Tuesday 4 February 2014

மதுரைக்கு மோனோ ரயில் திட்டம் எப்போது ? இன்றைய மதுரையின் நிலை!! ஒரு சிறப்பு பார்வை...


மதுரைக்கு மோனோ ரயில் திட்டத்தை உடனே நிறைவேற்றுவேன் என முன்பு ஆட்சிக்கு வந்தவர்களும் சரி தற்போதைய மேயரும் சரி கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பற்றவில்லை. மோனோ ரயில் திட்டம் ஒன்றும் புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே மும்பை நிறுவனம் ஒன்று இதற்க்கான ஆய்வை முடித்து விட்டது. ஆட்சியாளர்கள் மாற்றத்தின் காரணமாக இந்த திட்டம் நிறைவேறுவதில் பல தடைகள் நிலவி வருகிறது. 
மோனோ ரயில் திட்டத்தை முதலில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நிறைவேற்ற அரசு முடிவு செய்தது. இதன் படி முதலில் சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் பார்த்தால் அடுத்து இந்த மோனோ ரயில் மதுரைக்கு தான் வர வேண்டும். மதுரையில் இந்த மோனோ ரயில் கட்டுமானப்பணியை 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிவிடலாம் என சென்னை மோனோ ரயில் கட்டுமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
மேலும் இந்த திட்டத்திற்கான வரைபடம் தயார் நிலையில் உள்ளது. முதலில் எடுக்கப்பட ஆய்வில்  2 வழிகளில் மோனோ ரயில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. முதல் பாதையாக மாட்டுத்தாவணியில் இருந்து நீதிமன்றம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம் வழியாக கோச்சடை வரையிலும்(11கிமீ ), மற்றொன்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து தெப்பகுளம் வரை (6கிமீ) என முடிவு செய்யப்பட்டது. 
மோனோ ரயில் திட்டம் அமைக்க 1கிமீக்கு 150கோடி செலவு ஆகும். மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வர வசதி இல்லை. ஏனெனில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க இட வசதி கிடையாது. மதுரையின் இன்றைய நெருக்கடியான போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இது போல் ஒரு புதிய ரயில் வசதி கண்டிப்பாக தேவை தான்.

கோரிப்பாளையத்தில் அமைய உள்ள  மேம்பாலம்...

மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக, அமைய உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் (பிளை ஓவர்) மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரையின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க, கோரிப்பாளையம், காளவாசல், பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் மேம்பாலம் அமைக்க உள்ளதாக, சில ஆண்டுகளுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதற்கான முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது கோரிப்பாளையத்தில் அமைய உள்ள, மேம்பாலத்தின் மாதிரியை நெடுஞ்சாலைத் துறை உருவாக்கி உள்ளது.இதன்படி, கோரிப்பாளையம் சந்திப்பில் 4 புறங்களில் இருந்தும், இந்தப் பாலம் அமைய உள்ளது. அழகர் கோவில் ரோட்டில் தமுக்கம் மைதானம் அருகே துவங்கும் மேம்பாலம், தேவர் சிலையை சுற்றி, ஏ.வி.,பாலத்தில் சேர்கிறது. கலெக்டர் அலுவலக பஸ்ஸ்டாண்ட் ரோட்டில் மருத்துவ கல்லுாரி அருகே துவங்கும் மேம்பாலம், தேவர் சிலையை சுற்றி, பாலம் ஸ்டேஷன் ரோட்டில், மாநகராட்சி லாரி நிறுத்தம் பகுதியில் தரை இறங்குகிறது.
இந்தப் பாலத்தின் அகலம் 12 மீட்டர். உயரம் 6 மீட்டர். பாலத்தின் கீழ், அதைத் தாங்கி நிற்கும் துாண்களின் இருபுறமும் தலா 7.5 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடுகளும் இடம்பெறும். இதனை உருவாக்க ரூ. 200 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் இந்த மேம்பாலத்தின் மேலும், கீழும் வாகனங்கள் செல்லலாம். விரைவு வாகனங்கள் பாலத்தின் மேல் பகுதியில் சென்றுவிடுவதால், பிற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் மதுரை அரசு மருத்துவமனை, அமெரிக்கன் கல்லுாரி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதியில், இந்தப் பாலத்தை விரைவாக உருவாக்க வேண்டும்.



விரைவில் மாட்டுத்தாவணியில் ஆம்னி பேருந்து நிலையம்!!

மாட்டுதவனியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் இடத்தின் அருகே இந்த புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பணிகள் முடிவுறும்  நிலையில் உள்ளது .ஓம்னி பேருந்து நிலையம் செயல்பட துவங்கும் என்றும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் அதன்பின் இங்கிருந்து தான் புறப்படும். 


மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தேவர் சிலை அருகில் புதிய மேம்பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு


உத்தங்குடியில் இருந்து திருமங்கலத்துக்கு சுற்றுச்சாலை(ரிங் ரோடு) உள்ளது போல் உத்தங்குடியில் இருந்து சமயநல்லூர் வரை சுற்றுச்சாலை அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



மதுரை வழியாக சபரிமலைக்கோ அல்லது சபரிமலையிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் போதோ மதுரை வந்து மீனாக்ஷி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் மற்றும் அழகர் கோவில் போன்ற இடங்களுக்கு சென்று வழிபாடு செய்வது வாடிக்கை.

இப்படி வருபவர்களை மதுரை நகர் எல்லையில் அல்லது நகரின் மையப்பகுதியை தவிர்த்து வெளிப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதிப்பர். வாகன நிறுத்திய இடத்திலிருந்து ஆட்டோ மூலமோ அல்லது பேருந்து மூலமோ பெரியார் பேருந்து நிலையம் வந்து மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு சென்றுவிடுகின்றனர். மறுபடியும் இங்கிருந்து திருப்பரங்குன்றம், மற்ற இடங்களுக்கு செல்வதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. மேலும் இவர்களிடம் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலித்து கோவிலுக்கு அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக 4 அரசு பேருந்துகளை மீனாக்ஷி அம்மன் கோவிலில்  இருந்து திருப்பரங்குன்றம் வரை செல்ல மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


இந்த பேருந்துகள் செல்லும் வழித்தடம்: பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி  - நேதாஜி சாலை - ஜான்சிராணி பூங்கா(மீனாக்ஷி அம்மன் கோவில் செல்பவர்கள் இங்கு இறங்க வேண்டும்) - தெற்கு மாசி வீதி - க்ரைம் ப்ராஞ்ச் - பழங்காநத்தம் வழியாக திருப்பரங்குன்றம் சென்று, அங்கிருந்து  திரும்பும் வழியானது பழங்காநத்தம் - எல்லிஸ் நகர் புதிய சாலை வழியாக பெரியார் பேருந்து நிலையத்தை அடையும். இந்த பேருந்தில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5; அதிகபட்ச கட்டணம் ரூ.12.

இதற்கான அறிவிப்பு பலகையை ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் பெரிய அளவில் வைத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும். 



இந்தியாவில் வாழத்தகுந்த நகரங்களில் மதுரைக்கு 10வது இடம்...

டெல்லி-யில் உள்ள Institute for Competitiveness எனும் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மதுரைக்கு வாழ தகுந்த இடங்களில் 10வது இடம் கிடைத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 10-க்கும் மேற்பட்ட அம்சங்கள் ஆராயப்பட்டது. 
முக்கியமாக மக்களுக்கான கல்வி, பழமை, கலாசாரம், அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவ வசதிகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் உள்ள 100 நகரங்களுக்கும் மேல் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இறுதியில் 50 நகரங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டது. இந்த இறுதி பட்டியலின் படி, மும்பை மாநகரம் முதல் இடமும் சென்னை 2-ம் இடமும் பிடித்தது. மதுரை 10-ம் இடத்தையும் கோவை 14-ம் இடத்தையும் பிடித்தன. 10 இடத்திற்கு மேல் புனே-12, கோழிகோடு-21, கொச்சின்-24, விஜயவாடா-26, ஜெய்பூர்-26, போபால்-36, கான்பூர்-49 என மற்ற முக்கிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

மதுரை நகரில் ஒரு நாளைக்கு குறைந்தது 5டன் குப்பைகள் அள்ளப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குப்பையின் அளவும் கூடுகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளை மாசில்லா மதுரை என்ற திட்டத்தின் மூலம் மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் துப்புரவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாம் ஓரளவுக்காவது மாநகராட்சியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என நாமே வீட்டில் தரம் பிரித்தால் மாநகராட்சி குப்பை அள்ளும் ஊழியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த பட்டியலின்படி மதுரை நகரம் பல முக்கிய நகரங்களை பின்னுக்கு தள்ளி 10-ம் இடம் பிடித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. 

நம் மதுரை மாநகரை மாசில்லாத குப்பை, இல்லாத பெருநகராக மாற்ற உறுதியேற்போம்...

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment