Thursday 3 April 2014

பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் என்ன ? ஒரு ஜனநாயக பார்வை..

election : Vote ribbon Illustration
தேர்தல் திருவிழா முன்பு போல களைகட்ட வாய்ப்பில்லை என்றாலும் ஏதோ கொஞ்சம் ‘கட்ட’ ஆரம்பித்து விட்டது. இந்தக் களையில் குறையிருந்தாலும் ஜனநாயக ‘தீவிரவாதிகளின்’ கடமை உணர்ச்சிக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை.வரும் 24 ஏப்ரல் 2014 அன்று தமிழம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒரு குடிமகனாக நீங்கள் இந்தத் தேர்தலை எப்படி அணுக வேண்டும், உங்கள் வாக்கு யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு என்று முடிவு செய்யும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுவதே இதன் நோக்கம் மற்றும் எல்லை. தேர்தல் ஆணையத்தில் ஆரம்பித்து,  கருப்புப் பண சினிமா நட்சத்திரங்கள் வரை ஓட்டளிப்பதன் அவசியம்  குறித்து மக்களுக்கு ‘ஜனநாயக’ வகுப்பெடுக்கிறார்கள். 

அதாவது யாரை ஆதரிக்க வேண்டும் என்று இது சொல்லித் தரப் போவதில்லை. எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே இதன் விவாதப் பொருள்.

முதலில் இது என்ன தேர்தல்? 
லோக்சபா தேர்தல். அதாவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல். இதன் பிரதான நோக்கங்கள் இரண்டு. ஒன்று உங்கள் மக்களவைத் தொகுதிக்கு எம்பியைத் தேர்ந்தெடுப்பது. இரண்டாவது அப்படி இந்தியா முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் பெரும்பாம்பான்மையினர் முடிவுப்படி ஓர் அரசையும், அமைச்சர்களையும், பிரதமரையும் தீர்மானிப்பது.

வாக்களிப்பது என்பது நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். ஜனநாயக உரிமையுமாகும்.வாக்குரிமையே நம்மை இந்நாட்டின் மைந்தர்களாக நமது அதிகாரபூர்வ உரிமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

நாடு சீர்படுவதும், சீர்கெடுவதும் நாட்டு மக்களால் அளிக்கப்படும் வாக்குச்சீட்டு தான் தாங்கி நிற்கிறது. இன்னும் சொல்வதானால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி வாக்குச்சீட்டுக்குத்தான் உண்டு. என்று கூடச் சொல்லலாம்.அத்தனை பலம் மிக்க இந்த வாக்களிப்பின் நோக்கம், பயன் என்னவென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மிகத்தெளிவாய் யோசித்து யாருடைய நிர்பந்தமுமில்லாமல் நம்மனதிற்க்கு மனசாட்சிக்கு தமது அனுபவத்தில் ஏற்ப்பட்ட நாட்டு நிலைமைகளை மனக்கண்முன் கொண்டுவந்து யாருக்கு வாக்களிப்பதென்ற நிலைபாட்டினை மனதினில் நிலைபடுத்திக் கொள்ளவேண்டும்.

தேர்தல் என்பது, வெகுஜனங்களை அவ்வளவாகக் கவர்வது இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய சூழலில் எண்ணிலடங்காத கட்சிகள் உருவாகி கட்சிகளும் வியாபாரமாக்கப் பட்டு விட்டது. அதுபோன்று நிறங்களில் அனைத்து நிறங்களும் ஹவுஸ் புல் போர்டு போடும் அளவுக்கு எல்லாக்கலர்களிலும் கட்சிக்கொடிகள் கம்பத்தில் பறக்க ஆரம்பித்து விட்டன.

கணக்கில்லாமல் கட்சிகள் உருவாகி அரசியலின் தகுதியையும், அந்தஸ்த்தையும், பலத்தையும் இழந்து கொண்டுவருவது வேதனைக்குரியதாக இருக்கிறது. இந்த நிலைமையில் மக்கள் தான் மிக உஷாராக இருக்கவேண்டும். யாருக்கும் விலை போய் விடாமல் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் நடந்து கொள்ள பக்குவப்படவேண்டும்.

வருமானத்திற்கு வழியில்லாதவர்களின் சிந்தனையில்கூட கட்சி ஆரம்பித்தால் காசு சம்பாரிக்கலாம் என்ற எண்ணம்வரும் அளவுக்கு அரசியல் கட்சிகள் அவல நிலையில் உள்ளது.ஆகவே பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்.

ஜாதிமத பேதமின்றி நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ நினைத்தாலும் ஒரு சில சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் சுய இலாப நோக்கில் நம்மை பிரித்து வைப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். அத்தகையோரை இனம்கண்டு வீழ்த்துவது நாட்டுமக்களின் கடமையாகும்.ஜனநாயகத்தை நிலைபடுத்தவேண்டும். ஜனநாயகம் நிலைபட்டு விட்டால் நமது நாடு என்றென்றும் அமைதிப் பூங்காவாக திகழும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

அடுத்து கவனிக்கவேண்டியது தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகளில் மயங்கி வாக்களிப்பது அறியாமையாகும். அது மக்களை திருப்திப்படுத்தி வாக்குப் பெற வேண்டி நடத்தும் சூழ்ச்சி என்றே சொல்லலாம்.ஆகவே பொதுமக்கள் தான் அனைத்தையும் தீர ஆராய்ந்து இத்தேசத்தை ஆழ்வதற்கு தகுதியான தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்தல் என்பது, வெகுஜனங்களை அவ்வளவாகக் கவர்வது இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  
                                                  
தேர்தலில் வாக்களிப்பது என்பது, நாம் வேட்பாளர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ அல்ல. வேட்பாளராக நிற்பவர்களுக்குள், இவர் வந்தால் பரவாயில்லை - மற்றவர்களை விட இவர் வருவது நல்லது என்று "நான்" நினைக்கின்றேன் என்பதுதான் நாம் போடுகின்ற வோட்டு.

இந்த ஒவ்வொரு வோட்டும், நாட்டின் மீது, நம் மாநிலத்தின் மீது, நம் எதிர்காலத்தின் மீது நாம் வைக்கின்ற அக்கறையை, உலகிற்குக் காட்டுகின்றது.

ஒரு தொகுதியில் பதினைந்து சதவிகிதம் வோட்டுகள்தான் பதிவாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கு நிற்கின்ற யாராவது ஒரு வேட்பாளர், பதிவான வோட்டுகளில் பெரும்பான்மை பெற்று, வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்தத் தொகுதி மீது விஷேஷ கவனம் எதுவும் செலுத்தமாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், இந்தத் தொகுதி மக்கள் உறக்கத்தில் உள்ளவர்கள் அல்லது சமூகத்தின் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள்.

வேறொரு தொகுதியில், எண்பத்தைந்து சதவிகிதம் வாக்குகள் பதிவாகின்றன, அதில் வெற்றி பெறுகின்ற வாக்காளர் தமக்கு அடுத்து வந்த வேட்பாளரை விட ஆயிரம் வோட்டுகள் / அல்லது அதற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் ஜெயிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொகுதி மீது, ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டுமே எப்பொழுதும் அக்கறை செலுத்தும். தங்கள் கட்சி பக்கம், இந்தத் தொகுதியை இழுக்க, முழு கவனம் செலுத்துவார்கள்.

தப்பித் தவறி (அன்னா ஹசாரே புண்ணியத்தில்) இப்பொழுது வரைவு வடிவம் பெற்று வருகின்ற, லோக்பால் / லோகாயுக்த் அமைப்புகள் சட்டமாக்கப் பட்டு, இந்த சட்டங்கள் மக்களுக்கு / மக்கள் சக்தி ஆயுதமாக மாறினால், அரசியல்வாதிகளைக் கண்டு சாதாரண மக்கள் பயந்து வந்த காலம் மாறி, மக்களைக் கண்டு பயப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம், அரசியல்வாதிகளுக்கு ஏற்படும். இந்த நிலைமை, நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு நிச்சயம் வித்திடும்.

என்னுரை :
வாக்களிக்கும் நிலையில் உள்ள அனைத்து வாக்காளர்களும், உங்கள் தொகுதியில், உங்கள் வோட்டை, நீங்களே போடுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வோட்டுப் போடுங்கள். ஆனால், வோட்டுப் போடுங்கள்.          
  
வோட்டுச் சாவடியில் விழுகின்ற ஒவ்வொரு வோட்டும், நம் எதிர்காலத்தின் மீது நமக்கு அக்கறை இருக்கின்றது என்பதை உலகுக்கு உணர்த்தும்.

இன்றையகாலகட்டத்தில் நூறு சதமானம் மக்கள் நலுனுக்காக பாடுபடுவோர் அரிதிலும் அரிதாகவே தென்படுகின்றனர். இருந்தாலும் கொஞ்சமாவது பொதுநலனில் அக்கறை கொண்டு முழுக்க சுயநலவாதிகளின் கையில் நாடு சிக்கிக் கொள்ளாமல் தேசப்பற்றுடன் செயல்பட்டு, ஜாதி,இன,மத,மொழிக்கு அப்பாற்பட்டு நம்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நல்ல ஒரு தலைமையை தேர்ந்தெடுப்பது இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகவே மக்களே அலட்சியப் போக்கு வேண்டாம். ஆழமாக சிந்திப்பீர். மக்களின்பால் இந்த தேசத்தின்பால் உண்மையான அக்கறை கொள்பவரை தேர்ந்தெடுப்பீர்.!!!

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment