அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது,அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் "பாபா" என்று அறிமுகப்படுத்துவார்.
அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனது ஊர் பற்றி குறிப்பிடும்போதும் அங்குள்ளவர்கள் கேட்கும்போதும், பழனிக்கு பக்கத்தில் உள்ள புது ஆயக்குடி என்று சொல்லுவார். இவை இரண்டும் காலப்போக்கில் பழனிபாபா என்று உருமாறியது. மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தான் முதன்முதலில அஹமது அலியை பழனிபாபா என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தவர் பழனிபாபா...
குடும்பம்...
பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது. புது ஆயக்குடி.இக்கிராமமே பழனிபாபாவின் தாய்வழிப் பூர்வீக ஊர். தந்தையின் ஊர், நீலகிரி மாவட்டம் குன்னூர்.தந்தை பெயர் V.M.முஹம்மது அலி தாயார் பெயர் கதீஜா பீவி (குன்னூரில் பழனிபாபாவின் அப்பாவைகாப்பி கொட்டை ராவுத்தர் என்று அழைப்பார்கள்). பழனிபாபா பெற்றொருக்கு இரண்டாவது குழந்தையாக14/11/1950ல் பிறந்தார். அஸ்ரப் அலி, லியாகத் அலி, முபாரக் அலி ஆகிய சகோதரர்களும் ரெஜினா சுல்தான், ரூபினா சுல்தான், ஜரினா சுல்தான் ஆகிய 3 சகோதரிகள் உடன் பிறந்தவர்கள். மிகவும் அன்பான, நேசமான, பொருளாதார நிலையில் வசதியாக இருந்த குடும்பம்.
ஆரம்பக் கல்வி...
பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பழனிபாபா குன்னூரில் உள்ள செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி.ஒ (I.D.O) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.
பட்டப்படிப்பு...
பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று முடித்தார். அதன் பிறகு டெல்லியில் 10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார்.
படிப்பில் பிடிப்பு, ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக் கூர்மை உடைய பாபா அவைகளையே தனது ஆயுதமாக பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
பொது வாழ்க்கை...
நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின ஆயிரக்கணக்கான மேடைகளில் அடைமழையென, புயலென, அழகான அற்புதமான புள்ளிவிபரங்களுடன் பேசி இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய இளைஞர்களின் தேசிய கீதமானது. பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும்.இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை மாவட்டம். திட்டச்சேரியில் 07/12/1996 அன்று நடைபெற்றப்பொதுக்கூட்டமாகும்.
தனது துணிச்சலான பொது வாழ்க்கை நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால் குடும்ப வாழ்க்கையையும், பந்த பாசப்பினைப்பினைபுகளையும் விட்டுவிலகி வாழ்ந்து வந்தார். அவரது 30 ஆண்டுக்கால வாழ்க்கை அவரைப் புரிந்து கொண்டவர்களுடனும், நண்பர்களுடனுமே இருந்தது. தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார். தனக்கென ஒரு இல்லற வாழ்க்கை அமைத்துக் கொள்ளவில்லை அது பற்றி தன் நண்பர்களுடன் பேசும் போது "பொது வாழ்க்கை,பிரச்சாரம் என்று ஊர் ஊராக திரியரவன் கல்யாணத்தை வேறப் பண்ணிக்கிட்டு ஒரு பெண்னுடைய வாழ்க்கையையும் நிம்மதியில்லாமல் ஆக்கனுமா?” என்று கூறுவார்.
ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர். முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. “யார் இந்த பழனிபாபா?”என்று தமிழக மக்கள் பார்க்கத் தொடங்கினர்.
எம்.ஜி. இராமச்சந்திரன்(M.G.R) அவர்கள் போட்ட தடை ஆணையில், “தாடி வைத்த, நடுத்தர வயதுடைய,ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அஹமது அலி என்கின்ற பழனிபாபா அரசாங்க அலுவலத்துக்குள் நுழைய தடை ” என்று எழுதியிருந்தது. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் தடை உத்தரவுக்கு டெல்லி உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றார் பாபா. தடைஆணைக்கே தடைஆணைப் பெற்ற சாதனையைப் படைத்தவர் இந்தியாவில் பழனிபாபா ஒருவர் தான். இவ்வாறே தடா வழக்கு பதிவு செய்யப்பட்டும். கைது செய்ய இயலாத சூழ்நிலையை இந்தியாவில் ஏற்படுத்திய ஒரே மனிதரும் பழனிபாபா தான்!.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில், ‘பழனிபாபா பொது கூட்டங்களில் பேசக்கூடாது’எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில்கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து, மைக் வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா, "மக்கள் கிட்ட பேசுறதும், உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான் " என்று காமண்ட் அடித்தார்.
இந்து பாஸிஸம், தமிழகத்தில் "தேசியம்" என்ற வடிவிலும், 'நாட்டுப்பற்று' என்ற போர்வையில் தலையெடுத்த போது அதற்கு பதில் சொல்லத் தளைப்பட்டார்.
இந்துத் தலைவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு ஆங்கிலத்தில் அரசியல் நிர்ணயச்சட்டம்;வரலாற்று நூல்கள் ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார். இவருடைய பேச்சுக்கள் மக்களைக் கவர்ந்தன.
பழனிபாபாவின் பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள்.. அடிக்கடி கைது செய்தது பழனிபாபாவை ஒரு "தீவிரவாதி"யாகக் காட்டவே தவிர, அவர் ஓரு குற்றவாளி என்பதால் அல்ல. காரணம் அவர் மீது தொடுக்கப்பட்ட எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட தே இல்லை!
ஆனால், பழனிபாபாவை "தீவிரவாதி"யாகக் காட்டும் உத்தியில் பார்ப்பன பத்திரிக்கைகளும்,காவல்துறையும் வெற்றி பெற்றது. வாக்குரிமையை முறையாக பயன்படுத்த முன்வராத சமுதாயத்தில் பிறந்து, நீதிமன்றனகளை, சமுதாய எழுச்சிக்காக முறையாக பயன்படுத்திக் கொண்டவர்தான் பழனிபாபா.
நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, தனது பேச்சுரிமையை நிலைநாட்டியதால்தான். பழனிபாபாவால் இத்தனை காலம் மக்களுக்காக பொது மேடைகளில் பேச முடிந்தது. இல்லையெனில், பழனிபாபாவை துவக்க காலத்திலேயே அரசாங்கம் முடக்கி போட்டிருக்கும்.
பல நேரங்களில் இந்து பாஸிஸவாதிகளின் நரகல் நடைப் பேச்சுகளுக்கு அதே தொனியில் இவர் பதில் சொல்ல முற்பட்டதாலும், இழப்புக்கு மேல் இழப்பு, இழிவுக்கு மேல் அழிவு என முஸ்லிம் சமுதாயம் மதவெறியர்களால் பாதிப்புக்கு உள்ளான போதும், பாபா தன் ஆதங்கத்தை அப்படியே வெளிக் காட்டினார். இந்து பாஸிஸ பேச்சாளர்கள் பேசும் பேச்சுகளோடு ஒப்பிடும் போது பழனிபாபா பேச்சு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.
பழனிபாபாவின் ஆதங்கத்தைக் கிளறியப் பேச்சாளர்கள் ஒரு முறை கூட கைது செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் அவர்கள் மீது குற்றம் கூடச் சுமத்தவில்லை.
வழக்குகள்
பழனிபாபா மீது 136 வழக்குகள், 125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்கருணாநிதி ஆட்சியில் 2 முறை போடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா (1991 - 1995) ஆட்சிக்காலத்தில் 1 முறை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு முறை ஜெயலலிதா (1991- 1995)ஆட்சிக்காலத்தில் பழனிபாபா மீது தடா சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. அதில் பாபா உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடி நிரபராதி என விடுதையானார்.
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர்.வெங்கட்ராமன், துனை ஜனாதிபதியாகவும்,ஜனாதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (240 கோடி ரூபாய்) திருப்பதி கோவிலுக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார். அதன்பின் “சென்னை உயர்நீதிமன்றம்” தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை சரித்திரமானது இவ்வழக்கு!.
எழுத்துப்பணி..
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு ஆபத்து? என்றஇராம.கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார். மறுப்புரை நூல் பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. மறுப்புரை நூலுக்காக கருணாநிதி இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பழனிபாபாவை கைது செய்தார். மறுப்புரை நூல் மீது இருந்த தடையை நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையை நீக்க ஆணை பெற்றார். கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்துவம் தொடர்பாக கிறிஸ்துவ பாதிரிமார்களோடு இவர் நடத்திய விவாதம், பாபாவின் பைபிள் பற்றிய ஆய்வு கிறிஸ்துவத்திலும் (பைபிள்) பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. அதன் வெளிப்பாடே "பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா? என்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான் Who Is Law Abiding On The Issue Of Babri Masjid? நூலாகும். இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார்.
பாபா நடத்திய “அல்முஜாஹித்”, “முக்குல முரசு”, “புனிதப்போராளி”, ஆகிய பத்திரிக்கைகள் மூலம். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தனது பத்திரிக்கைகள் வாயிலாக அம்பலப்படுத்தினார். பத்திரிக்கைகள், நூல்கள், மேடைபேச்சு, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு, இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல் பணியாற்றிய பல்துறை வித்தகர் அல்ஹாஜ் பழனிபாபா!.
வெளிநாட்டு பயணம்...
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.
1988ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின் விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக் கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர். புருனே நாட்டின் சுல்தான் பழனிபாபாவின் இனிய நண்பர்களில் ஒருவர்..
இறுதிக் காலம்...
கடந்த சில வருடங்களாகவே தனது ஜிஹாத் கமிட்டியின் பிரச்சாரத்தை அமைதியாக அதே சமயம் ஆக்கப்பூர்வமாக செய்து வந்தார்.
ஊர் ஊராக சென்று சமுதாய இளைஞர்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து, வெளிநாட்டில் வாழும் சமுதாய சொந்தகளிடம் கடிதத் தொடர்பு கொள்வதுடன் தனது ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகளை அனுப்பி அவர்களின் ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் பெற்று “ஜிஹாத்”கமிட்டி மூலம் பல ஏழை எளிய சமுதாய மக்களுக்கெல்லாம் பண உதவிகள் செய்து வந்தார்.
தடா கைதிகளின் குடும்பத்தினர் முகவரிகளை எல்லாம் சேகரித்து, அவர்களுக்கு மாதாமாதம் குடும்பச் செலவிற்கு பணம் (மணியாடர்) அனுப்பி உதவிவந்தார். இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பிற்காக ஜமாத்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை ஒருங்கிணைத்தார். அதேபோல இஸ்லாமியர்,தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒற்றுமையை உருவாக்கிக் காண்பித்தவர் பழனிபாபா.இதனால் முஸ்லிம்களைப்போல் பிற சமுதாயத்தினரிடமும் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது.இந்த மூன்று சமூகங்களும் அரசியல் அதிகாரத்தில் ஆளும் ஜாதியாக இல்லாமல், ஆளப்படும் ஜாதி என்பதை கண்டுணர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை புறாக்களோடும், இயற்கையோடும் கழித்தார்.
மறைவு...
1997 ஜனவரி 28ந் தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து விட்டு அவரை 7:30மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன், பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் 9:30மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து, தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஒருவன், ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில் இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும், முகத்திலுமாக 18 வெட்டுகள் விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார். இந்துத்துவாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார். மறுநாள் 29-ம் தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா (உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30 மணிக்கு ஐ.டி.ஒ. (IDO) மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.
பாபா கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின் வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் யதார்த்தவாதி என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா காந்தியை, முன் அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த அல்ஹாஜ் பழனிபாபா இஸ்லாமிய ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர் எனலாம்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்
No comments:
Post a Comment