Saturday, 8 March 2014

இன்று சர்வதேச மகளிர் தினம்!! இந்த மகளிர் தின வரலாறு பற்றிய சிறப்பு பார்வை...

images6AH4BMKE



ஆணைவிட மனவுறுதி உடலுறுதி கொண்ட கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும் இன்றைய நாளில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் " எஙகள் டிஸ்க்கவர் இன் இஸ்லாம் ” மகிழ்ச்சியடைகின்றது.

மகளிர் தின வரலாறு..

1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 8, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள் முடிந்து விட்டன.

1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்ட காரர்களை சமாதான படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான். அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது.

அதேபோல் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தின் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிந்த பெண் ஊழியர்கள் தமது வேலை நேரத்தை 12 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துமாறும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் சேவை நிலைமைகளை மேம்படுத்துமாறும், வாக்குரிமையைப்பெறவும் 1857 மார்ச் 8ம் திகதி இப்போராட்டம் நடத்தப்பட்டது. அதே சமயம் ரஷ;யாவின் ‘சார்’ மன்னனின் மாளிகையைச் சுற்றி வளைத்த பெண்கள் தமது கணவன்மாரை போர்களத்திலிருந்து தமது வீடுகளுக்குத் திருப்பி அழைத்துத் தருமாறும், உண்பதற்கு பாண் வழங்குமாறும் கோரி மார்ச் 08ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது. இத்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர். பெண்களின் போராட்டம் அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார்.


1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. அதில் ஜெர்மனி சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் ‘மகளிர் அலுவலக’த் தலைவராக இருந்த க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது அவரது யோசனை. இந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக இவரது யோசனையை வரவேற்றனர்.

பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர்.

சுமார் ஒரு மில்லியன் பெண்களும் ஆண்களுமாக பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஒரு பேரணியாகத் திரண்டு பிரசாரத்திலும் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக மார்ச் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏற்பட்ட ‘முக்கோண தீ விபத்து’ 140 உழைக்கும் மகளிரின் உயிரைப் பறித்தது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்தக் கொடும் சம்பவம் பெண்களின் உழைக்கும் சூழலைப் பற்றிய மோசமான நிலையை உலகுக்கு அறிவித்தது. இதே ஆண்டில் உழைக்கும் மகளிர் Bread and Roses என்ற போராட்டமும் நடத்தினர். இதில் பங்கு பெற்ற மகளிர் We want Bread but we want roses, too என்று எழுதப்பட்ட கொடிகளை தாங்கி ஊர்வலம் சென்றனர்.
இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர்.

பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன.


1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது. சமீபகாலமாக ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.


பெண்கள் தினம் சொல்லும் செய்தி என்ன...?

பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளைப் பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் இந்நாளில் நன்றியுடன் நினைத்து சிறப்புச் செய்ய வேண்டும். கடந்த கால வரலாற்றை அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலரும் கற்று ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். அன்பிற்கு அடையாளமாகவும், தெய்வங்களாகவும், தெய்வத் தன்மை சூட்டப்பட்டாலும் பெண் சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்தியச் சமூகம் வைத்திருக்கிறது என்பது வலராற்று உண்மை.

கல்வி வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் ஏற்படுதிய பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கெதிரான கொடுமைகளை கண்டு அயர்ந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப்போம்’ என்பதுதான் இந்த ஆண்டு மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகத்திற்கு தெரிவிக்கும் செய்தி.

பெண்ணே நீ உனக்கென வாழ்வது எப்போது...
உண்மையான மாற்றம் வரும் அப்போது.


ஆக்கம் மற்றும் தொகுப்பு  : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment