Thursday, 17 April 2014

மஞ்சள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவபார்வை...



நம் கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது கிராமப் பெண்கள் தான் மஞ்சள் பூசுகின்றனர்; அதுவும் ஒரு சிலரே.

இந்திய கலாசாரத்தில் மஞ்சளின் முக்கியத்துவம்: நமது கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு :
  • முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும்.முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.


  • இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும்.இரண்டாவது வகையான கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களி இதைச் சேர்த்து வருகிறார்கள்.


  • மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான்.மூன்றாவது ரகமான விரலி மஞ்சள் தான் சமையலறையின் முதற்பொருள்.இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.சற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம். 


பண்டிகைகளில்  மஞ்சள்:அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பயன்பாடு:இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனமாக பயன்படும் மஞ்சள்:
வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத் தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணங்கள்:
  • வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.
  • உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.
  • ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.
  • உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
  • மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.
  • மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.
  • நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான்,மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.
  • வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.
  • மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும்.
  • மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்த வர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.
  • அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.
  • மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.
  • மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.
  • மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.
  • மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.
  • கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துப் பயன்படுத்துங்கள்.

வலி நிவாரணி:
 இது கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினியாகவும், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாகவும் இருக்கிறது. ஜிஞ்சர் அல்லது ஜிஞ்சிபேரேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது மஞ்சள். இதன் அறிவியல் பெயர் கர்கமா லாங்கா என்பதாகும். மஞ்சளில் ஆரோக்கியம் தரும் பலன் அதிகமாக இருக்கிறது. மேலும்  இது நுண்ணுயிர்களை அழிக்க வல்லது. மஞ்சளில் ஆரோக்கியம் அளிக்கும் எண்ணெய் பொருட்களான டெர்மிரான், கர்லான், கருமின், சினியோல், பி-சைமின் போன்றவை உள்ளன. மஞ்சளில் கர்குமின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது அடர்த்தியான ஆரஞ்சு நிறம் கொண்டது. 

இந்த கர்குமின்தான் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. மஞ்சளில் கொழுப்பு கிடையாது. மேலும் இதில் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்தும் எதிர் பொருட்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. பைரிடாக்சின் (வைட்டமின்-பி6), சோலைன், நியாசின், நிபோபிளவின் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் மஞ்சளில் அடங்கியுள்ளன. 

100 கிராம் மஞ்சளில் மற்ற தாதுக்கள் :
100 கிராம் மஞ்சளில் 1.80 மில்லி கிராம் பைரிடாக்சின் உள்ளது. இது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் அளவாகும். இந்த பைரிடாக்சின் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. புதிதாக பறிக்கப்பட்ட மஞ்சளில் வைட்டமின்-சி உள்ளது. தண்ணீரில் கரைக்கக்கூடிய வைட்டமின்-சி, சக்தி பெற்ற ஆன்டி ஆக்சிடன்ட்களையும், கிருமிகளையும் தடுக்க வல்லது. 
மஞ்சளில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஷ், தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் உடல் மற்றும் செல் திரவங்களில் முக்கிய அங்கம் வகிப்பது பொட்டாசியம். இது இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இரும்பு சத்தானது சிவப்பணுக்கள் உற்பத்திக்கு முக்கியமானதாக உள்ளது. 

100 கிராம் மஞ்சளில் 53 சதவீதம் நார்ச்சத்து, 138 சதவீதம் பைரிடாக்சின் (வைட்டமின்-பி6), 32 சதவீதம் நியாசின், 43 சதவீதம் வைட்டமின்-சி, 21 சதவீதம் வைட்டமின்-ஈ, 54 சதவீதம் பொட்டாசியம், 517 சதவீதம் இரும்பு, 340 சதவீதம் மாங்கனீஷ், 40 சதவீதம் துத்தநாகம் ஆகியவை இருக்கின்றன.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment