Thursday, 13 February 2014

குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு உள்ளதா?ஒரு சமுதாய பார்வை...

ஒரு குழந்தை தத்தெடுப்பது நம் இந்திய பாரம்பரியத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். பழைய இந்து தத்தெடுப்பு முறையில் குடும்ப பாரம்பரியம் தொடர, பெற்றோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்ய ஒரு ஆண் வாரிசு அவசியம் என்னும் கட்டாயத்தின் பேரில் தத்தெடுப்புகள் அனுமதிக்கப்பட்டன. தத்து எடுப்பதற்கோ, தத்து கொடுக்கவோ, ஒரு ஆணுக்கே உரிமை இருந்து வந்தது. தத்து எடுக்கப்படும் குழந்தையும், சொந்தத்தில் அல்லது அதே சாதியை சேர்ந்த ஆண் குழந்தையாக இருத்தல் அவசியம் என்ற கருத்தும் இருந்தது.ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உடன்படிக்கையில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உலகில் உயிர்வாழும் உரிமை உள்ளது. குடும்பத்தோடுதான் குழந்தைகள் இருக்க வேண்டும். எனவே, குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை. 

சராசரியாக ஒரு குழந்தையை தத்தெடுக்க, 25 பெற்றோர் காத்திருக்கின்றனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.பத்துமாத பந்தத்தை பத்திரமாய் கைகளில் அள்ளிச் சுமக்கும் வாய்ப்பு... நல்ல பெற்றோருக்கு கிடைக்காமல் போகிறது.மழலையின் சிரிப்பை பார்க்கும் போதெல்லாம், நம் வீட்டிலும் இந்த சிரிப்புச் சத்தம் கேட்காதா என, ஏங்கித் தவிக்கின்றனர், இவர்கள்.


இந்த வலியும், வேதனையும் ஒருபுறம்.இன்னொரு புறமோ வேண்டாமென்றாலும் குழந்தைகள் உருவாகின்றன. அவை சிலநேரங்களில் கருவாக கலைக்கப்படுகின்றன. அப்படியே உருவானாலும், வேண்டாப் பொருளாய் தூர எறியப்படுகின்றன. இப்படி ரோட்டில் வீசி எறியும் எண்ணற்ற மழலைகள் இறப்பது தான், தாங்க முடியாத வேதனை.மழலையில்லா பெற்றோருக்கு தத்தெடுப்பதில் இன்னமும் தயக்கம் நிலவுகிறது. அதற்கான நடைமுறைகள் அதிகமோ... நமக்கு குழந்தை கிடைக்குமோ என்ற சிந்தனையும் காரணம். தத்தெடுக்கும் நடைமுறை எளிது தான். மழலையர்களும் நல்ல பெற்றோருக்காக காத்திருக்கின்றனர். 

குழந்தைகளைத் தத்தெடுத்த பெற்றோர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தவிருக்கிறார்கள் சரஸ் பாஸ்கர் மற்றும் வர்ஷா ஸ்வாமி. சரஸ் பாஸ்கர் ஓர் உளவியல் ஆலோசகர். தத்து அளிக்கு ஏஜென்சிகள் சிலவற்றின் ஆலோசகரும்கூட. வர்ஷா ஸ்வாமியும் முதுகலைப் படிப்பில் உளவியலை முக்கியப் பாடமாக எடுத்துக் கொண்டுள்ளவர். இருவரும் அடாப்ஷன் அனுபவங்களை முதன்மையாகக் கண்டறிந்து தீர்வு காண்பவர்கள் ...
தத்தெடுத்த பெற்றோருக்கென்று தனிப்பட்ட பிரச்னைகள் என்னவாக இருக்கும்?
சரஸ் பாஸ்கரின் கருத்து இது. "குழந்தைகளைத் தத்தெடுக்கும்போது இருதரப்பிலுமே சிலவகைப் பிரச்னைகள் உண்டாகலாம். பெற்றோரில் ஒருவர் முழுமனதுடனும் மற்றொருவர் அரைகுறை மனதுடனும் தத்தெடுத்திருக்கலாம் அது பிரச்னைக்கு வழவகுக்கும். எனவே கணவன் – மனைவி இருவருக்கும் முழுமையான பக்குவம் வந்த பிறகு தத்தெடுத்துக் கொள்வதுதான் நல்லது.

மூன்று மாதங்கள் நிரம்பியபிறகு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்கிறது தற்போதைய இந்திய சட்டம். சற்றே வளர்ந்த குழந்தைகளை (அதாவது நான்கு வயதுக்கு மேற்பட்ட என்று வைத்துக் கொள்ளலாம்) தத்தெடுக்கும்போது அந்தக் குழந்தையின் மனதில் ஒருவித பயம் தோன்ற வாய்ப்பு உண்டு. வளர்த்த (சிறுவர் காப்பகம், அனாதைகள் விடுதி போன்றவை) சூழலில் இருந்து மாற்றம் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகள் தங்களை சமாளித்துக் கொள்ள கொஞ்ச கால அவகாசம் தேவை. அதுவரை பொறுமையாகக் காத்திருங்கள். குழந்தையின் இயல்பினைப் புரிந்துகொள்ளுங்கள்.

தங்கள் ஒரே குழந்தையை ஏதோ விபத்தில் பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோர்கள் அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக உடனே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்கிறார்கள். இது ஒரு வகையான சுயநலம்தான். இது மட்டுமல்ல, அந்தக் குழந்தை இறந்த தனது குழந்தை போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது சிக்கல்கள் எழலாம். என் ஆலோசனை இதுதான். முதலில் உங்கள் சோகத்திலிருந்து வெளியே வாருங்கள். அதற்குப் பிறகு தத்தெடுத்துக் கொள்ளலாமா என்பதைப் பற்றி யோசியுங்கள்’.
இவர்கள் நடத்தும் கருத்தரங்கில் எந்த மாதிரிக் கேள்விகளை எதிர்பார்க்கிறார்கள்? 

குழந்தையின் எந்த வயதில் தத்து விவரத்தைக் கூறலாம்? அதை அம்மா சொல்ல வேண்டுமா? அப்பா சொல்ல வேண்டுமா? இதில் பெற்றோரின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? தத்துக் குழந்தைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மேலும் கடினமானதா? எங்கள் வீட்டு சூழலுக்கேற்ப அந்தக் குழந்தை மாறிக் கொள்வதாகத் தெரியவில்லையே! என்பது போன்ற கேள்விகளை எதிர்பார்க்கிறேன். மற்றபடி மனித மனங்கள் சிக்கலானவை என்பதால் எந்த வடிவிலும் சந்தேகங்கள் வரக்கூடும்.

தியரியாகத் தெளிவாகத் தெரிவதெல்லாம் நடைமுறையில் என்ன விளைவுகளை உண்டாக்குகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக நேரடியாகவே சில சந்தேகங்களை வெளிப்படுத்தினோம்.

உங்களைப் பெற்ற அம்மாவைப் பற்றி அளிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்வீர்களா? என்று வர்ஷாவிடம் கேட்டோம்.நிச்சயமாக இல்லை. இவர்கள் என்னைப் பெற்ற அம்மாவைப் பற்றி ஏற்கெனவே எல்லா விவரங்களையும் தெரிவித்துவிட்டதால் மேற்கொண்டு அவர்களைப் பற்றிய அறிய ஆர்வம் இல்லை.

உங்களைக் கைவிட்டதில் உங்களைப் பெற்ற அம்மாவின் மீது ஆத்திரமும், சோகமும் வந்ததா? என்ற கேள்விக்கு எதிர்பாராத பதில் கிடைத்தது.இல்லை. மாறாக அவளிடம் எனக்கு மதிப்பு உண்டானது. ஒரு நம்பகமான ஏஜென்சியை அணுகி, உன்மையைக் கூறி, பிரசவித்தவுடன் நல்லதொரு குடும்பத்தில் தன் குழந்தையை தத்துக் கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார். இதுதவிர என்னுடைய இந்தப் பெயரே என்னைப் பெற்ற அம்மாவினால் சூட்டப்பட்ட பெயர்தான். இது பாராட்டவேண்டிய செயல்தானே?
கருத்தரங்கம் பற்றிய விவரங்களுக்கு: தொலைபேசி எண் – (0)98848 30504)
மதுரையில், கிரேசுகென்னட் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மழலை இல்லத்தில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு, தத்து கொடுக்கப்படுகின்றனர். தத்து கொடுக்கும் நடைமுறைகள் குறித்து, மழலை இல்ல திட்டத் தலைவரான டாக்டர் அகஸ்டஸ் சாமுவேல் டாட் கூறியதாவது:பிறந்த குழந்தை முதல், 12 வயது வரையுள்ள குழந்தைகள் 20 பேர் தற்போது உள்ளனர். 1978லிருந்து தத்து கொடுக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளாக, நான் நிர்வகிக்கிறேன்.ஆண்டுக்கு 40 குழந்தைகள் வரை தத்து கொடுக்கிறோம். மருத்துவமனை மூலம்கிடைக்கும் வருமானத்தில் தான் மையத்தை நடத்துகிறார்கள். 

வெளிநாட்டு நிதிநிறுவனத்திடம் நன்கொடைவசூலிப்பதில்லை. நியாயமான பெற்றோரிடம் குழந்தை சேரவேண்டும் என்பது தான் ஆசை. இங்கே குழந்தைக்காக ஒரு குடும்பத்தை, பெற்றோரை அமைத்துக் கொடுக்கிறோமே தவிர, பெற்றோருக்காக குழந்தைகளை தருவதில்லை. ஒருசிலர் நிறம், அழகு இவற்றைப் பார்த்து தேர்வு செய்வர். பெரும்பாலானோர் குழந்தையை பார்த்தமாத்திரத்தில் தேர்வு செய்து விடுவர். ஏனென்றால் பிள்ளை இல்லாத வலி, அவர்களுக்கு தான் தெரியும்.

தத்து கொடுக்கும் குழந்தைகள் உண்மையிலேயே நல்ல நிலைமையில் வளர்கின்றன. உண்மையான பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் கூட சில விஷயங்களில் நம்மோடு முரண்படலாம். உறவை இழந்த குழந்தைக்கும் பெற்றோரின் அருமை தெரியும். குழந்தை இல்லாத பெற்றோருக்கும் பிள்ளையின் அருமை புரியும். இந்த புரிதல் இருப்பதால், குழந்தைகள் நன்றாகவே வளர்கின்றன.
ஒருவர் ஒரு குழந்தையை தத்தெடுக்க என்ன  தகுதி வேண்டும்... 

  1. அவரின் வருமானங்கள், தகுதியானவரா போன்றவை பரிசீலக்கப் படும்.
  2. அது, ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று நீங்கள் தீர்மானிக்கப் படாது. (உங்கள் வளர்ப்பில் தங்கியுள்ளது)
  3. நீங்கள் தத்து எடுத்த குழந்தை, ஆகக் குறைந்தது 20 வயது மட்டும் தனது பெற்றோரை பற்றியோ, உறவினர்களைப் பற்றியோ தகவல் இருக்கப் படாது. இது மிக சிக்கலான விடயம். ஆனால் துணிந்தவர்களுக்கு பிரச்சினை இல்லை.
  4. இதனை வெகு அவதானமாக கையாளவேண்டும். இதில் தங்கியிருப்பது குழந்தையின் சந்தோசமும், உங்கள் சந்தோசமும் என்பதை மறக்கவே... கூடாது.நீங்க நினைக்கிற மாதிரி, நினச்சவுடன் கடையில் வாங்கும் பொருள் இல்லை.
  5. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.
  6. தம்பதியரின் கூட்டு வயது 90க்குள் இருந்தால் மட்டுமே, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க முடியும்.
  7. திருமணமாகாமல் தனியாக வாழும் ஆண், பெண்கள்25 முதல் 50 வயதுக்குள் இருந்தால், மூன்று வயது வரை தத்தெடுக்கலாம்.
  8. திருமணமாகாத ஆண்கள், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
  9. குழந்தையை பராமரிப்பதற்கு தேவையான பொருளாதார வசதி இருக்க வேண்டும்.அருகில் உள்ள தத்தெடுப்பு மையங்களை அணுகி, பெயரை பதிவு செய்ய வேண்டும்.


www.adoptionindia.nic.in இணையதளத்தில் பெயரை பதிவு செய்யலாம்.
மதுரையில் கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் - மழலைஇல்லம், 8, கென்னட் ரோடு, எல்லீஸ்நகர், மதுரை - 625 016. போன்:0452 -260 1767.

சட்டம்...

1956-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட “இந்து சுவீகாரம் மற்றும் பராமரிப்பு சட்டத்தின்” மூலம் முன்பு இருந்த சில தடைகள் உடைக்கப்பட்டன. இருந்தபோதும், வேறு சாதியைச் சேர்ந்த குழந்தையை தத்தெடுக்க நம் இந்திய பெற்றோர்கள் தயக்கம் காட்டிய அக்கால கட்டத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த பலர், நம் இந்தியக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முன்வந்தனர். தகுந்த சட்டங்களோ, நடைமுறை விதிகளோ இல்லாத காரணத்தால், தனிநபர்கள், நிறுவனங்கள் என்று யார் வேண்டுமானாலும், அனாதை குழந்தைகளை வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தத்துக் கொடுக்க தொடங்கினர்.

1970-ம் ஆண்டில் இருந்து 1983-ம் ஆண்டு வரை பல குழந்தைகள் ஐரோப்பா, அமெரிக்கா போன்றநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் இப்போதும் யாருக்கும் தெரியாது. அந்த குழந்தைகளில் சிலர் 21 வயது நிரம்பிய பின் தங்கள் பின்னணியை அறியும் ஆவலுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

 மேலும் சட்டம் பற்றிஅறிய ...
http://www.peoplesrights.in/tamil/?p=28

குழந்தையை தத்தெடுப்பது  பற்றி  இஸ்லாம் என்ன கூறுகிறது ?

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/thatheduthal_kooduma/

எனது கருத்து...
                               அரசு மருத்துவமனை தொட்டில் திட்டத்தில், பெற்றோரால் கைவிடப்படுவது, தானாக வந்து ஒப்படைப்பது என, குழந்தைகள் மூன்று விதங்களில் கிடைக்கின்றனர். குழந்தை வேண்டாமென்றால், இங்கேயே வந்து பெற்றோர் கையெழுத்திட்டு ஒப்படைத்துச் செல்லலாம். அந்த குழந்தை நிம்மதியாக வேறொரு பெற்றோரிடம் வளரும். அதை விட்டு, எங்கேயோ சாகும் நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டாமே!!
ரு குழந்தையை தத்தெடுப்பது  ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.நீங்கள் தத்தெடுப்பது என்ற ஒரு முழு மனதான முடிவோடு இருப்பீர்கள் ஆனால் அதற்குரிய தகுதிகள் கால நேரத்தின் அடிப்படையிலோ மனநிலையின் அடிப்படையிலோ நடை முறைக்கு சாத்தியப் படுமா என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு குழந்தைக்கு தாயும், தந்தையும் செய்யும் அத்தனை கடமைகளையும் செய்யத் தயாரான மன நிலை உங்களிடம் இருக்கின்றதா? ('சொந்த ரத்தம்' இல்லைத் தானே என்ற ஒரு எண்ணம் வருமாக இருப்பின் நீங்கள் இந்த எண்ணத்தைக் கைவிடுவது உங்களுக்கும், தத்து எடுக்க இருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம்.)

இந்தக் கடமைகளை நீங்கள் செய்வதற்கு உங்கள் வேலை, படிப்பு, நீங்கள் கொண்டுள்ள சமூக வாழ்க்கை முறை நடுவில் உங்களால் நேரத்தை ஒதுக்கி அந்தக் குழந்தைக்கும் முன்னுரிமை கொடுத்து வாழ உங்கள் மனநிலை தயாரா உள்ளதா?

குழந்தையின் முழு வளர்ச்சியில் உங்களால் தேவையான கவனம் கொடுத்து அக்குழந்தையைப் பராமரிக்க இயலுமா?

குழந்தையில் அன்பு காட்ட உங்களைத்தவிர உங்கள் உறவினரோ, நண்பர்களோ முன்வருவார்களா என்று யோசித்துப் பாருங்கள். குழந்தைகளை நாலு சுவருக்குள் வைத்து வளர்ப்பது சுலபமானதில்லை, அது அவர்களுக்குரிய வாழ்க்கை முறையும் இல்லை. 
இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் நீங்கள் அவசரத்திற்கு ஒரு நேரம் அவர்களின் உதவியை நாடிய பின்பு நீங்கள் சொல்லாமல் வைத்திருந்த குழந்தை பற்றிய ரகசியங்களை அவர்கள் குழந்தையின் மனநிலை அறியாமல் சொன்னால் அதன் பின்விளைவுகளை நீங்கள் தான் தனியாக முகம் கொடுக்கவேண்டி வரும். அதன் பிறகு அக்குழந்தையின் நிலையை யோசித்துப் பாருங்கள்...
நீங்கள் குழந்தை தத்தெடுத்த பின்பு அக்குழந்தையின் மனநிலையை நன்கு அறிந்தே அக்குழந்தையிடம் உண்மைகளை சொல்ல வேண்டும். இல்லையேல் குழந்தையின் மனநிலை பாதிக்கப் படும் அதே நேரம் உங்கள் மனநிலையும், நேரமும் எடுத்த முயற்சியும் பாத்திக்கப் பட்டு விடும்.

உங்கள் நோக்கமும் வெற்றி அளிக்க வாழ்த்துக்கள் !!

ஆக்கம் & தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment