Tuesday, 10 February 2015

ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கான முக்கியக்காரணங்கள் !! ஒரு சிறப்பு விழிப்புணர்வு கட்டுரை..


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை ஆம் ஆத்மி 49 நாட்களில் தன் ஆட்சியை துறந்ததையடுத்து இந்த முறை அந்தக் கட்சி வெற்றி பெறுவது கடினம் என்றும், லோக்சபா தேர்தல்களில் பாஜக சந்தித்த மிகப்பெரிய வெற்றிகளை அடுத்து டெல்லியிலும் மக்கள் பாஜக-விற்கு வாக்களிப்பார்கள் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றிபெற்றதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன.
முதலில், ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெரிந்தாலும், வாக்குகள் வித்தியாசம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எதிர்மறை வாக்குகள் ஆம் ஆத்மி சார்பாக விழுந்துள்ளதாகக் கூற வாய்ப்பில்லை. 

ஆம் ஆத்மியின் இத்தகைய வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. குறிப்பாக டெல்லியில் உள்ள பெரும்பான்மை மக்கள், குறிப்பாக சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ளவர்கள் ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாட்கள் ஆட்சி தங்களுக்கு நல்லது செய்ததாக உணர்ந்தனர். குறிப்பாக போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் சில்லறை லஞ்சம் ஒழிக்கப்பட்டது. மின்சாரக் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் மக்களுக்கான முறையில் அமல் செய்யப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி வெறும் எதிர்கட்சி மட்டுமல்ல நல்லதைச் செய்யும் கட்சி என்ற நம்பிக்கையை அடித்தட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. 

இரண்டாவது மிக முக்கிய காரணம், லோக்சபா தேர்தல் முடிவுகளால் அந்தக் கட்சி ஒன்றும் ஆடிப்போய்விடவில்லை. அதன் பிறகு கட்சியை ஒருங்கிணைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஒதுக்கப்பட்ட தொகைகளில் திட்டங்களை நடைமுறைப் படுத்தினர். இதனால் தொண்டர்களின் செயல்பாடுகள் புது உத்வேகம் பெற்றன. இதனால் சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினர்களுடன் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. மேலும் உள்ளூர் பகுதிகளுக்கான தேர்தல் அறிக்கைகளும் தனியே உருவாக்கப்பட்டது. 

இவையெல்லாம் நடைமுறைப்படுத்துதலில் ஆம் ஆத்மி காட்டிய முனைப்பை வெளிப்படுத்துவதாக அமைய, அரசு எந்திரத்தை மக்கள் சேவைக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. இது போன்ற நம்பிக்கைகள்தான் ஆம் ஆத்மி தொண்டர்களை உத்வேகப்படுத்தியது. 

பொதுவாகக் கூறவேண்டுமெனில், ஆம் ஆத்மியின் அரசியல் செயல்முறை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே. இதில் பயனடைந்தவர்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களே. இந்தப் பயன்கள் மிகப்பெரிய அளவில் அல்ல, இன்னும் சொல்லப்போனால் தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளை விடவும் குறைவானதுதான். ஆனால், வாக்களிப்பது என்பது தங்களது அன்றாட வாழ்வை மாற்றியமைக்கும் ஒரு விஷயம் என்பதை ஆம் ஆத்மியின் செயல்பாட்டு அரசியல் எடுத்துரைத்துள்ளது. சமூக படிமுறை அமைப்பில் கீழே உள்ளவர்களின் எண்ணங்கள் நடுத்தர மக்களையும் பீடித்தது இந்த தேர்தலில் காணமுடிந்தது. பொதுவாக ஏழைகளுக்கான எந்த ஒரு செயல்திட்டமும் வெகுஜன சாமர்த்திய பேச்சு என்றும் ஜோடனை என்றும் பேசப்பட்டு வந்த நிலையில் இத்தகைய அரசியல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது.

மேலும், ஆம் ஆத்மி பேசிய வர்க்க அரசியல் மொழி நடுத்தர வர்க்கத்தினரை அச்சுறுத்துவதாக இல்லை. தங்களது நிலைக்கு ஆபத்து வராத நிலையில் ஏழைகளுக்கான அரசியலை அவர்கள் ஆதரிக்கவே செய்தனர். வர்க்க அரசியலின் புதிய மொழியாகும் இது. அதாவது செய்து முடிப்பது என்ற இந்த நடைமுறை பல்வேறு வர்க்கத்தினரையும் ஒன்று திரட்டியுள்ளது. 

பாஜக தோல்வியடைந்ததும் ஆச்சரியமானதே. முதற்படி காரணம் சிறுபான்மையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.-இன் செயல்பாடுகள். இது சிறுபான்மையினரிடத்திலும் கடமை உணர்வு கொண்ட மதச்சார்பற்றவர்கள் மத்தியிலும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்துத்துவா அமைப்புகளின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் அன்றாட வாழ்க்கைக்கும், வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதற்கும் எந்த விதத்திலும் உதவப்போவதில்லை என்பதோடு அதனை திசைதிருப்புவதாக அமையும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டுள்ளனர். மேலும் அரசின் முகமாகத் தன்னை வரிந்து கொண்ட நரேந்திர மோடி அரசின் செயல்திறமின்மையை இந்த முடிவுகள் பறைசாற்றுகின்றன. 


டெல்லி மக்களின் முடிவுகள் பாஜக அரசின் மீதான கோபம் அல்ல. மாறாக தனது ஆட்சிக்கு விளம்பரம் தேடும் செயல்பாடாக இருப்பதோடு, செயல்திறனுள்ள அரசாக இல்லை. மேலும், பாஜக தற்போது பணக்காரர்களுக்கான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்சி என்பதும் உறுதியாக நம்பப்படுகிறது. மத்தியதர வணிகர் மற்றும் அரசு ஊழியருக்குமே இந்த அரசு ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற அச்சம் எழுந்துள்ளது. பெரும்பான்மை மக்களுக்கான தாராளமய பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்பது பல சந்தேகவாத இடதுசாரிகளுக்கு புரட்சி எப்படியோ அப்படியாகிவிட்டது. ஏழைகளை உள்ளடக்கிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் எப்போதும் வந்து கொண்டேயிருக்கிறது, வந்து ஒரு போதும் சேர்வதில்லை. இறுதியாக பாஜக செய்த பல தவறுகள் அதன் தொண்டர்களை உற்சாகமிழக்கச் செய்து விட்டது. இந்தத் தேர்தலில் பாஜக போஸ்டர்கள் அதன் தொண்டர்களை விட அதிகம் காட்சியளித்தது. அக உறுதிப்பாடு இல்லாத எந்தக் கட்சியும் இத்தகைய தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாததே. 

இந்தத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை முன்னமேயே தீர்மானிப்பது கடினம். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான, மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை பாஜக கடைபிடித்தால் 2 கட்சி தேர்தல் நடைமுறைகளில் பாஜக முடக்கப்படும் என்பதே. மேலும், காங்கிரஸ் தோல்விக்குக் காரணமான தாராளவாத பொருளாதாரக் கொள்கையை பாஜக மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும் அவசியம். 

ஆகவே ஏழை மற்றும் சுற்றுச்சூழல் அக்கறைகள் சார்ந்த திட்டங்களுக்குத்தான் வரவேற்பு கிடைக்கும் என்பதை உணர்வது நலம். அனைத்துக் கட்சிகளும் படைப்பாற்றலுடன் சிந்திக்க வேண்டும் அதனை விடுத்து நவ-யுக பொருளாதார சீர்த்திருத்தங்களை அதன் வாஷிங்டன் போதகர்களிடமிருந்து பெறுவதைத் தவிர்ப்பது நலம். 

மேலும் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல் முடிவுகளினால் வெறுப்படைந்த மத்திய அரசைக் கடந்து தனது மக்கள் அரசியலை சீரிய முறையில் எடுத்துச் செல்வது மற்ற மாநிலங்களின் நகர்சார் அரசியலையும் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : பி.கே.தத்தா, கட்டுரை ஆசிரியர் ( டெல்லி பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.)

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment