சாலைப்பயணம் என்பது மரணத்தை முன்னிருக்கையில் அமரவைத்துச் செல்வது போலாகிவிட்டது இப்போது. வாகன எமன் எப்போது வந்து உயிரை இழுத்துச் செல்வான் என்று அறியமுடியாத சூழல். எப்போதும் மரணம் நிகழலாம் என்னும் நிலையில் நிகழ்கின்றன இன்றைய சாலைப் பயணங்கள்.
சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, மறந்துபோன மனிதாபிமானமும் ஒரு காரணமாகியுள்ளது.புற்றீசல் போல பெருகி வரும் வாகனங்களுக்கு தக்கவாறு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்து செய்தி இல்லாத நாளிதழ்களே என்று கூறும் அளவுக்கு மோசமான நிலை உருவாகியுள்ளது.
இந்திய சாலைகளில் மட்டுமே சுமார் மூன்று இலட்சம் விபத்துகள் வருடம் தோறும் நிகழ்கின்றன. எண்பதாயிரம் உயிர்களைக் கொல்லும் இந்த சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாலைகளைப் பயன்படுத்துவோரின் அலட்சியமே தொன்னூறு விழுக்காடு விபத்துகளுக்குக் காரணமாகிறது என்று இந்தியாவிலும், உலக அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகின் எண்பது சதவீதம் வாகனங்கள் வளர்ந்த நாடுகளிடம் இருக்கின்றன. ஆனால் எண்பது சதவீதம் விபத்துகள் வளரும் நாடுகளில் தான் நிகழ்கின்றன என்கிறது ஆய்வு ஒன்று. காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சீரான போக்குவரத்து விதிமுறைகளும், அதை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் பாரபட்சமற்ற சட்ட ஒழுங்குகளும் தான்.
அமெரிக்கா, வளைகுடா போன்ற மேலை நாடுகளில் சாலை விதி முறைகளை மீறுவோர் பாரபட்சமின்றி தண்டனை பெறுகிறார்கள். குறிப்பிடப்பட்டுள்ள வேகத்துக்கு அதிகமாக வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அபராதம் கட்டியே ஆக வேண்டும்
ஓட்டும் வேகத்துக்கு ஏற்ப அபராதத் தொகை அதிகமாகும். எத்தனை தடவை வேகமாய் ஓட்டுகிறோம் என்பதற்கு ஏற்பவும் அபராதம் அதிகரிக்கும். பள்ளிக்கூடம் இருக்கும் பகுதிகளில் வேகமாகக் காரை ஓட்டினாலோ, சாலைப் பணி நடக்கும் இடங்களில் வேகமாக காரை ஓட்டினாலோ பல மடங்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அபராதம் கொடுக்க வரும் காவல் துறையினரை லஞ்சம் கொடுத்தும் மடக்க முடியாது.
வாகனங்களில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட இருக்கைகள் வார்ப்பட்டைகளோடு இருக்கின்றன. அங்கே அந்த இருக்கைகளில் தான் குழந்தைகளை அமர வைக்க வேண்டும், இல்லையேல் கடுமையான அபராதம் கட்ட வேண்டியது தான்.
குறிப்பிட்ட வரிசையில் பயணிப்பவர்கள் சிக்னல் செய்யாமல் அடுத்த வரிசைக்குச் செல்வதோ, அல்லது குறுக்கும் நெடுக்குமாக ஓட்டுவதோ அமெரிக்காவில் அபூர்வமான காட்சிகள். முன்னால் செல்லும் யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் பின்னால் வருபவர் ஹார்ன் அடித்து கண்டிப்பார். அப்படிச் செய்வது முன்னால் செல்பவரைத் திட்டுவது போல.
1896ம் ஆண்டு முதல் சாலை விபத்து பதிவு செய்யப்பட்டபோது மக்கள் அதிர்ந்து போனார்கள். சாலையில் விபத்துகள் நடக்குமா? என்ற வியப்பு அவர்களுக்கு. ‘இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்று உடனே அறிக்கைகள் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு கடந்து விட்டது, இன்று சுமார் ஒன்றரை கோடி பேர் வருடம் தோறும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிறார்கள். சுமார் ஐம்பது கோடி பேர் காயமடைகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO) . இதே நிலை நீடித்தால் இந்த புள்ளி விவரங்கள் இரண்டாயிரத்து இருபதுகளில் இன்றைய நிலையை விட சுமார் அறுபத்தைந்து விழுக்காடுக்கு மேல் அதிகரிக்கக் கூடும் என்று அந்த நிறுவனம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
விபத்திற்கான காரணங்கள் ....
விபத்துகளின் மூலமாக உயிரிழப்புகள் நேர்வதற்குக் காரணங்களாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாவதாக, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், தேவையற்ற சாலைப்பயணங்களும், சாலைகளின் உறுதிக்கும் தகுதிக்கும் மீறிய வாகனங்களின் எண்ணிக்கையும், வாகனங்களின் வடிவங்களும் விபத்துகளை நிர்ணயிக்கும் காரணிகளில் சில. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் இவையெல்லாம் ஒரே நேரத்தில் ஒரே சாலையில் செல்லுமிடங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.
இரண்டாவதாக, அதிக வேகமாய் காரோட்டுவதும், குடித்து விட்டு காரோட்டுவதும், கைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தி சாலையில் கவனத்தை செலுத்தாமல் வண்டி ஓட்டுவதும், வாகனங்கள் செல்ல சரியான சாலை வடிவமைப்பு இல்லாமல் இருப்பதும், சாலை விதிகள் சரியாக அமுல்படுத்தாமல் இருப்பதும் விபத்துக்கான காரணங்களில் இன்னும் சில.
மூன்றாவதாக,இருக்கை வார்ப்பட்டை அணியாமல் இருப்பது, வாகனம் ஓட்டும் வயது வராதவர்கள் வாகனம் ஓட்டுவது, மக்களிடையே சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது, வாகன ஓட்டிகள் செய்யும் சிறு சிறு தவறுகளை மன்னிக்கும் மனநிலை இல்லாமல் இருப்பதும் போன்றவையும் விபத்துகளை ஊக்குவிக்கின்றன.
நான்காவதாக, விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள் வருவதில் ஏற்படும் தாமதமும், விபத்து நடந்த இடத்தில் முதலுதவி வசதிகள் செய்யப்படாமல் இருப்பதும், மருத்துவ நிலையங்களுக்குச் செல்வதற்கு ஏற்படும் காலதாமதமும் விபத்து உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாகி விடுகின்றன.
விழிப்புணர்வு...
சாலை பாதுகாப்பு என்பது தனிநபர் சார்ந்த விஷயமல்ல. சாலை விதிகளை அரசு நிர்மாணிப்பதும், அதை அதிகாரிகள் கவனிப்பதும், வாகன தயாரிப்பாளர்கள் நாட்டின் சாலைகளுக்கும் போக்குவரத்து விதிகளுக்கும் ஒப்ப வாகனங்களைத் தயாரிப்பதும், காப்பீட்டு நிறுவனங்களின் ஈடுபாடும், தனிநபர்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும், தனியார் தன்னார்வ நிறுவனங்களின் ஈடுபாடும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்புவிப்பதற்கும் முக்கியத் தேவையாகின்றன.
துடிதுடிப்பவர்களை ஒரு சில நொடிகள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்லும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. இதுவே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. விபத்துக்கள் எதிர்பார்த்து நடப்பது இல்லை.எனவே, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து விபத்தில், பாதிக்கப்படுவர்களுக்கு அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தவுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் அவசியம். உரிய நேரத்தில் நீங்கள் செய்யும் உதவி ஒரு உயிரை காப்பாற்றப் போகிறது என்பதை மனதில் வைத்து யோசிக்காமல் களத்தில் இறங்குங்கள்.மேலும், அவசர வேலை, முக்கிய வேலை என்று யோசிக்காதீர். ஒரு உயிரை காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறு அவசர வேலை எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அச்சப்பட வேண்டாம். தற்போது விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் உடனே அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் உதவி செய்ய முன்வரும்போது அடுத்தவர் யோசிக்காமல் முன் வருவார். எனவே, விபத்தில் சிக்கி துடிதுடிப்பவர்களின் உயிரை மட்டுமல்ல, மறந்துபோன மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.
ஆக்கம் : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment