Saturday, November 1, 2014

பூச்சிகளின் தாக்குதலில் இருந்து மா மரங்களை பாதுகாப்பது எப்படி?

மாமரம் மாபெரும் வரம் முக்கனிகளில் முதற்கனி மா!  மாமரத்தின் தாவர இயல் பெயர் மேங்கிஃபெரா இண்டிகா. மா மரத்தின் தாயகம் இந்தியா. மலேசியாவும் இதன் தாய்வீடு என்கின்றனர் சிலர். உலக அளவில் மாம்பழ உற்பத்தியில் முதல் இடம் வகிப்பது இந்தியாதான். உலகின் மொத்த மாம்பழ உற்பத்தியில் 63 சதவிகிதம் இந்தியாவில் இருந்துதான் என்பது மகிழ்ச்சிக்குரிய உண்மை. பேரரசர் அக்பர் தன் தோட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மாமரங்களை வளர்த்து இருக்கிறார். மாமரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணங்களைக் கொண்டு உள்ளன. மாங்காய் வைட்டமின் 'சி’ நிரம்பியது. மாம்பழம் கரோட்டின் சத்து  நிறைந்தது. மா மரத்தின் காய், கனி, துளிர், பிஞ்சு, கொட்டை ஆகியனவும் உணவாகப் பயன்படுகின்றன. மா இலைகள் கால்நடைகளுக்கான நல்ல தீவனம். 

மாம்பழம் சுவை மட்டுமல்லாமல் பல்வேறு சத்துக்களையும் கொண்டது. மாம்பழத்தில் “ஏ“, “சி“, மற்றும் “இ“ வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது. “மா“ பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது போல் அவற்றை முறையாக பராமரித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால் கூடுதல் லாபம் பெற முடியும்.

மாம்பழத்தில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ருமானி, பங்கனப்பள்ளி, காலாப்பாடி, பீத்தர், செந்தூரா, ஜஹாங்கீர், மல்கோவா, இமாயுதீன், அர்கா அன்மால், அர்கா அருணா, அர்கா நீல்கிரன், அர்கா புனீத், அமரப்பள்ளி, பி.கே.எம். 1, பி.கே.எம் 2, பையூர்1, மல்லிகா, சிந்து, ரத்னா ஆகிய ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.இவற்றில் மல்லிகா, சிந்து, ரத்னா, பி.கே.எம் 2 போன்ற ரகங்கள் உயர் ரகங்களாகவும், கேசர் மற்றும் அமரப்புள்ளி போன்ற ரகங்கள் சுவை மற்றும் அதிக விளைச்சல் தரும் ரகங்களாகவும் உள்ளன. மல்லிகா மற்றும் சிந்து ரகங்கள் விதையில்லாதது. 

பிஞ்சுகள்
மாமரம் இதுவரை பூக்காமல் இருந்தால், 0.5 சதவீத யூரியா கரைசல் (5 கிராம் யூரியா ஒரு விட்டர் நீருக்கு) அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் (10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் ஒரு லிட்டர் நீருக்கு) என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உருவாக வாய்ப்பு உண்டு.
பூக்கள் பூத்திருக்கும் மாமரங்களில் நாப்தலின் அசிட்டிக் அமிலம் தெளிப்பதால் அதிக பிஞ்சுகள் உருவாவதோடு, பிஞ்சுகள் உதிர்வதும் தடுக்கப்படும். அதே நேரத்தில் பிஞ்சுகள் உருவாகி உள்ள மாமரங்களில் 2 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும். மாமர தோப்புகளில் தோழமை தாவரங்களான சீத்தாப்பழ கன்றுகள் மற்றும் ஆமணக்குச் செடிகளை பயிரிடுவதால் கூடுதல் வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்…
மாமரங்களை மூன்று விதமான தத்துப்பூச்சிகள் தாக்குகின்றன. மாமரத்தின் கிளைகளில் தத்துப்பூச்சியில் தாக்குதலை எளிதாக கண்டறிய முடியும். தத்துப்பூச்சியின் தாக்குதலினால் பூக்களின் எண்ணிக்கை குறைவதோடு பூக்களிலும் அதன் பாதிப்பு ஏற்படும். தத்துப் பூச்சியின் தாக்குதல் குறைவாக இருப்பின் 3 சதவீத வேப்ப எண்ணை ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி அல்லது வேப்பம் சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

தத்துப்பூச்சியின் தாக்குதல் மத்திமமாக
இருப்பின், ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் “பெவேரியா பேஸியானா“ என்ற உயர்ரக பூஞ்சாண மருந்தினை அதிக திறன் உள்ள தெளிப்பான் மூலம் தெளிப்பு வேகத்தை குறைத்து மாமரம் மற்றும் பூக்களின் மீது தெளிப்பதால் தத்துப்பூச்சிகள் அழியும். தாக்குதல் அதிகமாக இருப்பின், “அசிபேட் 75 எஸ்.பி“ ஒரு கிராம் ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “கார்பரைல் 50 டபிள்யு.பி“ ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் பூ உருவாகும் சமயத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து 2–வது முறையும் பூக்களின் மீது தெளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளித்தால் செஞ்சிலந்தியின் தாக்குதலை தடுக்க முடியும்.

பிணைக்கும் புழுகள் எச்சத்தால், மாமரங்களின் பூக்களில் கூடுகள் கட்டி வலைபோல் பின்னி பூக்களை உண்பதால் மகசூல் பாதிக்கப்படுகின்றது. இதனால் பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுவதும் தடுக்கப்படும். பிணைக்கும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த “பேசலோன் 35 இ.சி“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “புரப்னோபாஸ்“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.

இலை கொப்புளம்
இலை கொப்புளம் மற்றும் அசுவிணியை கட்டுப்படுத்த “டைமித்தோயேட்“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
மாமர தோப்புகளில் கரையான் புற்றுகளை அழிக்க சோற்றுக்கற்றாழை செடிகளை நடலாம். மேலும் மாமரங்களில் தோன்றும் கரையானை அழக்க சிறிதளவு சர்க்கரைக் கரைசலை மரத்தின் மீது தெளிப்பதால் செவ்வெறும்புகள் சர்க்கரையை தேடிவந்து கரையான்களை அழிக்கும்.

மாமரத்தில் பழங்களில் தோன்றக்கூடிய பழ ஈயை கட்டுப்படுத்த பிரத்தியேக இனக்கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 2 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் வைத்துவிட வேண்டும். இதனால் பழ ஈக்கள் பூ பூக்கும் தருணத்தில் முட்டையிடுவது தவிர்க்கப்பட்டு இனக்கவர்ச்சிப் பொறியால் அவை ஈர்க்கப்பட்டு அழிக்கப்படும்.

பொதுவாக மா மரத்தில் அதிக பூ வைத்து விளைச்சலை அதிகரிக்க ஒரு தொழில் நுட்பத்தை பார்ப்போம். இத்தொழில் நுட்பம் தமிழகத்தை சேர்ந்த தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரியில் விவசாயிகளால் பின் பற்ற பட்டு லாபத்தை பெருக்க உதவி வருகிறது. இத்தொழில் நுட்பத்திற்கு மட் கா காட் என்று பெயர்.எருமை மாட்டிலிருந்து பெற பட்ட பாலிலிருந்து தயாரிக்க பட்ட மோர் 15 லிட்டர் எடுத்து கொண்டு அதனுடன் 15 லிட்டர் தண்ணீரை நன்கு கலக்க வேண்டும்.அதை மண் பானையில் ஊற்றி பானையின் மேல் பகுதியை துணியால் மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும் அல்லது மண்ணுக்கு அடியில் புதைத்து 21 நாட்கள் வைக்க வேண்டும்.அவ்வாறு வைப்பதால் நுண்ணுயிர் நொதித்தலால் பல நல்ல உயிர் ஊக்கி(bioactive molecule) பொருட்கள் உருவாகும்.1 லிட்டர் இந்த கலவையுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதனால் மா மரத்தில் பூக்கள் அதிகரித்து விளைச்சளும் அதிகரிக்கிறது.


தகவல்:– 
1, திரு.விஜயகுமார், பூச்சியியல் துறை வல்லுனர், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம்.
2,திருமதி . சு.சுஜாதா, உதவி விரிவுரையாளர்,அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை. 
3, திரு . பூச்செண்டு, மாங்காய் நிலக்கிளார், நத்தம். திண்டுக்கல் மாவட்டம். 

தொகுப்பு : அ . தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment