Thursday, 19 April 2012

‘அக்னி,5’ ஏவுகணை சோதனை -ஒரு பார்வை.


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper1500 கிலோ எடை கொண் அணுகுண்டை சுமந்துகொண்டு 5 ஆயிரம் கி.மீ. தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கி அழிக்க கூடிய ‘அக்னி,5’ ஏவுகணை சோதனை இன்று காலை வெற்றிகரமாக நடந்தது. ஒடிஷாவில் உள்ள வீலர் தீவில் இருந்து சரியான பாதையில் பறந்து சென்ற ஏவுகணை இந்திய பெருங்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. அணுகுண்டு ஏந்தி சென்று 5 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ‘அக்னி,5’ ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ரக ஏவுகணைகள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா நாடுகளில் மட்டுமே உள்ளன. 3 அடுக்குகளை கொண்ட இந்த ஏவுகணை திட எரிபொருளில் இயங்கக் கூடியது. இதன் மூலம் எந்த பகுதியையும் தாக்கி அழிக்க முடியும். ஒலியின் வேகத்தை விட 24 மடங்கு வேகத்திலும் பயணிகள் விமானத்தை காட்டிலும் 30 மடங்கு வேகத்திலும் செல்லும். 1500 கிலோ எடை கொண்ட அணுகுண்டுகளை தாங்கி செல்ல முடியும். அக்னி,5 ஏவுகணை 17 மீட்டர் உயரம், 6 மீட்டர் சுற்றளவு உடையது. 50 டன் எடை கொண்டது.

இந்தியா ஏற்கனவே 700 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி,1, இரண்டாயிரம் கி.மீ. செல்லும் அக்னி,2, மூவாயிரம் கி.மீ. சென்று தாக்கும் அக்னி,3 ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அக்னி,3 ஏவுகணையின் மேம்பட்ட வடிவமான அக்னி,4 ஏவுகணை, கடந்த நவம்பரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5 ஆயிரம் கி.மீ. பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்ககூடிய அக்னி,5 ஏவுகணை சோதனை ஒடிஷா மாநிலம் வீலர் தீவில் நேற்று இரவு 7 மணிக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கவுன்ட் டவுனும் தொடங்கியது.
இதற்கான ஏற்பாடுகளை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் கடந்த சில நாட்கள் செய்து வந்தனர். எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், ஏவுகணை சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் திடீரென அறிவிக்கப்பட்டது. வீலர் தீவில் தொடர்ந்து மின்னல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் சோதனை நடந்ததால் ஏவுகணைக்கு பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக, கடைசி நேரத்தில் சோதனை நிறுத்தப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அக்னி,5 ஏவுகணை சோதனை இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கேற்ப கவுன்ட் டவுன் மாற்றி அமைக்கப்பட்டது. சோதனை நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஒடிஷா மாநிலம் வீலர் தீவில் இன்று காலை 8.05 மணிக்கு அக்னி,5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. வீலர் தீவில் இருந்து சரியான பாதையில் சென்ற அக்னி,5 ஏவுகணை இந்திய பெருங்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. இத்தகவலை டிஆர்டிஓ தலைவர் வி.கே.சரஸ்வத் தெரிவித்தார். விஞ்ஞானிகள், ராணுவ உயரதிகாரிகள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்த சோதனை வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல் என்று சரஸ்வத் கூறினார். வங்கக்கடலில் ஒடிஷா மாநிலத்துக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும், சாந்திப்பூருக்கு தெற்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள சிறிய தீவுதான் வீலர் தீவு. சுமார் 2 கி.மீ. நீளம், 390 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு ராணுவத்துக்கு சொந்தமான ஒருங்கிணைந்த சோதனை மையம் உள்ளது. அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஆகாஷ், சூர்யா, பிருத்வி உள்ளிட்ட ஏவுகணைகள் இங்கு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கண்டம் விட்டு கண்டம் தாவும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி ஏவுகணையின் சிறப்பு அம்சங்கள்: இந்திய எல்லை அருகேயுள்ள திபெத் பகுதிகளில் சீனா ஏவுகணைகளை குவித்து வரும் நிலையில் அக்னி 5 ஏவுகணை இந்திய பாதுகாப்புத்துறையில் மிகவும் முக்கியமனது. அக்னி 5 ஏவுகணை மூலம் உலக நாடுகள் இந்தியாவை பார்த்து அஞ்சும் நிலை ஏற்படும். இந்த ஏவுகணை அமெரிக்காவை தவிர மற்ற உலகின் மற்ற பகுதிகளில் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை இயக்கிய பின்னர் இதனை நிறுத்த முடியாது. துப்பாக்கி புல்லட்டை விட வேகமாக செல்ம் திறன் கொண்டது. சாலைப்பகுதிகளிலிருந்து கூட ஏவும் சக்தி கொண்டது.

ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பின்னர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என்ற பெருமை அக்னி 5 ஏவுகணைக்கு கிடைக்கும். அக்னி 5 ஏவுகணை சிறிய செயற்கைகோள்களை தாக்கும் திறன் உடையது. அக்னி 5 ஏவுகணை பிரதமரின் நேரடி உத்தரவின் பேரில் தான் தாக்க செய்ய முடியும். இந்த ஏவுகணையை அமைதி திட்டங்களுக்கு பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

நன்றி : தினமலர்,தமிழ் முரசு .


No comments:

Post a Comment