 25 March 2014

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் ஏர்வாடி பாதுஷாநாயகம் பற்றிய வரலாற்று பார்வை...

தமிழகக் கடற்கரை நெடுகிலும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்ததையும், அவர்கள் இஸ்லாமிய நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகியதையும் ‘துஹ்ஃபதுல் முஜாஹிதீன்’ என்ற அரபு மொழி நூலில் அதன் ஆசிரியர் ஷேக் ஜியாவுதீன் என்பவர் பறைசாற்றுகிறார். பழவேற்காடு, கோவளம், பரங்கிப் பேட்டை, தொண்டி, பெரிய பட்டணம், பௌத்திர மாணிக்கப் பட்டணம், காயல்பட்டிணம், கோட்டாறு, குளச்சல் போன்ற நகரங்களில் முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே நிலைபெற்று விட்டன. 


தமிழகத்தில் முதல் பள்ளி வாசல்..
தமிழகத்தில் முதல் பள்ளி வாசல் கி.பி. 738 -ஆம் ஆண்டு ஹாஜி. அப்துல்லா இப்னு அன்வர் என்பவரால் கட்டப்பட்டது. அப் பள்ளிவாசல் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ளது. ‘கல்லுப் பள்ளி’ என்று இன்றளவும் அது அழைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் அரசாட்சி ஏற்படுத்திய வகையில் முகமதுபின் காசிம், சிந்து – முல்தான் பகுதிகளில் கி.பி. 712-இல் அராபியர் ஆட்சி ஏற்படுத்தியதையும், முகமது கோரியின் முயற்சிகளின் பயனாக கி.பி. 1260-இல் அடிமை வம்ச ஆட்சி குத்புதீன் ஐபக் தலைமையில் ஏற்பட்டதையும், தென்னகத்தில் மாலிக் கபூர் படையெடுப்பிற்குப் பிறகு முஸ்லிம்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதையும், மாபர் எனப்படும் மதுரை சுல்தானியத்தைப் பற்றியும் வரலாறு பகர்கிறது. ஆனால், வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்யும் போது வெளிப்படும் உண்மையென்னவென்றால், தமிழகத்தில் முதன் முதலில் அராபியர் ஆட்சி ஏற்படுத்திய முஸ்லிம் மன்னர், சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ்வே ஆவார்.

பிறப்பு..
சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலி) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்.

சமயப் பிரச்சாரம்.. 
மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார். மார்க்கப் பணி சிறப்புடன் செய்ய தமது நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின் உதவியை நாடினர்.

‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.

இந்திய வருகை..
முதல் கட்டமாக கி.பி.1163-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்.அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து கி.பி.1185 ம் ஆண்டு மத்தியில் இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். 

இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.பிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.

அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.குலசேகரப் பாண்டியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட நெல்லைப் பகுதியில் சமயப் பிரச்சாரம் செய்து வந்த சுல்தான் சையது இப்ராஹிம்(வலி) அவர்களை எதிர்த்து மதுரையை ஆண்ட திருப்பாண்டியன் நெல்லையைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வரப் போர் தொடுத்தான்.

அப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.

இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.
இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.

சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார். அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார். இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!

இறப்பு:

தமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் 1207ம் ஆண்டில் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 



ஏர்வாடி தர்கா..
மதினா மாநகரின் ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப் பட்டது.இச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து – முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக் காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. 

மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில்சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (ஒலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். இங்கு அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அழத்தாகிர் (ஒலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.


நோய் தீர்க்கும் தலம்  : ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது என்கிறது வரலாறு. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார்.  மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.



சந்தனக்கூடு திருவிழா: சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும்.சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன என்பது அங்குள்ள முல்லாகளின்  கூற்று. ஆண்டு தோறும் நடைபெறும் ‘உருஸ்’ நிகழ்ச்சியில் முஸ்லிம்களோடு இந்துக்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்பதைப் பார்க்கலாம். 


இதுபோல் எழுதப்படாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வாளர்கள்,வரலாற்று முனைவர்கள்  ஆய்வு மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று பணிவுன்புடன் கேட்டு கொள்கிறேன்.

References:
1.ஷேக் ஜியாவுதீன், துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் (அரபி)
2.மு.முத்தலிபு (காரைக்குடி )
3ஹுஸைனி S.A.Q. The History of the Pandiyan country
4.சுல்தான் சையது இப்ராஹிம் வெளியிட்ட நாணயங்கள்.
5.காதிர் உசேன்கான், South India Musalmans. Madras:1910
6.வண்ணக் களஞ்சிய புலவர், ‘தீன் விளக்கம்’ காப்பியம்.
7.தாரா சந்து, Influence of Islam on Indian culture. Allahabad:1936
8 ம.இராச சேகர தங்கமணி (பாண்டிய வரலாறு, 1978, ப. 432) 
*
நன்றி: குர்ஆனின் குரல் (ஆகஸ்ட், 1997)
           மு.முத்தலிபு (காரைக்குடி )
           மௌலவி  சாகுல் ஹமீது ,ஏர்வாடி தர்ஹா.

ஆக்கம் & தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment