Wednesday 15 February 2012

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.....

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்களால் ஐந்தாம் கலீஃபா என்று வர்ணிக்கப்பட்டவர்கள்.நீதிமிக்க நான்கு  காலீஃபாக்களின் ஆட்சிக்கு பிறகு சீரழிந்து போன அரசியலை திருத்தி இஸ்லாமிய ஆட்சிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தி அதன் பலன்களை மக்களுக்கு வழங்கி சுவைக்க செய்தவர். அரச குடும்பத்தில் பிறந்த இவரது இளமைப் பருவத்தில் இவரது தந்தை எகிப்தின் மிக முக்கிய மாநிலம் ஒன்றின் ஆளுநராக பதவி வகித்தார்.உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) தகுந்த வயதை அடைந்தபோது, உமையாக்களின் கீழ் அவரும் அளுநராக நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையினர் கொடுத்திருந்த பெருந்தோட்டங்களில் பெரும்பகுதி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமாக இருந்தது.உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களுக்கு மட்டும் கிடைத்த சொத்துக்களிலிருந்து ஆண்டுதோறும் ஐம்பதினாயிரம் அஷ்ரஃபிகள் வருமானம் கிடைத்தாக ஒரு மதீப்பீடு கூறுகிறது.எனவே அவர் ராஜபோகத்தில் மூழ்கியிருந்தது இயல்பானதே.அவரது உணவும் உடைகளும் வாகனங்களும் பழக்கவழக்கங்களும் ஒர் அரச குமாரனின் உணவு, உடைகளையும் பழக்க வழக்கங்களையும் ஒத்திருந்தன.

இத்தகைய அவரது வாழ்க்கை நிலைமைகள் அவர் பிற்காலத்தில் மேற்கொள்ளவிருந்த பெரும்பணிகளை எவ்வகையிலும் குறிப்பால் உணர்த்தக் கூடியவைகளாக அமையவில்லை. ஆனால் அவரது தயார் ‘உமர் (ரலி)’ அவர்களின் பேத்தியாவார். ‘முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து ஐம்பதாண்டுகள் பூர்த்தியாவதற்குள்,உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) பிறந்தார்கள்.அவர் பிறந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஸஹாபாக்கள்-உற்ற தோழர்களில் பெரும்பாலோரும் அவர்களைப் பின்பற்றிய தாபீஈன்களும் உயிர்வாழ்ந்திருந்தனர்.

அவரது கல்வி ஹதீஸ்,பிக்ஹுக் கலைப் பயிற்சியோடு தொடங்கியது விரைவிலேயே அவர் முதல்தர முஹத்திஸாகவும் (புரட்சியாளர்) பிக்ஹு கலைவல்லுநராகவும் திகழ்ந்தார்.எனவே,எனவே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களது காலத்திலும் நேர்வழி நடந்த கலீஃபாக்களின் காலத்திலும் சமூக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்தவை எவை என்றும்,கிலாஃபத்துக்குப் பின்னர் முடியாட்சி தோன்றிய பின் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்றும் அறிவுரீதியாகப் புரிந்துக் கொள்வது அவருக்குச் சிரமமாக இருக்கவில்லை.

இஸ்லாத்துக்கு முரணான மாற்றங்களை அவரது நெருங்கிய மூதாதையரே கொண்டுவந்திருந்தமையால்,நடைமுறையில் அவர் பல மூட்டுக்கட்டைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.இம்மாற்றங்களின் விளைவாக அவரது உற்றார் உறவினர்களுக்கு மட்டுமின்றி,அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் பல பயன்களும் சலுகைகளும் கிடைத்திருந்தன.இவ்வாறான சூழ்நிலையில் அவரது குடும்பப் பெருமை, சொந்தநலன்கள்,அவரது குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு ஆகியவை காரணமாக,அவர் தம் மனச்சான்றையும் அறிவையும் உலகாயதப் பயன்களுக்காக அர்ப்பணித்து,உண்மை,நீதி,அறம் ஆகிய பண்புகளைப் பொருட்படுத்தாமல் ஃபிர்அவ்னைப் போல ஆட்சி செலுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் 37 வயதை எட்டிய நிலையில்,எதிர்பாராத விதமாக அரியணை கிட்டியபோது,தமது தலையில் சுமத்தப்பட்ட பெரும் பொறுப்பினை உணர்ந்தார்.எதிர்பாராத இந்நிகழ்ச்சி அவருள் ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திற்று.நீண்டகாலம் ஆழ்ந்து சிந்தித்து அனைத்தையும் திட்டமிட்டு இஸ்லாமிய வழியை ஏற்றுக் கொண்டவர் போல அவர் எவ்வித சிரமமும் இன்றி ஜாஹிலிய்யத் (அறியாமைக் காலம்) காட்டிய வழிக்கெதிராக இஸ்லாமிய வழியை எளிதில் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

அரியணையை (ஆட்சிப் பொறுப்பை) அவர் பாரம்பரியச் சொத்தாகப் பெற்றாலும், மக்களின் உறுதிமொழியை பெறுமுன் அவர்,மக்கள் தம் விரும்பிய ஒருவரைத் தங்கள் கஃலீபாவாகத் தேர்வு செய்து கொள்வதற்கு அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் உண்டு என்று தெள்ளத் தெளிவாகப் பிரகடனம் செய்தார்.ஆனால்,மக்கள் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களையே தம் தலைவராகத் தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆதலால் அவர் இஸ்லாமிய கிலாஃபத்தின் (மக்கள் பிரதிநிதித்துவ) பெரும் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாயிற்று. அவர் ஆட்சிபீடத்தில் அமர்ந்த உடனேயே போலியாட்சி அகம்பெருமையையும் மன்னராட்சி எதேச்சாதிகார மனேபாவத்தையும் அரசவைப் படாடோபங்களையும் அதிகாரத்தின் மற்றெல்லா வெளிப்படைக் காட்சிகளையும் நீக்கிவிட்டு,ஆரம்ப கால கலீஃபாக்கள் நடத்திய எளிய வாழ்க்கையை மேற்கொள்ள உறுதிபூண்டார்.

அடுத்து அவர், அரச குடும்பத்தினர் அனுபவித்து வந்த சலுகைகள்,சிறப்புரிமைகள் மீது கவனம் செலுத்தி,அவர்களை சாதாரண முஸ்லிம்களின் மட்டத்துக்குக் கொண்டு வந்தார்.அவர்,தமக்குச் சொந்தமான தோட்டங்கள் உட்பட அரச குடும்பங்களுக்குச் சொந்தமான தோட்டந் துரவுகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்துவிட்டார். சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்ட அசையும்,அசையா சொத்துக்கள் யாவற்றையும் அவற்றின் உரிமையாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இதன் விளைவாக அவரது சொந்த வருமானம் பெரிதும் பாதிப்புற்றது. ஆண்டுதோறும் அவர் பெற்று வந்த 50,000 அஷ்ரஃபிகள் 200 ஆகக் குறைந்தன. அதுவுமின்றி அரசுக் கருவூலத்திலிருந்து தமக்கோ தம் குடுமபத்துக்கோ ஓரு காசு செலவிடுவதையும் அவர் சட்டவிரோதமாகவே கருதினார்.கலீஃபாவாக (மக்கள் பிரதிநிதியாக) தாம் ஆற்றிய சேவைக்கு எவ்வித ஊதியத்தையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். சுருங்கச் சொன்னால் இப்பொழுது அவரது வழ்க்கையே முழுமையாக மாற்றமடைந்து விட்டது.கிலாஃபத்தை ஏற்குமுன் அவர் ஒர் அரசகுமாரனைப் போல வாழ்ந்தார்.ஆனால் அதன் பின்னர் அவர் முற்றிலும் மாறி ஒரு சராசரி மனிதர் ஆனார்.

குடும்பத்தையும் குடும்ப அலுவல்களையும் ஒழுங்குபடுத்திய பின்னர்,அவர் ஆட்சிமுறையில் சீர்திருத்தம் செய்தார் நீதியற்ற ஆளுநர்களை அகற்றிவிட்டு நேர்மையானவர்களை ஆளுநர்களாக நியமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். மக்களின் வாழ்க்கை,சொத்து,கண்ணியம் ஆகியவற்றின் மீது வரையறையில்லாத அதிகாரம் செலுத்தி வந்த அரசாங்க அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்து,நீதி நியாயப்படி நடக்கச் செய்து,சட்டமுறை சார்ந்த ஆட்சியை நிலைநாட்டினார்.வரிவிதிப்பு தொடர்பான கொள்கையை முற்றாக மாற்றி அமைத்து சட்ட முரணான வரிகளை ஒழித்துக்கட்டியதுடன் உமையாக்கள் மதுபான வடிசாலைகள் மீது விதித்திருந்த வரிகளையும் ஒழித்துவிட்டார்.ஜகாத் சேகரிக்கும் முறையையும் அவர் சீராக்கி திருத்தியமைத்து, பொது வேலைகளுக்குப் பயன்படத்தக்கதாக அரசுக் கருவூலத்தைத் திறந்துவிட்டார்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்காக அவர்களுக்கு இழப்பீடு கொடுத்து மேலும் அநீதி நிகழா வண்ணம் நிலைமையைச் சீராக்கினார்; சட்டமுரணாக கைப்பற்றப்பட்டிருந்த அவர்களது வணக்கத் தலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தார்; அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவித்தார்.ஷரியத் சட்டப்படி அவர்களுக்குரிய உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் வழ்ங்கினார்.

பொது மக்களுக்கு கல்வி அறிவூட்டுவதற்காகப் பரந்த அளவிலான ஏற்பாடுகளைச் செய்து,நுண்ணறிவாளர்கள் குர்ஆன்,ஹதீஸ் மீதும் பிக்ஹு சட்டத்துறை மீதும் கவனம் செலுத்துமாறு செய்தார்.இதன் வாயிலாக வலிமைமிக்கதொரு அறிவியல் இயக்கம் தோன்றச் செய்தார்.இதன் விளைவாக பிற்காலத்தில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,இமாம் ஷாபி  ஈ(ரஹ்)அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் போன்ற பேரறிஞர்கள் தோன்றினர்.

இவ்வாறாக அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சியின் நோக்கத்தை அவர் நிறைவேற்றினார்.
   الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.
(அல் குர்ஆன் 22:41)

அக்காலத்தில் ரோம ராஜ்யமே,முஸ்லிம்களுக்கு எதிரான பலம்வாய்ந்த அரசாக இருந்தது.அந்த நாட்டிற்கும் இஸ்லாத்துக்கும் இடையே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக நிலவிய அரசியல் தகராறு இன்னும் தீரவில்லை. ஆனால் ரோம இராஜ்ஜியம் கூட உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் உயர்ந்த ஒழுக்க சீலத்தினால் கவரப்பட்டது. கலீஃபா அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தபொழுது ரோமச் சக்கரவர்த்தி பின்வருமாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது:

“துறவி ஒருவர் உலக இன்பங்களைத் துறந்து ஏகாந்தமான ஒரிடத்தில் தியானத்தில் ஈடுபட்டு இருந்தால் நான் கிஞ்சிற்றும் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் இந்த மனிதனின் காலடியில் ஒரு மாபெரும் பேரரசே இருக்க அவர் அதனை ஒதுக்கி விட்டு ஒரு பக்கீரின் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது”

இரண்டரை ஆண்டுகாலமாக பாடுபட்டு அறியாமைக் கால ஆட்சிமுறையாக மாறிப்போன அரசியல் வாழ்கையின் பல்வேறு துறைகளையும் புரட்சிகரமாக மாற்றியமைத்தார். விரைவிலேயே உமையாக்கள்,இவ்விறைபக்தி மிக்க மனிதருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினர். இஸ்லாத்தின் வாழ்க்கை எழுச்சியில் அவர்கள் தமது சுகபோக வாழ்வின் சரிவை,மரணத்தைக் கண்டனர். ஆதலால் அதன் மறுமலர்ச்சிப் பணியினை அவர்களால் சகிக்க முடியவில்லை. இறுதியில் கலீஃபாவுக்கு எதிராக அவர்கள் சதி செய்தனர். 39 வயதே ஆன இளைய கலீஃபாவை நஞ்சூட்டிக் கொன்றனர்.
Source;http://valaiyukam.blogspot.com/2012/02/blog-post_12.html

No comments:

Post a Comment