Monday 2 February 2015

கங்கை நதி கழிவு ஆறாக மற்றும் தமிழ்நாடு நிலத்தடி நீரை நச்சாக மாற்றி வரும் குரோமியம் கழிவு பற்றிய சமூக விழிப்புணர்வுப்பார்வை..

கங்கை நீரில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தில் இயங்கி வரும் அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின்போது கங்கை நீரை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியது. அப்போது அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த தண்ணீரில் நச்சுத்தன்மை கொண்ட குரோமியம்  கலந்திருந்ததாகவும், நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய வகை இந்தத் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் என்.சி.சி.எம். தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார். அதிகளவில் காணப்படும் இந்த நச்சுத்தன்மையானது புற்றுநோய் உட்பட பல நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
தோல் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, எனப் பல்வேறு தொழிற்சாலைகளிலும், அவர்கள் உருவாக்கும் ரசாயனக் கழிவுகளை அங்கேயே வடிகட்டி, வேதிப் பொருட்கள்  கலந்து நச்சுத்தன்மையை அகற்றி, ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் நன்னீராக்கி, சூரிய ஒளியில் காயவைத்து, பிறகுதான் வெளியேற்ற வேண்டும். இதுதான் வழிமுறை என்பது புத்தகங்களில் மட்டுமே உள்ளது என்பதுதான் இன்று நாடு முழுவதிலும் நடந்து கொண்டு இருக்கிறது. இதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தடுத்து நிறுத்துவதில்லை.
தமிழகத்தில் சாயப் பட்டறைக்  கழிவுகளைப் போல  பல மடங்கு தீமை விளைவிக்கக்கூடியவைதான்  தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகள். இருந்தும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததற்கு காரணம்- துறைசார்ந்த அதிகாரிகளின் உடந்தையும், வேலூர் மாவட்டத்தின் கட்சிப் பாகுபாடு அற்ற அரசியல்வாதிகளின் தலையீடும்தான் என்கிற போது பகீர் என்கிறது.

ராணிபேட்டை சிப்காட் தொழிற்பேட்டை
ராணிபேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் டி.சி.சி.எல். நிறுவனத்தின் குரோமியம் கழிவு குவிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் 30கிமீ சுற்றுப்பாதையில் நிலத்தடி நீர் நச்சுமயமாக மாறிவருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டி.சி.சி.எல். நிறுவனத்தின் டன் கணக்கிலான குரோமியம் கழிவுகள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீர் ஏற்கெனவே அப்பகுதிகளில் நச்சுமயமாகியுள்ளது என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
1976-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டி.சி.சி.எல். நிறுவனம் சோடியம் டை குரோமேட், குரோமியம் சல்பேட், மற்றும் சோடியம் சல்பேட் போன்ற ரசாயனங்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த நிறுவனம் 1995ஆம் ஆண்டு தன் உற்பத்தியை நிறுத்திவிட்டது. ஆனால், இந்த நிறுவனத்தினால் விளைந்த சுமார் 1.5 லட்சம் டன்கள் குரோமியம் கழிவு அங்கு பெரும் நிலப்பகுதியை ஆக்ரமித்து சுகாதார கேடுகளை விளைவித்து வருகிறது.

ஒரு மரண நிகழ்வுதான்  ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் 10 தொழிலாளர்கள் தொட்டிச் சுவர் இடிந்து உறக்கத்திலேயே பரிதாபமாக இறந்து போனது. நெஞ்சைக் கனக்கவைக்கும் இந்த மரணம் நாகரீக சமுதாயத்தின் முன்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

நச்சுக் கழிவு கொட்டப்பட்டுள்ள 12 இடங்கள்..
இது போன்ற தொழிற்சாலை நச்சுக் கழிவுகள் 12 இடங்களில் கொட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அடையாளம் கண்டுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 20 ஆண்டுகளாக கவனிப்பாரற்று அபாயம் விளைவிக்கும் குரோமியம் கழிவுகள் 2 முதல் 4 ஹேக்டேர் நிலப்பரப்பில் சுமார் 3 முதல் 5 மீட்டர்கள் உயரத்திற்கு குவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதிலிருந்து தோன்றும் மஞ்சள் நிற நச்சுப்பொருள் நிலத்தடி நீருக்குள் ஊடுருவுகிறது.
இந்தக் கழிவுகள் பாதுகாப்பான இடங்களில் கொட்டப்பட்டிருக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
புற்று நோயை உருவாக்கும் குரோமியம்..
வி.ஐ.டி. பல்கலைக் கழக கரியமில வாயு மற்றும் பசுமை தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் ஆர்.நடராஜன் கூறும் போது, “குரோமியம் ஒரு கன உலோகம். இது புற்று நோயை உருவாக்குவது. இந்த மாவட்டத்தில் சுமார் 30 கிமீ சுற்றுப்பரப்புக்கு நிலத்தடி நீர் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது என்று ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது, மேலும் இந்த குரோமியம் கழிவை பயனுள்ளதாகவும் மாற்ற முடியும்.”என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு இயக்கத்தின் செயலர் அசோகன் கூறும் போது, “மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தினாலும் செயலற்ற தன்மையினாலும் இன்று குடிநீர் நச்சுமயமாகியுள்ளது, மக்கள் அதனை குடித்தும் வருகின்றனர்.”என்றார். 
இந்த குரோமியம் கழிவை எப்படி அகற்றுவது என்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.ஆனால், நாள்தோறும் நச்சுக் கழிவுகளின் பாதிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் ராணிப்பேட்டை சுற்றுவட்டார மக்கள், ஏறத்தாழ 10 லட்சம் பேர். இந்த உண்மை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கண்களில் படுமா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா?.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாய வாழ்க்கை அழிந்து போயுள்ளது  என்பது அரசுக்கும்  அரசியல்வாதிகளுக்கும்,  நன்றாகவே தெரியும். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆலை ரசாயனக் கழிவுகளை ஆற்றில் கலக்கவிடுவதில் அவர்களுக்கு எந்தவிதமான கவலையோ, வருத்தமோ கிடையாது என்பது எத்தகைய கொடுமையானது?

விபத்தில் மரணம் அடைந்தால் சில லட்ச ரூபாய்கள் இழப்பீடு வழங்கினால் மட்டும் போதாது. மீண்டும் அது போன்ற கொடிய விபத்துகள் மனித உயிர்களைக்  காவு வாங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை பொது சுத்திகரிப்பு நிலைய திடக்கழிவின் நெடி தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.மாநிலம் முழுக்க  பல்வேறு தொழிற்கூடங்களில் தனியாகவும், கூட்டாகவும் இயங்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும், சாயப் பட்டறைகளும்  இதே தரத்திலானவைதான் என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையங்களை ஆண்டுதோறும் முறையாக சோதனை செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உண்டு. அந்த அதிகாரிகள் முறையாக சோதனை செய்தார்களா? என்பது முதல் கேள்வியாக  முந்திக் கொண்டு வருகிறது.

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment