Wednesday 2 April 2014

நம்மூர் மக்களவை உறுப்பினருக்கு (எம்.பி.க்கு) என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

ரேசன் கடைகளில் போடப்படும் விலையில்லா அரிசிக்கும், மண்ணெண்ணெய்க்கும் ஒரு நாள் வேலையை விட்டு விட்டு மணி கணக்கில் காத்திருந்து வாங்கும் மக்கள், மேல்தட்டு மக்கள் ஏளனமாக பார்க்கும் அந்த அரிசியை வைத்து நாட்களை நகர்த்தும் அன்றாடங்காய்ச்சிகள்,  மூன்று வேலை சாப்பாடு  சாப்பிட முடியாத மனிதப்பிறவிகள், போதிய உணவின்றி மடியும் மக்கள், வறுமை காரணமாக எலும்பும் தோலுமாய் பிறக்கும் குழந்தைகள், 36 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என நடக்கும் அவலங்கள் நிறைந்த இந்த பாரத திருநாட்டில் தான் ஒரு தரப்பினர் நமக்கு ஊழியம் செய்தவதாக கூறிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர், அவர்கள் தான் நமது அரசியல்வாதிகள். ஓட்டு வாங்க வரும் போது உங்கள் தொண்டன் என்று கூறி விட்டு மக்கள் பிரதிநிதி என்பதையே மறந்து விட்டு நிதிகளைச் சேர்ப்பதே கொள்கையாகக் கொண்ட, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு நாம் தரும் சலுகைகள் என்னென்ன என்பது தெரியுமா!

தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு வழங்கும் சலுகைகள், வசதிகள் குறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.இளஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது.

மக்களவை உறுப்பினருக்கு மாதச் சம்பளம் ரூ.16,000, மாதத் தொகுதிப்படி ரூ.20,000, மாத அலுவலகப்படி ரூ.4,000, மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000, உதவியாளர் ஊதியம் ரூ.14,000, ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 கிலோ லிட்டர் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர்நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகிறது. தொகுதியில் இருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி. நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொகுப்பு :அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment