Friday 27 March 2020

கொரோனா நுண்ணுயிரிக்கெதிரான போர் ஒன்றுதான் விழிப்புணர்வு !!

நாம் போலீசாரின் லத்தி அடிகளும், வாட்சப் வாயர்களின் அதிபுத்திசாலித்தனமான அறிவுரைகளும் அலட்சியமாக இருந்த பல ஆயிரம் பேர்களை ஏதோ வகையில் விழிப்புணர்வு கொள்ள வைத்திருக்கிறது !
கிராமங்களில் எல்லோர் வீடுகளிலும் மஞ்சள் தண்ணீரும் வேப்பிலையும் இடம் பிடித்திருக்கிறது. இவை எந்த அளவிற்கு வைரஸை கட்டுப்படுத்தும் என்பது நிரூபிக்க முடியாமல் போனாலும் கொரோனாவிற்கு எதிரான இந்த விழிப்புணர்வு நம் மக்களை நிச்சயம் காக்கும் !
பைக்குகளில் செல்வோரும் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள் ! அது அவசியமில்லை என்ற அறிவு ஜீவித்தனமான அறிவுரைகள் தேவையில்லை !
மாநில நோய் பாதுகாப்பு என்ற நிலையில் இருந்து 'ஊர்' 'தெரு' என்று இப்போது மாறியிருக்கிறது. உள்ளூர் தையல்காரர்கள் தெரு முழுவதும் உள்ளவர்களுக்கு 'துணி மாஸ்க் ' தைத்து கொடுக்கிறார் எல்லோரும் அதை அணிந்து கொண்டுதான் வெளியில் வருகின்றனர் என்பது மகிழ்வான செய்தியாக பார்க்கலாம்.
உலக நாடுகள் முழுமைக்கும் நுண்ணுயிரிக்கெதிரான போர் ஒன்றுதான்! ஆனால் வல்லரசுகள் எதிர்கொள்வதற்கும் பொருளாதாரம்,கல்வியறிவு என்று பின் தங்கிய நாடுகள் எதிர்கொள்வதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றது !
எந்த வகையிலும் போரில் வென்றாக வேண்டிய கட்டாயம் எந்த சூழலில் உள்ள நாடுகளுக்கும்!
இந்தியாவில் இத்தனை கோடிகள் மக்கள் தொகை பெருகியிருக்கிறது எனில் இயற்கை துணை புரியாமல் சாத்தியப்பட்டிருக்காது !
நம் பாரம்பரிய உணவுமுறையும், 'தினம் குளியல்,கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழக்கவழக்கங்களும்', இயற்கை மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வும் கொரோனாவோடு சேர்ந்தே வளர்ந்திருக்கிறது எனலாம். நம் உணவுப்பழக்கத்தில் உள்ள 'மருந்தே உணவு என்பது' இனி மெய்யாகும்!
நம்மாபெரும் ஜனத்தொகையின் அடிப்படையில் கணக்கிடும்போது வளர்ந்த அதீத சுகாதாரம் பேணும் நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தொற்று சற்று குறைவாக இருப்பதன் காரணம் பொதுவாகவே இந்தியர்களின் நோய்தாங்கும் திறன் அதிகமாக இருப்பதுதான். தெருப்புழுதிகளிலும், காடுகறைகள், நீர்நிலைகள் என அக்காலத் தலைமுறை விளையாடிய லக்கோரி, ஐஸ்பாய், காக்கா ஆட்டை, என தெருவில் உருண்டு புரண்ட தலைமுறையின் ஆரோக்கியமே அதற்கு சிறந்த உதாரணம். சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் குழப்பிக் கொள்ளாத தலைமுறை அது. பின் அடுத்த தலைமுறையில் தொலைக்காட்சித் திரைகளிலும், மருத்துவக் கட்டுரைகள் வாயிலாகவும் சுகாதாரம் ஆரோக்கியத்திற்கான நிபந்தனையான போது இளம் தலைமுறையினரின் மருத்துவமனை வருகையும் அதிகரிக்கத் துவங்கியது. உபவிளைவாக சாதாரண சளி, இருமல், தலைவலிக்கு கூட மிகவும் பிரயாசைப்படும் உளவியலும் தோற்றுவிக்கப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு இயல்பான விளையாட்டுகளின் மூலம் கிடைக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி, உடல் வலிமை, யாவும் பத்துக்கு பத்தடி அறையில் அவர்களுக்கு மாத்திரை வடிவிலும், திரவங்களின் வாயிலாகவும் நிபந்தனையாக்கப்பட்டன. நோயைக் கண்டு அஞ்சத்தொடங்கிய அடுத்த தலைமுறையின் இளம் தம்பதியினர் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சாதாரண சளி, இருமலுக்கே பதற்றப்படத்துவங்கி, ஆலோசனைக்கோ, உதவிக்கோ பெரும்பாலும் யாருமற்ற நகர்மய வாழ்வியல் அவ்விளம் தம்பதியினரை கை வைத்தியம் ஏதுமற்று மருத்துவமனைக்கே செலுத்தியது. இதற்கு பலியாக்கப்பட்டிருப்பது
இக்கால நவதலைமுறையினரின் நோய் தாங்கும் திறன்தான். நிச்சயம் நமக்கென பாரம்பரிய மருத்துவமுறை இருக்கிறது. மருந்துகளூம் இருக்கின்றது. இன்றைய வாழ்வியலுக்கு சற்று தொடர்பற்று இருக்கின்ற காரணத்தாலும், ஒரு அவசர காலத்திற்கு அது ஏற்புடையதல்ல என்ப தாலும், சில சுயநல போலிகள் இஷ்டத்திற்கு உளருவதை வைத்தும் ஒரு பெரும் மரபு சார் மருத்துவமுறையை நாம் இழிவு படுத்தலாகாது. அது நமது பண்பாட்டு வாழ்வியலை நாமே அவதூறு சொல்வதாகவே முடியும்.

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி ' எந்த சூழலிலும் தம்மை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு..

ஆக்கம்  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment