பொய்க்கால் குதிரை ஆட்டம் தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலில் வந்து, பின்னர் பிற பகுதிகளுக்கும் பரவியதாகவும் கூறுகிறார்கள். இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இந்தக் கலை நடத்தப்படுகிறது. இதுகரக ஆட்டத்தின் துணை ஆட்டமாகவும், தனி கலையாகவும் நடத்தப்படுகிறது. கோவில் சார்ந்த கலைகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.ஆரம்பத்தில் இந்த ஆட்டத்திற்குக் ‘கொந்தளம்’ என்ற இசைக்கருவி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இது மராட்டியர்களுடன் தொடர்புடையது.
தமிழகத்தில் பெரும் சிறப்போடு விளங்கும் பொய்க்கால் குதிரைக்கலை கர்நாடகத்தில் 1939-ஆம் ஆண்டில் அறிமுகமானது. அதுவரை பொய்க்கால் குதிரைஆட்டத்தைப் பார்த்திராத கர்நாடக மக்கள், வீர சிவாஜி, சாலிவாகனன், தேசிங்குராஜன், பிரித்வி ராஜ் போன்ற அரசர்கள் பொய்க்கால் குதிரைமீது அமர்ந்து துள்ளி விளையாடுவதைக் கண்டு வியந்தனர். அன்று முதல் இன்று வரை கர்நாடக கிராமியக்கலைகளோடு தமிழர்கலையாம் பொய்க்கால்குதிரை ஆட்டமும் கன்னட மக்களால் ஏற்கப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் பொய்க்கால் குதிரைக்கு "கீளு குதிரே' என்ற பெயரையும் சூட்டி, அதை பிரபலப்படுத்தி அரசின் அங்கீகாரத்தையும் பெற்றவர்கள் த.சி.சுந்தரமூர்த்தியும், அவரது மகன் சு.யோகலிங்கமும்தான்.
96 வயதில் தனது அனுபவங்களை விவரிக்கிறார் த.சி.சுந்தரமூர்த்தி:
""புரவியாட்டக்கலை, புரவிநாட்டியம், பொய்க்கால் குதிரை என்று பலபெயர்களில் அறியப்படும் இந்த கலை சங்ககாலத்திலேயே இருந்ததற்கான இலக்கியச்சான்றுகள் கிடைக்கின்றன. பொய்க்கால் குதிரை, தமிழ்நாட்டுக்கே உரிய தனி நாடோடி நடனமாகும். உலகத்தில் வேறெந்த பாகத்திலும் இத்தகைய நடனம் கிடையாது.
இப்போது பாண்டு வாத்தியமும் இசைக்கப்படுகிறது. முன்காலத்தில் காமன் பண்டிகை விழாக்களிலும் இந்த ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. தஞ்சை மன்னர்கள் ஊர்வலம் வரும்போது ராஜா, ராணி போலவே குதிரையாட்டக்காரர்கள் வேடம் தரித்து செயற்கைக்குதிரைகளின் மேல் ஆடிக்கொண்டு போவது வழக்கம்.
தஞ்சாவூரில் புகழ்பெற்று விளங்கிய இக்கலையை 1939-ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் அறிமுகம் செய்தேன். என்னுடைய குடும்பமே பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது. எனது மனைவி அனுசுயா, மகன் யோகலிங்கம், மகள் சந்திரகலா ஆகியோர் ஆரம்பகாலம் முதல் பொய்க்கால் குதிரை ஆடிவந்தனர். மகன் யோகலிங்கம் தனியாக ஆடத் தொடங்கினார்.
தமிழக முதல்வர் அண்ணா தலைமையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பொய்க்கால் குதிரை ஆடியுள்ளேன். கர்நாடகம் தவிர, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள், வெளிநாடுகளில் புரவியாட்டம் ஆடியுள்ளேன். என்னுடைய கலையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணியும், கர்நாடக அரசு ராஜ்யோத்சவா விருதும்வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது'' என்றார்.
அவருடைய மகன் யோகலிங்கம் கூறியது:
" 1962-ஆம் ஆண்டு முதல் பொய்க்கால் குதிரை ஆடிவருகிறேன். எனது தந்தை சுந்தரமூர்த்தி தான் எனது குரு. தமிழகக்கலையான பொய்க்கால் குதிரையை கர்நாடகத்தில் பிரபலப்படுத்தியுள்ளோம். பொய்க்கால் குதிரையில் பல புதுமையைப் புகுத்தியுள்ளேன். கர்நாடகத்தின் எல்லா விழாக்களிலும் பொய்க்கால் குதிரையை ஆடியுள்ளோம்.
இதுவரை 12 ஆயிரம் நிகழ்ச்சிகளில் ஆடியுள்ளேன். பஞ்சாப், ஆந்திரம், ராஜஸ்தான், புதுதில்லி, கோவா போன்ற மாநிலங்களிலும், தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், மலேசியா,
மொரீஷியஸ், பிரான்ஸ் நாடுகளிலும் பொய்க்கால் குதிரையை ஆடியுள்ளேன். நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள சில கன்னடப்படங்களில் பொய்க்கால் குதிரை ஆடியுள்ளேன். மைசூர் தசரா விழா, புதுதில்லியில் நடந்த குடியரசு, சுதந்திரதினவிழாக்களிலும் கலந்து கொண்டு ஆடியுள்ளேன். சங்கங்கள், மன்றங்கள் போன்ற அமைப்புகள் என்னைப் பாராட்டி விருது வழங்கியிருந்தாலும், அரசு சார்பில் விருது எதுவும் வழங்கப்படவில்லை.
கிராமியக்கலைகளை போற்றி பாதுகாத்துவரும் எங்களை போன்ற கலைஞர்களை அரசுகள் அங்கீகரித்தால், பொய்க்கால் குதிரை போன்ற கிராமியக்கலைகள் வளரும். இந்தக் கலையை கற்க ஆர்வமாக இருந்தால், அவர்களுக்கு கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறோம்'' என்றார்.
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment