" இஸ்லாத்தின் பார்வை" என்ற தலைப்பில் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டு இருக்கின்றன. பெருவாரியான இந்த எழுத்துக்களும் பேச்சுக்களும் இஸ்லாமிய தீர்வின் ஒரு பகுதியை மட்டும் முன்னிறுத்துவதை பார்க்க முடிகிறது.
உலகளாவிய இன்றைய உம்மத்தின் கல்விமுறையில் ஏற்பட்ட கோளாறு உம்மத்தை அறிவு ரீதியாக ஊனமுற்றவர்களாக மாற்றியிருக்கிறது என்பதை வரலாற்று தொடர்போடு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
- " கொள்ளை நோய் பரவிய இடத்தை விட்டு வெளியேறாதீர்.அந்த இடத்திற்குள் புதிதாக யாரையும் அனுமதிக்காதீர் "
இது கொள்ளை நோயிலிருந்து ஒரு சமூகம் அல்லது ஒரு நாடு தன்னை எப்படி தற்காத்து கொள்வது (Precautionary) என்பதற்கான நபி (ஸல்) அவர்களின் சமூகவியல் (Sociological) வழிகாட்டல்.
- " நோயினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் பாவமன்னிப்பு தேடுங்கள்"
இது மனித உள்ளத்தை தூய்மைபடுத்தி அதை மரணத்தோடு தொடர்புடையதாக உயர்த்தி விதியின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்திடும் நபி (ஸல்) அவர்களின் ஆன்மீக (Spiritual) வழிகாட்டல்.
- " எந்த நோயாக இருந்தாலும் அதற்கு மருந்து எடுத்துக்கொள்ளுங்கள்"
இது மனித உடலின் படைப்பு இயல்புக்கேற்ப நபி (ஸல்) அவர்களின் பகுத்தறிவு ரீதியான உயிரியல் (Biological) வழிகாட்டல்.
- " அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை "
மானுடத்தின் உடல்நலம் சார்ந்த துறையில்......ஒரு தனிப்பட்ட மனிதனுக்கான வழிகாட்டல் ஒரு அரசிற்கான வழிகாட்டல் மருத்துவக் கல்வியும் அதன் இலக்கும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மக்களுக்கான வழிகாட்டல் இப்படி பல பரிமாணங்களை அல்குர்ஆனும் நபிகளாரின் வழிகாட்டுதலும் குறிப்பிட்ட இந்த துறையில் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
மட்டுமல்ல....
- " மருந்தில்லாமல் நோயை அல்லாஹ் இறக்கவில்லை"
என்ற நபி (ஸல்) அவர்களின் கருத்தை நாம் ஆய்வுக்குட்படுத்தினால்...... கடல் மலை காடுகள் பாலைவனம் என நிலப்பரப்பால் பரந்து விரிந்து கிடக்கும் பூமியில் ஆங்காங்கே வாழும் மக்களை பீடிக்கும் நோய்களுக்கான மருந்தை அந்தந்த நிலத்திலேயே அல்லாஹ் படைத்துள்ளான் என்பதை நமது சிறிய அறிவால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அப்படியென்றால் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வாழும் நமக்கு உண்டாகும் நோய்களுக்கு அந்தந்த மண்ணிலேயே மருந்து இருக்கிறது என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.அவற்றை ஆழமான ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்து நம்மோடு வாழும் சக மக்களுக்கு வழங்க வேண்டிய ஈமானிய பொறுப்பை நாம் சுமக்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும்.
மத்திய காலத்தில் வாழ்ந்த இமாம் ஸஹராவி (936–1013), இமாம் இப்னு ஸீனா (980—1037), இமாம் அல் ராசி (1150 - 1210) , இமாம் இப்னு கய்யூம் (1292–1350) போன்ற ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்கள் உலகின் மாபெரும் மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதை வரலாறு நமக்கு வகுப்பெடுக்கிறது.
வெறும் ஆன்மீக ரீதியான வழிகாட்டலிலேயே முடங்கி கிடப்பதும் அனைத்து சிக்கல்களுக்கும் அந்நியர்களின் அறிவை ஆய்வுகளை எதிர்பார்த்து நிற்பதும் இன்றைய உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.
அறிவு ரீதியான இந்த அடிமைத்தனத்திலிருந்தும் மருத்துவத்தில் நமது பொருளாதாரங்கள் கொள்ளை போவதிலிருந்தும் எதிர்கால தலைமுறையை காப்பாற்ற இன்றைய நமது கல்வி முறையில் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
No comments:
Post a Comment