Tuesday 1 April 2014

முத்துபேட்டை (அலையாத்தி காடுகள்,ஷேக்தாவூத் ஆண்டவர் தர்கா) ஊர் பற்றிய வரலாறு !! ஒரு தவகல்

முன்னூறு ஆண்டுகளுக்கு  முன்பு முத்துபேட்டைக்கு நமது முன்னோர்கள், சூட்டிய  முழு முதற்பெயர்தான் இது,தமிழகத்தின்   கீழ்த்திசையில் நீண்டு,பரந்து,விரிந்து நீரினால் நிறைந்து  சூழ்ந்திருக்கும் வாங்கக்கடலை  ஒட்டி வடக்கே சுமார் 3 கிலோமீட்டர்  தூரத்தில் இருக்கின்ற "பேட்டை" எனும் இடம்தான் நமது முத்துபேட்டையின் துவக்க கால ஊராகும்,

கடலில் மீன் பிடிப்பது,முத்துகுளிப்பது பறவைகளை வேட்டையாடுவது,அவற்றை விற்பது,வாங்குவது போன்ற செயல்கள் நடந்து வந்ததால் அது பேட்டையானது,இந்த பேட்டையின் வடக்கே,இப்போதைய ஊரின் நடுபகுதி பெரும் காடாக இருந்தது,

இங்கே துறவிகள் தவம் புரிந்து வந்தனர் அதனால் "துறவிகள்காடு" என்று அழைத்தார்கள்,
காலங்கள் ஓடுகின்றன,தலைமுறைகள் மாறுகின்றன,மக்கள் கூட்டம் பெருக பெருக ஊரின் மத்திய பகுதியான துறவிகாடுகள் அழிக்கப்பட்டு,குடியேற்ற இடங்களாக மாற்றப்பட்டு,வீடுகள் கட்டினர்,வணிக தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த இடம்,தங்கி வாழ்வதற்கும் ஏற்ற வகையில் மாறியது.

தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர்களிடம் தமிழகத்தின் காஷ்மீர் எது என்று கேட்டால் சட்டென்று முத்துப்பேட்டை என்று சொல்லி விடுவார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியான முத்துப்பேட்டை, எப்போதும் போர்க்களம் போல் இருக்கிறது. முத்துப்பேட்டை, காஷ்மீர் என்றால் அதற்கு அருகில் உள்ள ஜாம்புவானோடை ஊராட்சி ஜம்மு போல இருக்கிறது. இரண்டு ஊரையும் பிரிக்கும் கோரையாறு இந்தப் போர்க்களத்திற்குச் சாட்சியாக மெல்ல சலசலத்துக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் முஸ்லிம்கள் வசிக்க ஆரம்பித்தர்கள்,இந்த மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் பரவலாக வாழும் ஊர்களுள் ஒன்றாக முத்துபேட்டை மாறி இருந்தாலும்,அந்த கால கட்டத்தில் இறைவனை வணங்குவதற்காக பேட்டையில் ஒரு பள்ளிவாசல் கூரை குடிசையாக கட்டப்பட்டது,அதுவே முத்துபேட்டையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும்,அப்பகுதிக்கு துறவி காடு என்று பெயர் ஏற்பட்டு இப்பொழுது "துறைகாடு" என்று மாறிவிட்டது. 

தற்போதைய முத்துபேட்டை;

கடந்த 2011 ஆம்  ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முத்துபேட்டையின் மக்கள்தொகை 40,000 ஆகும்,இதில் ஆண்கள் 47%  பெண்கள் 53% ஆகும்,முத்துபேட்டை மக்களின் சராசரி படிப்பறிவு 71% ஆகும்,இது நாட்டின் படிப்பறிவை விட அதிகம் ஆகும், ஆண்களின்  படிப்பறிவு 78%,  பெண்களின்  படிப்பறிவு 65% ஆகும்.இங்குள்ள காயலில் (உப்பங்கழி) 73 வகையான மீன்கள் வாழ்கின்றன.  நவம்பர் – டிசம்பர் மாதங்களில் ஏராளமான நீர்ப் பறைவகளை இங்கு வந்து சங்கமிக்கின்றன.


ஜாம்பவானோடை ஷேக்தாவூத் ஆண்டவர் தர்கா..

முத்துப்பேட்டை ஜாம்பவானோடையில் உள்ள ஷேக்தாவூத் ஆண்டவர் தர்கா 712 ஆண்டுகள் பழைமையானது. இந்த தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்யும் சிறப்புடையது.இத்தர்கா, மராட்டியர் கட்டிட கலைப்பாணியில் உருவாக்கப்பட்டது.மனநலன் பாதிக்கப்பட்டவர்கள், மதமாச்சரியமின்றி இந்த தர்காவில் தங்கி குணமடைந்து வருவது தனிச்சிறப்பு.ஆண்டுதோறும் நடைபெறும் பெரிய கந்தூரி விழாவின் தொடக்கமாக புனிதக் கொடியேற்றும் விழா ஜுமதா அவ்வல் 1-ம் தேதி நடைபெரும் .
மதநல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, விஸ்வகர்ம சங்கத்தினர் ஆண்டுதோறும் கந்தூரி விழாவுக்கான புனிதக் கொடியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கொடியேற்றம் நடைபெற்ற தினத்திலிருந்து தினசரி சிறப்பு தொழுகைகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறும்.

அலையாத்தி காடுகள்...
முத்துபேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு "தேர்வுநிலை பேரூராட்சி" ஆகும், இது சென்னையில் இருந்து 360 கி.மி தொலைவில்,பட்டுக்கோட்டை அருகிலுள்ள உள்ளது. இங்கு  உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும்.  ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் வளர்கின்றன. கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, நசுவினி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு, மரைக்காகோரையாறு ஆகிய ஆறுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் எனப்படுகிறது. இங்கு வளரும் காடுகள் தான் அலையாத்தி காடுகள். கழுதை முள்ளி, நரிக்கண்டல், வெண்கடல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை, சுரப்புன்னை, குட்டை சுரப்புன்னை, மலட்டு சுரப்புன்னை, சோமுந்திரி, சோனரேசியா எபிடெலா உள்ளிட்ட மரங்கள் வளர்கின்றன. சாம்பல் நிறத்தில் இருக்கும் இம்மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை. வேர்கள் மூலம் சுவாசிக்கும் தன்மையுடைய அவி, சென்னியா, மெனரனா எனப்படும் தாவரம் முத்துப்பேட்டையில் உள்ள இந்த சதுப்பு நில காடுகளில்தான் உள்ளது. புவியியல் அமைப்பில் முக்கியமான ஈரப் பத நிலப்பகுதியாக முத்துபேட்டை அலையாத்தி காடுகள் குறிப்பிடப்படுகின்றன.

நாட்டில் உள்ள அலையாத்தி காடுகளில் 61 சதவீத காடுகள் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய லகூன் பகுதியில் 29,713 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ளது. அலையாத்தி காடுகளை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை போன்ற பகுதிகளில் இருந்து மீனவர்களின் படகு மூலம்தான் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும். 7 கிலோ மீட்டர் தொலைவு ஆற்றில் செல்லும்போது இருபுறமும் இருக்கும் அலையாத்தி காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும். பார்வை கோபுரங்களில் ஏறி லகூன் அழகை காணலாம். யாழ்பாணத்தான்கோரி, சீப் கார்னர், செல்லிமுனை பார்வை கோபுரங்கள், நடுவாய்க்கால், உப்புத்தோட்டம், வவ்வால் தோட்டம் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள்.
ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையில் அதிக எண்ணிக்கையிலானப் பறவைகள் இந்த பகுதிக்கு வருகின்றன. இப்பறவைகள் சைபீரியா, மத்திய ஆசியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் ஐரோப்பா போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வருகின்றன. மேலும் பூநாரை,செங்கால் நாரை, சிறவி, நீர்க்காகம் போன்ற நீர்ப் பறவைகளைக் குறிப்பிடலாம். கொக்கு, மீன்கொத்தி, நாரை போன்ற அழியும் தறுவாயில் உள்ள நீர்ப்பறவைகள் இப்பகுதியில் நிலையாக வசிக்கின்றன. முத்துப்பேட்டை நில பறவைகளான பருந்து, சிவப்பு வளைய பச்சைக் கிளிகள் மற்றும் புள்ளி புறா வகைகள் உள்ளன. முத்துப் பேட்டை சதுப்பு நிலக்காடுகளில் பாலுட்டி வகைகளான காட்டுப் பூனைகள், குறுகிய மூக்கு உள்ள பூசந்தின்னி வெளவ்வால்கள் காணப்படுகின்றன. கீப் கார்னர் செல்லி முனை, லகடன் கடல் முகத்துவாரம் சேத்குடா உப்புத் தேரோட்டம் ஆகியன இங்குள்ள அழகுமிகு பகுதிகள்.
சுனாமி பேரலையில் இருந்து முத்துப்பேட்டையை காப்பாற்றியது அலையாத்தி காடுகள்தான். திருவாரூர் மாவட்டத்தை இயற்கை கீற்றங்களில் இருந்து காக்க கூடிய அரணாகவும் அலையாத்திக் காடுகள் உள்ளன. சாம்புவானோடை படகு துறையில் இருந்து இருபுறமும் அலையாத்தி மரங்களை கொண்ட நீர்ப் பாதையில் சுமார் 6கீ.மீ தூரத்தை கடந்தால் கடல் முகத்துவாரத்தைக் காணமுடியும். இப்பாதையில் ஏராளமான திட்டுகள் குட்டித் தீவுகளாகக் காட்சி அளிப்பது அழகு.
சதுப்பு நிலக் காடுகளின் அழகைக் காண வரும் சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாற ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 162 மீட்டர் நீளத்திற்கு மரத்திலான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற அமைப்பு வேறு எந்த சதுப்பு நிலக் காடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஓய்விடத்திலிருந்து சதுப்பு நிலக் காடுகளைக் காணும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதி...
முத்துப்பேட்டையிலிருந்து  தஞ்சாவூர் 65 கீ.மீ. தொலைவிலும், திருவாரூர் 60 கீ.மீ தொலைவில் நாகப்பட்டினம் 70கீ.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, இதற்கு அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி 130 கீ.மீ, மற்றும்  மதுரை 180 கீ.மீ,ஆகும். நடுத்தர வசதியுள்ள விடுதிகள் பட்டுக்கோட்டை மற்றும்  முத்துப்பேட்டையிலும் நட்சத்திர விடுதிகள் திருவாரூர் தஞ்சாவூரிலும் அமைந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து முத்துப்பேட்டை செல்லலாம்.  மதுரைலிருந்து  காரைக்குடி, அறந்தாங்கி வழியாக பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து முத்துப்பேட்டை செல்லலாம். வேதாரண்யம்,  நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்தும்  முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. முத்துப்பேட்டையில் இருந்து  செல்ல படகு ஒன்றுக்கு (10 பேர் செல்லலாம்) ரூ.800 முதல் 1000 வரை வசூல் செய்யப்படுகிறது.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment