Sunday 2 February 2014

உலக நாயகன் வாழ்வில் நட்சத் திரமாக வாழ்ந்த அற்புதமான நடிகர் நாகேஷ் அவர்கள் பற்றிய சிறப்பு பார்வை...




நாகேஷ் என்றால் நகைச்சுவை. புத்திசாலித்தனமான பாவனை வெளிப்பாடும் டைமிங் சென்ஸும் உடல் மொழியும் அவருடைய நகைச்சுவைக்குத் தனி ஈர்ப்பைத் தருகின்றன.

நாகேஷின் அட்டகாசமான நடிப்பை இன்றைய 'இளைய தலைமுறை' பார்த்து ரசிக்க வேண்டும் என்று இந்த வீடியோவை இங்கு கொடுத்துள்ளேன். இந்த மாதிரி காட்சியில் நாகேஷ் அளவிற்கு யார் சிறப்பாக  யார் நடிக்கமுடியும் என்று எண்ணியபோது....எவருமே, சார்லி சாப்ளின் உள்பட,  இப்படி நடிக்கமுடியாது  என்று தான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு? 

இளமை பருவம்...
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம்பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.
தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.

திரைப்படதுறை...
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார். அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிட ம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர்.'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி'என்றாராம் ராதா! 

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். 1960, 70-களில் எல்லா கிராமங்களிலும், ஏன் எல்லா தமிழகத் தெருக்களிலும் நாகேஷ் பாணியில் பேசி களிப்பூட்டும் காமெடியன் ஒருவன் இருப்பான். அதேபோல் தோளைக் குலுக்கி, காலை சற்றே வளைத்துப் பின்னால் சாயும் அதீத அட்ரினலின் (Adreneline) பாயும் நாளங்களுடன் பல நூறு நாகேஷ்கள். 
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன்,எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். 

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
திருவிளையாடல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், சர்வர் சுந்தரம் போன்றவை அவருடைய முதல் ரவுண்டு காமெடிகள். உடல் சேட்டைகளும் ஓங்கி ஒலிக்கும் குரலும் பிரதானமாக இருந்தன அதில். அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆழ்ந்த அமைதியான உடல் சேட்டைகள் குறைந்த காமெடிகள்.

எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

வலிகளை சுமப்பவர்களிற்கு மட்டுமே அதன் காயத்தின் ஆழமும் புரியும் , இதழ்களின் ஓரத்தில் புன்னகை தவழ்ந்தாலும் இதயத்தின் ஓரத்தில் இருக்கும் என் காயங்களை யாரும் அறிய போவதில்லை ...

போலியாய் சிரித்து சிரித்து என் உணர்சிகளும் மழுங்கிவிட்டது , எதை சொல்லி நிரூபிப்பேன் ??? நானும் உயிருடன் தான் வாழ்கின்றேன் என்று!!!!!! 



 கமல்ஹாசனுடன்   நாகேஷ்....
கமல்ஹாசனின் மகளிர் மட்டும் படத்தில் அவர் நடிப்பதை கமல்ஹாசன் இப்படி அறிவித்தார்:
“இந்தப் படத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார்.உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்” என்றார்.
ஒரு படத்தில் ஒரு நடிகர் முழுவதும் பிணமாகவே நடித்து சிரிக்க வைத்தது உலக சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று தோன்றுகிறது.


ஒரு முன்னுரை
வீடியோவை நிமிடம்  6.10 வரை நாகேஷ் நடிப்பை பாருங்கள். இந்த காட்சியில் நாகேஷ் ஏற்கனவே இறந்து விட்டார்; அவர் இறந்தது தெரியாமல் நடக்கும் சண்டையும்....அதில் நாகேஷ் பிணமாக நடிக்கும் காட்சியும் தான் நீங்கள் கீழே காணப்போகும் வீடியோ...!






படத்தில் நடிப்பதில் அவருடைய பங்கு முக்கியத்துவமானது என்பது மட்டுமல்ல. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் தரும் பங்களிப்புக்காகவும்தான் அவருக்கு இந்தத் தொடர்ச்சியான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.
‘பஞ்சதந்திரம்’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற சிறு சம்பவம் இது.
கமல்ஹாசன் எப்போதும் அதிக காரம் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கன் துண்டில் ஒட்டியிருந்த மசாலாவைத் தவிர்க்கும் விதமாக அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டினார். மசாலா விழுவதாக இல்லை. வேகமாகப் பலமுறை தட்டினார். அருகில் இருந்த நாகேஷ் லேசாகத் திரும்பிப் பார்த்து “என்னப்பா… கோழி சரியா சாகலையா. இந்த அடி அடிக்கிறே?” என்றார் கூலாக.
கமல் இதையெல்லாம் ரசிப்பார் என்று நாகேஷுக்குத் தெரியும். நாகேஷ் இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார் என்று கமல்ஹாசனுக்குத் தெரியும்.

’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ‘பஞ்சதந்திரம்,’ ‘தசாவதாரம்’ என கமல் பல படங்களில் நாகேஷைப் பயன்படுத்தியிருக்கிறார்.
 நாகேஷ்  கமல்ஹாசன் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் 'என்று சொன்னவர் கமல்ஹாசன்!

சாதனை ...

எம்.ஜி.ஆர், சிவாஜி, தொடங்கி, ரஜினி, கமல் எனத் தொடர்ந்து, அஜீத் விஜய் என விரிந்து, இன்று ஜீவா, சிம்பு காலம் வரை நடித்துக் கொண்டிருந்தவரைக் காலம் கொண்டு சென்று விட்டது.

நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் , பிணம் எனக் கொடுக்கப் பட்ட பாத்திரமாகவே மாறிய தன்மை நாகேஷுக்கு உரியது.

நடிப்புலக ஜாம்பவான்கள் கூட சற்று அசந்தால் நாகேஷ் தூக்கிச் சாப்பிட்டு விடுவார்.
அவருக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருது பெற்றுத் தந்த நம்மவரிலும், அந்தக் கடைசிக் காட்சியில் நடிக்காமல் நடித்திருப்பார்.

நாகேஷ் என்ற இன்னொரு நடிக இமயம் மறைந்து விட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் ஆளுமை செய்த ஒரு சிறந்த நடிகரைத் தமிழ்ப் படவுலகம் இழந்துவிட்டது.

தமிழ்  திரைப்படத்துறையில் இவ ருடைய இடம் நிரப்பப் பட முடியாத ஒன்று.



ஆக்கம்  & தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment