Friday, 4 April 2014

வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய விழிபுணர்வு கட்டுரை ...

ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். பலர் யாரோ வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏற நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நாளில் வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர். நகரப் பகுதிகளில் படித்தவர்கள் மத்தியில் வாக்களிப்பது என்பது குறைந்து வருகிறது.ஓட்டு என்பது வெறும் விரல் மை அல்ல; அது ஒரு பெருவெள்ளத்தின் சிறுதுளி.
உங்கள் ஓட்டு தான் உங்கள் தொகுதியின் எம்பியை, அடுத்த மத்திய அரசைத் தீர்மானிக்கப் போகிறது. ஆனால் வாக்களிக்கும் அந்த பெரும் உரிமையை நாம் சம்மந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து, அதன் பின் தர்க்கப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சிந்தித்துப் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறியே. அதைச்செய்ய ஒரு சிறிய வழிகாட்டியாகவே இக்கட்டுரையை எழுத விழைந்தேன்.
வரும் 24 ஏப்ரல் 2014 அன்று தமிழம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒரு குடிமகனாக நீங்கள் இந்தத் தேர்தலை எப்படி அணுக வேண்டும், உங்கள் வாக்கு யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு என்று முடிவு செய்யும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுவதே இதன் நோக்கம் மற்றும் எல்லை.
அதாவது யாரை ஆதரிக்க வேண்டும் என்று இது சொல்லித் தரப் போவதில்லை. எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே இதன் விவாதப் பொருள்.
முதலில் இது என்ன தேர்தல்? லோக்சபா தேர்தல். அதாவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல். இதன் பிரதான நோக்கங்கள் இரண்டு. ஒன்று உங்கள் மக்களவைத் தொகுதிக்கு எம்பியைத் தேர்ந்தெடுப்பது. இரண்டாவது அப்படி இந்தியா முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் பெரும்பாம்பான்மையினர் முடிவுப்படி ஓர் அரசையும், அமைச்சர்களையும், பிரதமரையும் தீர்மானிப்பது.
இதில் மக்களுக்கு நேரடியாய் வழங்கப்பட்டிருக்கும் உரிமை மக்களவைத் தொகுதிக்கான எம்பியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே. மற்றது மறைமுகம்.

தர்க்கப்படி தேர்தலை சந்திக்கும் எந்தக் கட்சியும் யார் பிரதமராகப் போகிறார் என்று அறிவிக்க வேண்டியதே இல்லை. கட்சியின் கொள்கைகளை மக்கள் முன்வைக்க வேண்டும், ஓட்டுக் கேட்கும் வேட்பாளர் மக்கள் நம்பிக்கைக்கு உரியவராய் இருக்க வேண்டும், அதுவே போதுமானது. சரியான (அல்லது அவரவர்க்கு உவப்பான) கொள்கை கொண்ட கட்சியை, தகுதியான வேட்பாளரை ஆதரித்தாலே திறமையான அரசு அமையும் என்பதுதான் நம்பிக்கை. நமது இந்திய அரசியல் சாசனம் இந்த bottom up approach-ஐத் தான் அறிவுறுத்துகிறது.
மாறாக தனி நபரை முன் வைப்பது சர்வாதிகாரத்துக்கே வழி வகுக்கும். மத்திய அரசு என்ற பிரம்மாண்ட எந்திரம் சரியாக ஓட அதன் அத்தனை எம்பிக்களும்தான் காரணமாய் இருக்க வேண்டுமே ஒழிய, ஒற்றை ஆசாமி மட்டும் பொறுப்பாக இருக்கலாகா. நாளை ஏதாவது காரணத்தால் அவர் அதைச் செய்ய முடியாமல் போனால் ஒட்டுமொத்த அமைப்பும் தோற்று நிற்கும். அதனால் நல்ல பிரதமரைத் தேர்ந்தெடுப்பதை விட நல்ல மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதே நீண்ட கால அடிப்படையில் அரசு செம்மையாகச் செயல்பட வழிவகுக்கும்.
இது தான் ஜனநாயகத்தின் அடிப்படை விதி. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இந்தியா எப்போதும் சித்தாந்தங்களின் வலிமையை விட முகங்களின் வசீகரத்தையே நம்பி வந்திருக்கிறது. மக்களுக்கு அஹிம்சையை விட காந்தியே முக்கியம். சோஸியலிசத்தை விட நேருவே பிடிக்கும். தலித்தியத்தை விட அம்பேத்கரே பிரதானம். திராவிடத்தை விட பெரியாரே வசீகரம். அந்தப் பழக்கத்தின் வழியாகவே கட்சிகள் பிரதமர் வேட்பாளரை முன்வைக்கின்றன.
சுதந்திரத்தின் போது இந்தியாவின் கல்வியறிவு வெறும் 12% தான் இருந்தது. அதனால் படிப்பறிவற்ற பாமர ஜனங்களே அரசைத் தேர்ந்தெடுக்கும் நிலைமை. அதனால் காங்கிரஸ் என்ற கட்சியின் கொள்கைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதைவிட நேரு, படேல் என்ற தலைவர்களைக் காட்டி ஓட்டு வாங்குவது எளிமையானதாக இருந்தது. அப்போதைய சூழலுக்கு அது வேண்டி இருந்தது.
ஆனால் இன்று இந்தியாவின் கல்வியறிவு 75%. அதாவது பெரும்பான்மையானோர் தான் தேந்தெடுக்கும் அரசின் கொள்கைகள் என்னவாய் இருக்க வேண்டும், எது தேசத்துக்கு நன்மை பயக்கும் என்று ஓரளவேனும் சிந்திக்கத் திராணி உள்ளவர்கள் (செய்கிறார்களா என்பது வேறு விஷயம்). அதை நிராகரித்து இப்போதும் அதே பாமர மோஸ்தரில் ஓர் ஆசாமியைக் காட்டி ஓட்டு கேட்பது கேலிக்கூத்தானது. தேசிய சிந்தனை வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாது பின்னிழுக்கும் வேலை.
சுருக்கமாகச் சொன்னால் மக்களவைத் தேர்தலில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கம் இரண்டாம் பட்சமே. நமக்குத் ஒத்துப்போகும் கொள்கைகளை முன் வைக்கும் கட்சிகளை, அவற்றிலிருந்தோ அல்லது வெளியேவோ தகுதியான மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பவதே சிந்திக்கக்கூடிய ஒரு நல்ல குடிமகன் இத்தேர்தலில் செய்யக்கூடிய விஷயம்.
0
நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மொத்தம் உறுப்பினர்கள் 543. இதில் பாதிக்கு மேலான எண்ணிக்கையில் (அதாவது 272) எம்பிக்கள் ஆதரவு இருந்தால்தான் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். இதில் தமிழகம் மற்றும் புதுவையின் சார்பாக அனுப்பப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டும் 40. அதாவது இந்தியாவுக்கான இந்த ஆட்டத்தின் செல்வாக்கில் கிட்டத்தட்ட 7.5% தமிழனின் கையில் தான் இருக்கிறது. ஒருவர் இந்த 40 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி விட்டு பிரதமர் கனவு காணும் போதே நம் வீரியம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பலத்தையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதனால் தான் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தைப் பற்றி பார்க்கப் புகும் முன் தேசிய அளவில் கட்சிகள் நிற்கும் நிலை (larger scheme of things) பற்றி கொஞ்சம் பார்க்கலாம். தமிழகத்துக்கான முடிவை ஒரு வாக்காளர் எடுக்கும் முன்பு இதையும் ஓரளவேனும் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் தற்போது தேர்தல் களத்தில் இருக்கும் கட்சிகள் / கூட்டணிகள்:
  1. பிஜேபி தலைமையிலான 22 கட்சிகள் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி
  2. காங்கிரஸின் 10 கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
  3. அதிமுக, கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், அஸாம் கண பரிஷத் உள்ளிட்ட 11 கட்சிகள் கொண்ட ஓர் இன்ஸ்டண்ட் மூன்றாம் அணி
  4. தனித்து நிற்கும் ஆம் ஆத்மி கட்சி (வேட்பாளர்களின் அதீத எண்ணிக்கை காரணமாக இதை ஒரு போட்டி முனையாகக் கொள்ள வேண்டியுள்ளது).
  5. இவை போக அந்தந்த மாநிலங்களில் தனியாக நிற்கும் திமுக, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மற்றும் உதிரிகள்.
இதில் அதிமுக, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மூன்றாவது அணியில் இருந்தாலும் இவற்றின் தலைவர்களான ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோருக்கு தனித்தனியே பிரதமர் கனவுகள் உண்டு. இது போக கூட்டணி சேராமல் நிற்கும் மாயாவதி (பகுஜன் சமாஜ்), மம்தா பேனர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோருக்கும் பிரதமர் ஆகும் ஆசை இருக்கிறது.
இப்படி பிரதமர் கனவு காண்பவர்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அது முடியாது போகும் போது பிரதான கட்சிகளான பிஜேபியையோ காங்கிரஸையோ ஆதரித்து விட வாய்ப்புண்டு. அதிக எம்பிக்கள் வைத்திருந்தால் துணைப் பிரதமர் பதவி கூடக் கேட்டுப் பார்ப்பார்கள். அதனால் மூன்றாவது அணியும் மிச்சமிருக்கும் கட்சிகளும் எந்த அளவுக்கு உண்மையாகவே பிஜேபிக்கும் காங்கிரஸுக்கும் மாற்றாய் ஓர் அரசை உருவாக்க முயல்கின்றன என்பது சொல்ல முடியாது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கான போட்டிக் கட்சிகள் என்ன என்பதைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட எல்லாக் கூட்டணிகளுமே முடிவாகிவிட்ட நிலையில் இந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் சுயேச்சைகள் தவிர்த்து ஆறு முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கு முன் தமிழக லோக்சபா தேர்தல்களில் இத்தனை பிரிவாக கட்சிகள் நின்றனவா என்பதே கேள்விக்குறி தான். ஆனால் இப்படி இவர்கள் பிரிந்து நிற்பதால் வாக்காளருக்குத் தான் யாரை ஆதரிப்பது என்ற கேள்விக்கான பதிலை அறிவதில் கூடுதல் சிக்கல் ஏற்படுகிறது.
  1. தனித்து நிற்கும் அதிமுக
  2. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திமுக கூட்டணி
  3. தனித்து நிற்கும் காங்கிரஸ்
  4. தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிஜேபி கூட்டணி
  5. 18 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்
  6. (இதுவரை) 8 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்திருக்கும் எளிய மக்கள் கட்சி என்ற ஆம் ஆத்மி கட்சி
இது தான் தற்போதைய தமிழக நிலவரம். வேட்பு மனு தாக்கல் முடிய நாட்கள் இருக்கும் சூழலில் இதில் சிறிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

இப்போது வாக்களிக்கும் முன் நம் முன் இருக்கும் கேள்விகளைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு தேர்வை எழுதும் மாணவனின் சிரத்தையுடன் இவற்றுக்கு பதில்களைக் கண்டடைந்தால் தான் நம்மால் சரியாக வாக்களிக்க இயலும்.
தேர்வு நம் எதிர்காலத்தை மட்டுமே தீர்மானிக்கும். தேர்தல் தேசத்தையே!
1) மாநிலமா தேசியமா?
தமிழர்கள் முன் இருக்கும் முதல் வேள்வியே இந்தத் தேர்தலில் தேசிய கட்சியை ஆதரிப்பதா மாநிலக் கட்சியை ஆதரிப்பதா என்பது தான். இது மக்களவைத் தேர்தல் என்பதால் பொதுவாய் தேசியக் கட்சிகளையே ஆதரிக்க வேண்டும் எனற பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். உண்மையில் அப்படி ஏதும் அவசியம் இல்லை.
மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளுக்கு மட்டும் தான் வாக்களிக்க வேண்டும் எனில் எந்த பிராந்தியக் கட்சியும் பாராளுமன்ற தேர்தல்களில் பங்கேற்கவே செய்யாதே! தேசியக் கட்சியோ பிராந்தியக் கட்சியோ அவர்களது பொதுவான கொள்கைகளும் அந்தத் தேர்தலுக்கென முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகளையும் கொண்டே நாம் முடிவெடுக்கவேண்டும். தேசிய கட்சியாக இருப்பது மாநிலக் கட்சியாக இருப்பதைக் காட்டிலும் எந்த வகையிலும் உயர்வானதில்லை. முடிவில் அவர்களின் கொள்கைகளே முக்கியமாகின்றன.
மாநில அளவில் மட்டுமில்லாது தேசிய அளவிலும் நம்மை பாதிக்கக்கூடிய விஷயங்களில் இக்கட்சிகளின் நிலைப்பாடினை ஆராய வேண்டும். உதாரணமாக ஈழப் பிரச்சனை, அணு உலைகள், இட ஒதுக்கீடு, அந்நிய நேரடி முதலீடு, எல்லைப் பிரச்னைகள், சிறுபான்மையினர் நலன். தேசத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல என்ன திட்டங்கள் வைத்திருக்கின்றன எனப் பார்க்க வேண்டும்.
அதனால் தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என்ற லேபிள் தாண்டி அவரவர்க்கு உவப்பான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள கட்சியை ஆதரிப்பதே சரியானது.
2) ஸ்திரத்தன்மை?
இம்முறை பிஜேபி ஒருபடி மேலே போய் ஐந்து ஆண்டுகள் நிலைக்கும் ஸ்திரமான ஆட்சி வேண்டுமானால் மோடிக்கே ஆதரவு அளியுங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறது. அதாவது காங்கிரஸுக்கோ மற்ற பிராந்தியக் கட்சிகளுக்கோ ஆதவரவளித்தால் தொங்கு நாடாளுமன்றம் வந்து மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சொல்ல முயல்கிறார்கள்.
மேலோட்டமாய்ப் பார்த்தால் இது சரி தான் என்பது போல் தோன்றினாலும் உண்மையில் இதுவும் உண்மை இல்லை. பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமார் 22 கட்சிகள் உள்ளன. அவர்களில் கணிசமானோர் விலகும் போது அதிலும் இதே பிரச்சனை வரும். இதைத் தவிர்க்கவே முடியாது (இப்போது திமுக விலகிய பின் மன் மோகன் சிங் அரசுக்கே அது தான் நிலை).
தவிர பிஜேபிக்குள்ளேயே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ் சிங் சௌகான் என மோடியின் செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லாத நிறைய அதிருப்தி ஆசாமிகள் இருக்கிறார்கள். நாளை அவர்கள் வெளியேறினாலோ ராஜினாமோ செய்தாலோ கூட இதே பிரச்சனை உண்டு.
அதனால் பிஜேபிக்கு வாக்களித்தால் மட்டுமே ஸ்திரமான அரசு அமையும் என்பது மோசடி பிரச்சாரம். அந்த விஷயத்தையே கணக்கில் கொள்ள வேண்டியவில்லை.
3)  நிராகரிப்பு அவசியம்
அடுத்து நாம் எதை / யாரை எதிர்க்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.
அதாவது எந்த சித்தாந்தத்தை அல்லது செயலை எதிர்க்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும். அது பிஜேபியின் மத வெறியாக இருக்கலாம் அல்லது காங்கிரஸின் ஊழலாக இருக்கலாம். ஜெயலலிதாவின் நிர்வாகக் குறையாக இருக்கலாம் அல்லது கருணாநிதியின் குடும்ப அரசியலாக இருக்கலாம்.
கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே ஏதாவது குறைகளோடு / கறைகளோடு தான் இருக்கிறன. இருப்பதிலேயே மோசமானதை ஒதுக்குவதே இதன் நோக்கம்.
அவற்றை எல்லாம் பட்டியலிட்டு நம் பார்வையில் இந்த தேர்தலில் வெற்றி பெற விடவே கூடாத கட்சிகள் / ஆட்கள் யார் யார் என முடிவெடுக்க வேண்டும். 
4) எதிர்ப்பு மட்டுமே போதாது...
யாரை எதிர்க்கிறோம் என்பதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. நீங்கள் ஒருவேளை பிஜேபியை எதிர்க்கலாம். அதிமுக உங்களுக்கு உவப்பானதாய் இருக்கக்கூடும். ஆனால் அதிமுகவும் திமுகவும் இப்போதைக்கு எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைக்காவிடினும் தேர்தலுக்குப் பின் சேர வாய்ப்புண்டு (குறிப்பாக பிஜேபியுடன்). அதிமுக, திமுக இரண்டு கட்சித் தலைவர்களுமே பிஜேபியையோ நரேந்திர மோடியையோ தம் பிரச்சாரங்களில் விமர்சிப்பதில்லை. அதனால் பிஜேபியையும் காங்கிரஸையும் எதிர்க்க நினைக்கும் ஒருவர் தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டையும் சேர்த்தே நிராகரிக்க வேண்டி இருக்கும். வாக்கு அளிக்கையில் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5) யாரை ஆதரிப்பது?
மீதமிருக்கும் கட்சிகளில் எதை ஆதரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு அக்கட்சிகளைப் பற்றி அவற்றின் நிலைப்பாடுகள் பற்றிய புரிதல் அவசியம். அக்கட்சிகளின் சமீபத்திய பத்தாண்டு செயல்பாடுகளை மேலோட்டமாகவேனும் தெரிந்து கொள்ள வேண்டும். அது முக்கியம்.
உதாரணமாக ராகுல் காந்தியை ஆதரிக்கிறீர்கள் எனில் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என ஆராய வேண்டும். அவரது பலவீனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நரேந்திர மோடியை அவரது நிர்வாகத் திறனுக்காக ஆதரிக்கிறீர்கள் எனில் அதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்று அறிய முயல வேண்டும்.
வாக்களிக்கும் முன் முடிந்த அளவு எல்லா கட்சிகளின் கொள்கைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் அறிக்கைகளை வாசித்து விட வேண்டும். அவை தேர்தலுக்காக அளிக்கப்படும் பொய் வாக்குறுதிகளாக இருக்க வாய்ப்புண்டு தான். ஆனால் நமக்கு அதை நம்புவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.
உதாரணமாக காங்கிரஸ் சொல்லும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதோ, மதிமுகவின் இந்தியக் குடியரசை ஐக்கிய இந்திய நாடுகள் ஆக்கும் விஷயமோ உங்களுக்குப் பிடித்திருக்கக்கூடும். அதற்கு இதெல்லாம் தெரிய வேண்டும்.
இந்த அறிதலின் முடிவில் இருப்பவற்றில் நீங்கள் உங்கள் விருப்பங்களுக்கேற்ற உங்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து விட்டீர்கள்.
6) நிரந்தரமில்லை
ஆதரவு அளிப்பதிலும் ஒரு உள்விஷயம் இருக்கிறது. நீங்கள் விரும்பும் கட்சி உங்கள் தொகுதியில் நிற்கவில்லை. பதிலாக அதன் கூட்டணி கட்சி நிற்கிறது என்றால் அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்குப் பிடித்த கட்சியை நீங்கள் தேர்ந்தெடுக்க நீங்கள் என்னென்ன எல்லாம் கவனித்தீர்களோ அதை இக்கட்சிக்கும் செய்ய வேண்டும்.
காரணம் அரசியலில் எந்தக் கூட்டணியும் நிரந்தரம் அல்ல. அதனால் நீங்கள் அந்தந்த கட்சியைக் கவனித்து திருப்தி அடைந்த பிறகே ஓட்டை அளியுங்கள்.
7) கட்சியா வேட்பாளரா?
அடுத்த குழப்பம் கட்சியைப் பார்த்து ஓட்டுப் போடுவதா அல்லது வேட்பாளரைப் பார்த்து ஓட்டுப் போடுவதா என்பது. இதற்கு பதில் இரண்டுமே சம அளவில் முக்கியமானது என்பதுதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எம்பியின் கட்சியே மத்தியில் அரசு அமைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவர் எதிர்கட்சியாக உட்காரவும் நேரலாம். ஆனால் அவர் தன் வேலையின் ஒரு பகுதியாக உங்கள் தொகுதிக்கு நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய முடியும்.
அதற்கு அவர் தொகுதிக்கு வந்து போகிறவராக இருக்க வேண்டும். உங்கள் பிரச்னைகளை அறிந்து கொண்டிருப்பவராக அவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டவராக இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் நின்றால் கட்சி விருப்பு தாண்டி அவருக்கு வாக்களிப்பதே நல்ல முடிவாக இருக்க முடியும்.
வேட்பாளரின் படிப்பு, அவர் இதற்கு முன்பு செய்திருக்கும் சமூகப் பணிகள் வகித்த பதவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அத்தனையையும் கணக்கில் கொள்ளவும்.
அதாவது நீங்கள் விரும்பும் கட்சி மோசமான வேட்பாளரை நிறுத்தினால் அவரை ஒதுக்குங்கள். அல்லது உங்களுக்கு பிடிக்காத கட்சி உங்கள் இடத்தில்  யாரேனும் நல்ல ஆள் ஒருவரை நிறுத்தினால் அவரை ஆதரிப்பதைப் பற்றிப் பரிசீலிக்கங்கலாம்.
இந்த அடிப்படையில் நீங்கள் ஒரு சுயேட்சையை ஆதரிப்பது கூட சரியானதே!
8) காசு வாங்கலாமா?
அடுத்து ஓட்டுக்கு காசு வாங்குவது குறித்த விஷயம். ஒரு வேட்பாளர் அல்லது கட்சி உங்களுக்கு காசு கொடுக்கிறது எனில் இரண்டு விஷயங்கள் உறுதி ஆகிறது: (i) நிச்சயம் அது நேர்மையான வழியில் சம்பாதித்த பணமாக இருக்க வாய்ப்பே இல்லை. (ii) அவருக்கு தன் கட்சிக் கொள்கைகளை விட செயல்பாடுகளை விட பணத்தைக் கொடுத்து தான் ஓட்டு வாங்க முடியும் என நம்புகிறார்.
அவர் கொடுக்கும் பணத்தை வாங்குவதும் வாங்காததும் உங்கள் இஷ்டம். அதனால் எந்த யோசனையும் இன்றி அந்த வேட்பாளரை நிராகரித்து விடலாம்.
9) தோற்கும் கட்சி
தோற்கிற கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம். இது தான் இன்று இந்தியாவில் பெரும்பாலான தேர்தல் முடிவுகளைத் திருத்தி அமைத்து விடுகிறது. மேலோட்டமான ஊர்வாய் என்பதைத் தாண்டி இன்று ஊடகங்கள் சர்வேக்களின் வழி இந்தக் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்பது முதல் இந்தத் தொகுதியில் இவர் தான் ஜெயிப்பார் என்பது வரை சொல்லி விடுகிறார்கள். அதன் நேர்மையும் துல்லியமும் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவை இருந்தாலுமே இது வாக்களிக்கும் மக்களின் மனநிலையை ஓர் எல்லை வரை பாதித்து முடிவை மாற்றி விடுகிறது.
ஊரும் நாடும் என்ன சொன்னால் என்ன? அவரவர் பிரச்சனை அவரவர்க்கு.
அதனால் நீங்கள் விரும்பும் கட்சிக்கு வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள். அது தான் மனநிறைவான விஷயம். உதாரணமாய் உங்கள் தொகுதியில் நீங்கள் கம்யூனிஸ்ட்களுக்கோ ஆம் ஆத்மிக்கோ தான் போட விரும்புகிறீர்கள் என்றால் அவர் ஜெயிப்பதையோ அக்கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதையோ பற்றிக் கவலைப்படாமல் உங்கள் வாக்கினை அவர்களுக்கே பதிவு செய்யுங்கள்.
உங்களைப் போல ஒவ்வொருவரும் செய்தால் அவர்கள் வெற்றி பெறவும் கூடும். ஒருவேளை அவர்கள் தோற்றாலும் உங்கள் வாக்கு கணக்கு தான். அடுத்த முறை வியூகம் அமைக்க, அவர்களை மக்கள் / கட்சிகள் மதிக்க இது முக்கியமானது.
யார் கண்டார், அடுத்த தேர்தல் சர்வேக்களில் அக்கட்சி ஜெயிக்கும் என்று வர இம்முறை உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் வாக்கு காரணமாக இருக்கலாம்.
ஜெயிக்காதவருக்கு ஏன் ஓட்டுப் போட வேண்டும் என நினைத்து யாருக்கோ மாற்றிப் போட்டால் உங்கள் ஓட்டை இன்னொருவர் போடுவதாகவே அர்த்தம்.
10) நோட்டா?
அடுத்து தொகுதியில் யாருமே தகுதியான வேட்பாளர்கள் இல்லை, அதனால் ‘நோட்டா’ (NOTA – None Of The Above) எனப்படும் 49-ஓ போடுவது பற்றிய கேள்வி. ‘நோட்டா’  எவ்வளவு பதிவானாலும் மீதமிருக்கும் ஓட்டுகளை வைத்து அதிக வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். பிறகு ‘நோட்டா’ போட்டும் என்ன பயன் என்பதே பரவலாக இருக்கும் அந்தக் கேள்வி.
நீங்கள் சொல்லும் விஷயம் உண்மையே. ‘நோட்டா’வினால் நேரடி ஆதாயம் ஏதும் இல்லை தான். ஆனால் அதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில் இருக்கும் அத்தனை வேட்பாளர்களும் தகுதியற்றவர்கள் என இத்தனை சதவிகிதம் பேர் நினைக்கிறார்கள் என்கிற முக்கியமான தகவல்.
ஒருவேளை அந்த எண்ணிக்கை கணிசமான சதவிகிதம் எனில் கட்சிகள் அடுத்து வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என மக்களிடமிருந்து அறிய முயலும். இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்.
இதுவரை நடந்த எந்த தேர்தலையும் போல் அல்லாது இம்முறை ‘நோட்டா’ பதிவு செய்வது எளிமையானது, ரகசியமானது. அதனால் முன்பை விட அதிக ‘நோட்டா’ பதிவாக வாய்ப்பு உள்ளது. கட்சிகளே இதை உணர்ந்து தான் இருக்கின்றன.
அதனால் தகுதியான வேட்பாளரே இல்லை எனும் பட்சத்தில் ‘நோட்டா’ போடத் தயங்காதீர். ஜனநாயகத்தில் மாற்றம் விரைவில் வராதுதான். ஆனால் வரும்.

_45638507_d9e0bb6f-5583-4bf1-8e5c-b34bac6567feஜார்ர்ஜ் பெர்னார்ட்ஷா சொல்வதைப் போல் “Democracy is a device that insures we shall be governed no better than we deserve”. அதாவது ஒரு தேச மக்களின் தகுதி என்ன என்பதையே மக்களாட்சி பிரதிபலிக்கும். நாம் யோசிக்கக் கூடியவர்கள் எனில் சந்தேகமே இல்லாமல் நமக்கு நல்ல அரசு அமையும். அவ்வளவு தான் சங்கதி.
கடைசியாக ஒரு விஷயம். உங்கள் மனைவி, மக்கள், பெற்றோர், நண்பர்கள், மாணவர்கள், பணியாளர்களிடம் உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள். குறிப்பிட்ட கட்சிக்கு / வேட்பாளருக்கு ஓட்டுப் போடு என மொட்டைக் கட்டளை இடாதீர்கள்.
அவர்களுக்கு யோசிக்க கற்றுக் கொடுங்கள், ஓட்டுப் போடும் முன் என்னென்ன விஷயங்களை எல்லாம் யோசிக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். தேவைப்பட்டால் விவாதம் செய்யுங்கள். நிறைகுறைகளை எடுத்துக் கூறுங்கள். அவர்கள் யோசிக்கட்டும் அவர்கள் தீர்மானிக்கட்டும். அது அவர்கள் உரிமை. அவர்கள் ஓட்டை நீங்கள் போட முயற்சிக்காதீர். ஜனநாயகத்தின் சாரமே அதுதான்.

ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். பலர் யாரோ வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏற நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நாளில் வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர். நகரப் பகுதிகளில் படித்தவர்கள் மத்தியில் வாக்களிப்பது என்பது குறைந்து வருகிறது.

ஒரு குடிமகனின் மிகப் பெரிய ஜனநாயக உரிமை, ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க வாக்கு அளிப்பது. மிகப் பெரிய ஜனநாயகக் கடமையும் அதுவே. இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். இதோ அதற்கான எளிய வழிகாட்டி...
முந்திச் செல்லுங்கள்   காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி. இதனால், கடைசி நேரக் காத்திருப்பையும் தவிர்க்கலாம். வரிசைக்கு மரியாதை வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசை யில் நில்லுங்கள். மாற்றுத்திறனாளி களுக்கும் கைக்குழந்தையைச் சுமந்து இருக்கும் பெண்களுக்கும் வாக்கு அளிப்பதில் முன்னுரிமை அளிப்பார்கள். முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.
இப்போது நான் இந்தக் கட்டுரையையும் அதே தொனியில் தான் எழுதுகிறேன். நான் வேலை விடுமுறைக்காக இந்திய செல்ல உள்ளேன் . இந்த விழிப்புணர்வு உங்களுக்கு  போதும் என்று நினைக்கிறன்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment