Saturday, 28 April 2012

உலகின்முதல் நோய்த் தடுப்பு ஊசி!!!-ஒரு ஆய்வு.


வைசூரி, பெரியம்மை, ஸ்மோல் பொக்ஸ் (SMALL POX) என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கொடிய நோய் மனித வரலாற்றில் பெரும் உயிர்க் கொல்லியாக இடம் பெற்றது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தாவும் நோய்களில் இதுவும் ஒன்று.
வளர்ப்பு விலங்குகள் பறவைகளில் இருந்து பரவும் கொடிய நோய்கள் மனிதர்களை இன்றும் தாக்குகின்றன. தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் வரை அவற்றின் பாதிப்புக்கள் தொடரிந்தபடி இருக்கும் என்பது துயரமான செய்தி.
பிறப்பு 17.05.1749 இறப்பு 26.01.1823 ஸ்மோல் பொக்ஸ் நோய்க்கான தடுப்பு ஊசியைக் கண்டுபிடிக்கும் வரை அது மிகவும் கொடிய நோயாக இடம் பெற்றது.
18ம் நூற்றாண்டு முற்பகுதியில் ஸ்மோல் பொக்ஸ் நோய் உலகம் முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியது. நோய் பற்றிய விவரத்தை மருத்துவர்கள் அறியாதிருந்த காரணத்தால் அதன் பரவலைத் தடுக்க முடியவில்லை. அந்த மர்ம நோயால் பீடிக்கப்பட்டவர்களில் 20விகிதத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உயிர் பிழைத்தோர் விகாரமான தோற்றத்தைப் பெற்றனர். பலர் கண் பார்வை இழந்தனர். பெரியம்மை எனப்படும் ஸ்மோல் பொக்ஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குத் தாவிய ஒரு வைரஸ் என்றாலும் அது விலங்கினத்தில் இருக்கும் போது அவற்றிற்கு ஒரு பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.
மனித உடலுக்குள் புகுந்த பிறகு இந்த வைரஸ் தனது கொடூரத்தைக் காட்டத் தொடங்குகிறது. உடலுக்குள் எப்போது புகுந்தது, அப்போது உடல் இருந்த நிலவரம் என்ன போன்ற தகவல்கள் சரிவரத் தெரியவில்லை. எப்போது புகுந்தது என்ற வினாவுக்கு மிகவும் வியப்பான பதில் கிடைத்தது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிதனும் மிருகமும் நெருங்கி வாழ்ந்த காலத்தில் ஒரு வகைத் தொற்றாக இந்த வைரஸ் நோய் தொடங்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. காலத்திற்குக் காலம் இந்த நோய் கெம்பியும் பின்பு தணிந்தும் தனது வரலாற்றைத் தொடர்ந்தது.
இந்த நோயின் கொடிய வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்தவர் இங்கிலாந்து நாட்டவரான  எட்வேட் ஜென்னர் என்பதும் அவருடைய கண்டுபிடிப்பு மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றும் கருதப்படுகிறது. அவர் மருத்துவத் தொழில் செய்த காலத்தில் ஸ்மோல் பொக்ஸ் பெருமளவில் பரவத் தொடங்கியது.
அவருடைய கண்டுபிடிப்பிற்கு 18ம் நூற்றாண்டு முற்பகுதியில் அசுர வேகத்தில் பரவிய இந்த நோய் உடனடிக் காரணமாக அமைந்தது. அவரும் இந்த நோயும் எதிரும் புதிருமாகச் சந்தித்த போது அவருடைய கண்டுபிடிப்பு நோயை வீழ்த்தியது.
ஜென்னர் பேர்க்கலே கிராமத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர். அவர் வாழ்ந்த கிராமத்திலும் பிற பகுதிகளிலும் இறப்புச் செய்திகள் குவிந்த வண்ணம் இருந்தன. பெரியோர்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெரும் எண்ணிக்கையில் இறந்தனர். மருத்துவ உலகம் செய்வதறியாது தவித்தது.
அந்த நேரத்தில் எட்வேட் ஜென்னரின் கவனத்தை ஒரு கிராமப்புற நிகழ்வு ஈர்த்தது. பசு மாடுகளில் பால் கறக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இந்த நோய் வருவதில்லை என்பதை அவர் அவதானித்தார். அந்த அடிப்படையில் அவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். பால் கறப்போருக்கு ஏன் இந்த நோய் வருவதில்லை?
பால் கறக்கும் கிராம மக்களுக்கு பசு அம்மை (COW POX) என்ற ஆபத்தற்ற நோய் வருவதுண்டு. அதுகும் வைரஸ் நோய்தான். அதன் பாதிப்பு மிகக் குறைவு. காய்ச்சலும் உடல் வலியும் இருக்கும். இதன்பின் அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
பசு அம்மைக்கு ஆளானவர்களுக்குப் பெரியம்மை அதாவது ஸ்மோல் பொக்ஸ் வராது என்ற முடிவுக்கு வந்த அவர் மேலதிக ஆராய்ச்சியில் இறங்கினார். அவர் தனது சுற்றாடலில் வாழ்ந்த இரு மனிதர்களையும் ஒரு பசு மாட்டையும் தெரிவு செய்தார்.
சாரா நெல்மெஸ் என்ற பால் கறக்கும் பெண், ஜென்னருடைய தோட்டக்காரனுடைய எட்டு வயது மகன் ஜேம்ஸ் பிப்ஸ் என்பவர்களுடன் புளொசம் என்ற பசு மாடும் அவருடைய ஆய்வுக்கு உதவினார்.
புளொசம் (BLOSSOM) என்ற பெயரைத் தாங்கிய பசுவில் பால் கறந்த சாராவுக்குக் கைகளில் பசு அம்மைக் கொப்புளங்கள் தோன்றின. கொப்புளங்களில் வடிந்த திரவத்தை எடுத்த ஜென்னர் அந்த எட்டு வயதுச் சிறுவனுக்கு ஏற்றினார். அவனுக்கு இலேசான காய்ச்சலும் உடல் வலியும் ஏற்பட்டது.
அவனுக்கு வேறு பாதிப்பு இல்லை. பெரியம்மை நோய் அவனைத் தீண்டவில்லை. இப்படித்தான் பசு அம்மை வைரசைப் பயன்படுத்திய அவர் ஸ்மோல் பொக்ஸ் நோய்க்குத் தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்தார். இவருடைய கண்டுபிடிப்புத்தான் எந்தவொரு நோய்க்குமான முதலாவது தடுப்பு ஊசி.
பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றியவர் என்று டாக்டர் எட்வேட் ஜென்னர் சிறப்பிக்கப்படுகிறார். மருத்துவர்கள் துப்பறியும் நிபுணர்கள் போல் தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எட்ட வேண்டும் என்ற உண்மைக்கு அவர் உதாரணமாக விளங்குகிறார்.
ஜென்னரின உருவச் சிலைகள், மருத்துவ மனைகள், நகர மையங்கள், பல்கலைக் கழகங்கள், தேவாலயங்கள், ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்கு உதவிய பசு மாட்டின் தோல் புனித ஜோர்ச் மருத்துவக் கல்லூரியில் பாதுகாக்கப்படுகிறது.
ஜென்வர் வாழ்ந்த வீடு அருங்காட்சி நிலையமாகப் பேணப்படுகிறது. அவர் பாவித்த பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை அந்த வீட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருக்கு உதவிய பசு மாட்டின் இரு கொம்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து மருத்துவர் டாக்டர் எட்வேட் ஜென்னர் (EDWARD JENNER)  எக்காலத்திலும் மறக்க முடியாத மாமனிதர். இவரை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போமே!!.
தொகுப்பு; மு.அஜ்மல் கான் 

No comments:

Post a Comment