Sunday, November 16, 2014

படிக்காமல் வளைகுடா நாடுகளுக்குப் போனால் வாழ்க்கையின் திசையே மாறிவிடுமா ? ஒரு சமுதாய பார்வை...

வளைகுடா நாடுகளுக்குப் போனாலேவாழ்க்கையின் திசையே மாறிவிடும்.சொந்த ஊரில் நிலபுலன்கள் வாங்கிப் போடலாம்;வாசனைத்திரவியம் மணக்க ஊர் திரும்பலாம்என்கிற எண்ணம்தான் பெரும்பாலானவர்களிடம் எழுகிறது. இது ஒரு புறத்தோற்றம்தானே ஒழிய, முழு உண்மையல்ல. இன்னொரு பக்கமும் இருக்கிறது.

கல்ஃப் நியூஸ் என்று வளைகுடா நாடுகளிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ்களின் பக்கங்களைப் புரட்டினாலே ‘காணாமல் போனவர்கள்’ என்று புகைப்படங்களுடன் விளம்பரங்கள் அதிர்ச்சியான விஷயம். இந்த லிஸ்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். காணாமல் போகும் லிஸ்டில் தமிழர்கள் தொடர்ந்து இடம் பெற என்ன காரணம்?  ஏன் கடல் கடந்தும், இந்தக் கொடுமையான நிலைமை?


ளைகுடா நாடுகளில் 1970களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோல் எண்ணெய் வளம் நியை உபரி வேலை வாய்ப்புகளை உருவாக்கிய போது – அந்தத் தேவைக்காகக் கடல் கடந்து போய் உழைக்க ஆரம்பித்தார்கள் இந்தியத் தொழிலாளிகள். குறிப்பாக தென்னிந்தியாவில் கேரளாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் போய் உதிரித் தொழிலாளர்களாகப் பாடுபட்டு அவர்கள் மூலமாக இந்தியாவுக்குக் கிடைத்த அந்நியச் செலாவணியும் அதிகம்.

உலகம் முழுக்கப் புலம்பெயர்ந்த இந்தியர்களின் ஆண்டு வருமானம் -இந்திய உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். அதாவது 300 பில்லியன் (14,40,000 கோடி ரூபாய்) என்கிறது அரசு தரப்பிலான புள்ளி விவரம். இதில் கணிசமான வருமானத்தைத் தந்தவை வளைகுடா நாடுகள்தான்.

வளைகுடா நாடுகள் -அவை மூலமாகக் கிடைக்கும் வருமானம், கணிசமான 
தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த பொருளாதார மாற்றங்கள் -
இவையெல்லாம் நாம் பார்க்கும் பார்வையின் ஒரு கோணம் மட்டுமே. இதற்கும் அப்பால் கடல் கடந்து போகும் தொழிலாளிகளை வளைகுடா நாடுகள் எதிர்கொள்ளும் விதம், பரிதாபமும், தவிப்பும், தனிமையும் நிரம்பிய தொழிலாளர்களின் இன்னொரு பக்கத்தையும் பார்த்தால் மட்டுமே - பாலைவன வெப்பம் மாதிரி அதன் உண்மையான முகம் தெரியும்.

தென்னிந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வெவ்வேறு வேலைகளுக்காகப் போனாலும்,  அரேபிய தீபகற்பத்தின்  அமைந்திருக்கிற  வளைகுடா நாடுகளான சௌதி, குவைத், துபாய், பஹ்ரைன், ஓமன், ஈராக், சௌதி அரேபியா என்று பல பகுதிகளைப் பற்றி  இங்கே பார்க்கலாம்...


தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள். அவர்களில் பலருக்கு முறையான விசா உண்டு. தொழிலாளருக்கான அடையாள அட்டை உண்டு. பெரும்பாலும் குடும்பத்தினருடன் இல்லாமல், தனிமையில் தங்கியிருக்கும் இவர்களுக்குச் சாப்பாட்டுச் செலவு போக மீதமுள்ள பணத்தைச் சேமிக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் இந்தியாவுக்கு வந்து விட்டுப் பரிதவிப்புடன் போகிறார்கள்.

இவர்களுக்க அடுத்து இருக்கம் தொழிலாளர்கள் ஆட்டம்தான் பிரச்சனையே. ஏதாவது ஒரு போலி ஏஜெண்டினால் வளைகுடா நாடுகள் பற்றிய அபரிதமான ஆசைகளும், கனவுகளும் கிளறிவிடப்பட்டுக் கையிலிருக்கம் சில சொத்துக்களை விற்றாவது 80 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை ஏஜெண்டுகளிடம் கொடுத்து விட்டு வறண்ட மண்ணில் கால் பதிப்பதில் ஆரம்பிக்கிறது சூடு.


போலி ஏஜெண்டுகள் மூலம் ஒரு வழியாக ஏமாற்றப்பட்டு வளைகுடா நாடுகளுக்கு வந்திறங்குகிறவர்கள் தற்போது அதிகப்பட்டிருக்கிறார்கள். இதற்கென்றே தமிழகத்திலும், ஆந்திராவிலும் போலியான டிராவல் ஏஜெண்டுகள் உருவாகி, டூரிஸ் விசாவில் வந்திறங்குகிறவர்களை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். பலர் வெளியே வந்து வேலை தேடி தலைமறைவாக  அலைய ஆரம்பிக்கிறார்கள். வறண்டு கிடக்கும் அந்நிய மண்ணில் வந்திறங்கியதும் தாங்கள் ஏமாற்றப்பட்ட அவலம் பலருக்குத் தெரிய வருகிறது. ஏதாவது சிறுசிறு கூலி வேலைகளைச் செய்கிறார்கள். இது தவிர குறைந்த கூலிக்கும் இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் சில நிறுவனங்கள் இவர்களுக்கு உரிய சம்பளமும் கொடுப்பதில்லை. கையிலிருந்த பாஸ்போர்ட்டையும் உரிமையாளர் வாங்கிக் கொண்டு நிராதரவாக நிற்கும் தொழிலாளர்கள் மட்டும் சில ஆயிரக்கணக்கில்.


வளைகுடா நாடுகளில் செய்திகள் வெளியாவதற்கு அரசு தரப்பில் கடும் கட்டுப்பாடுகள்.எந்த முரண்பாடான செய்தியும் வெளியே போய்விடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள். அதனாலேயே எந்த்த் தொழில் நிறுவனங்களில் எவ்வளவு மோசமானபடி தொழிலாளர்கள் நடத்தப்பட்டாலும் - அது குறித்து தகவல்கள் வெளியே தெரிவதில்லை.


ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று பல மாவட்டங்களிலிருந்து போலி ஏஜெண்டுகள் மூலமாக வந்து சேர்கிறவர்களுக்கு கிடைக்கிற வேலை - பெரும்பாலும் சுத்தப்படுத்துகிற வேலையும், கட்டிடவேலையும். எம்.ஏ.,  எம்.காம்., வரை படித்துவிட்டு நிறையச் சம்பாதிக்கலாம் என்கிற கனவுகளுடன் விமானம் ஏறியவர்கள் மஸ்கட் நகராட்சியில் சேர்ந்து கழிப்பறைகளையும், சாலைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிடைக்கிற சம்பளமும் 5 ஆயிரத்திற்கும் குறைவு. ஏமாற்றப்பட்டு ஊர் திரும்பிப் போகிற அவமானத்தை விட, ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை.


தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒரு முகாமுக்கு போனபோது, தகிக்கும் வெயில். அவ்வளவு அதிகமான வெப்பம். ஆனால் நகராட்சி ஊழியர்கள் தங்கியிருந்த பகுதியில் ஏ.ஸி. இல்லை. நீண்ட ஹாலிலும், கட்டிடத்திற்கும் வெளியிலும் சாதாரணக்கட்டில்கள். அதையொட்டி பழைய ஃபேன்கள். எதிரே பொதுவானதாக ஒரு டி.வி. தங்கியிருப்பவர்களுக்காய் மர போர்டுகளில் செய்யப்பட்ட ஒரு பெட்டி. போனதும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்களுக்கும் குரலில் ஒருவித சந்தோஷம். அதே சமயம் தங்கள் அவஸ்தைகளைப் பகிர்ந்து கொள்ள இடம் கிடைத்த மாதிரி மனநிறைவுடன் பேசினார்கள்.  இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

இந்திய மதிப்பில் 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. சாப்பாட்டை நாங்களே சமைத்துக் கொள்வோம். சாலைகளைச் சுத்தப்படுத்துவதும், அரசு அலுவலகங்கள், கழிப்பறைகள் உட்படச் சுத்தப்படுத்துவதும் எங்களுடைய வேலை. ஆனால் ஏஜெண்டுகள் எங்களிடம் சொன்னது சாப்பாட்டுச் செலவெல்லாம் போக ஒரு மாதத்திற்குச் சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்றார்கள். அதை நம்பி ஏஜெண்டுகளிடம் ஒரு லட்சம் வரை கொடுத்து வந்தோம். இப்போது 1 லட்சத்து 10 ஆயிரம் வரை கொடுத்து வருகிறார்கள். ஆனால் இங்கு சாப்பாட்டுச் செலவெல்லாம் போக, கையில் இரண்டாயிரம் ரூபாய் கூட மிஞ்சுவதில்லை. இதைச் சம்பாதிக்கவா வீட்டைப் பிரிந்து இவ்வளவு தூரம் வந்தோம்? முதுகலைப் பட்டபடிப்பு படித்த சிலர் இங்கு வந்து இதே வேலையைத்தான் செய்கிறார்கள். காலையில் 6 மணியிலிருந்து 11 மணி வரையிலும், மதியம் 3 மணயிலிருந்து 6 மணி வரையிலும் வேலை நேரம். 


இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சொந்த நாட்டிற்குப் போக டிக்கெட் செலவுடன், சம்பளமும் கொடுத்து அனுப்ப வேண்டும். ஆனால் கொடுக்காமல் கொடுத்த மாதிரி கையெழுத்து வாங்கி விடுவார்கள். இது தவிர உழைப்பாளர்களுக்கான அட்டையை ஒவ்வொரு வருஷமும் புதுப்பிக்க சுமார் 14 ஆயிரம் ரூபாய் வரை கட்ட வேண்டும். தெருக்களில் வேலை செய்யும்போது வெயில் ஒருபுறம், அவமானங்கள் ஒருபுறம். நடுரோட்டில் வேலை செய்யும்போது அரபியச் சிறுவர்களும், இளைஞர்களும் கற்களை விட்டெறிந்திருக்கிறார்கள். முட்டைகளை வீசியிருக்கிறார்கள். திருப்பி நாங்கள் ஏதாவது செய்தால் உடனடியாகப் போலீஸ் வந்து எங்களைத்தான் கைது பண்ணும் என்பதால் நாங்கள் ஒதுங்கிப் போய் விடுவோம். வெள்ளியன்றுதான் விடுமுறை. அன்றைக்கு மட்டும் வெளியே போவோம். சிலர் சம்பளம் வாங்கியதும் நாங்கள் சுத்தம் செய்யப் பயன்படுத்துகிற ஒரு ரசாயன திரவத்தை அதில் கிடைக்கும் போதைக்காக வாங்கிக் குடிப்பார்கள். சொந்த நாட்டிற்கு தொடர்ந்து ஆறு வருஷங்கள் போகாமல் உழைத்தால்தான் ஊரில் ஏஜெண்டுக்காக நாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியும்’’ -  சுற்றிலும் மணல் மேடும், அடர்ந்த வெப்பமும் சூழ்ந்திருக்க நிராதரவானபடி சொன்ன தமிழகத் தொழிலாளர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது குறித்து பயமும் கூடவேயிருக்கிறது.

No comments:

Post a Comment