Thursday, 9 February 2012

ஹோட்டல் மேனேஜ்மெண்ட்....

மத்திய சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க விரும்பும் மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வை எழுதவேண்டும்.


மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் கல்வி நிலையம் சென்னை தரமணியில் செயல்படுகிறது. பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், பூசா (புதுதில்லி), சண்டீகர், காந்திநகர், கோவா, குருதாஸ்பூர், குவாஹாத்தி, குவாலியர், ஹாஜிப்பூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் இந்தக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பட்டப் படிப்பைப் படிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கும், ஓபிசி பிரிவு மாணவர்களுக்கும் வயது வரம்பு 22. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பு 25. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பிசிக்கல் பிட்னஸ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.
நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி அமைப்பு இந்த நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வு ஏப்ரல் 28ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூமரிக்கல் எபிலிட்டி அண்ட் சயின்டிபிக் ஆப்டிட்யூட், ரீசனிங் அண்ட் லாஜிக்கல் டிடக்ஷன், ஜெனரல் நாலெட்ஜ் அண்ட் கரண்ட் அபையர்ஸ், ஆங்கில மொழி, ஆப்டிட்யூட் ஃபார் சர்வீஸ் செக்டர் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 200 கேள்விகள் கேட்க்கப்படும். இத்தேர்வில் ஆங்கில மொழிப் பாடத்தில் மட்டும் 60 கேள்விகளும் ஆப்டிட்யூட் ஃபார் சர்வீஸ் செக்டர் பிரிவின் கீழ் 50 கேள்விகளும் கேட்கப்படும். மற்ற பிரிவுகளில் தலா 30 கேள்விகள் வீதம் கேட்கப்படும். வினாத்தாள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்தத் தேர்வின் மூலம் தகுதி படைத்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ் டூ தேர்வில் கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் மாநில அளவில் முதல் ரேங்க் பெற்ற மாணவர்கள் இந்தப் படிப்பில் நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இங்கு சேரும் சிறந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியலின் அடிப்படையில் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் கல்வி நிலையங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.
பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஃபுட் புரடக்ஷன், ஃபுட் அண்ட் பெவரேஜ் சர்வீஸ், ஃபிரண்ட் ஆபீஸ் ஆபரேஷன், ஹவுஸ் கீப்பிங், ஹோட்டல் அக்கவுண்டிங், ஃபுட் சேப்டி அண்ட் குவாலிட்டி, ஹூயூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், பெசிலிட்டி பிளானிங், ஃபைனான்சியல் மேனேஜ்மெண்ட், ஸ்டேரட்டஜிக் மேனேஜ்மெண்ட், டூரிஸம் மார்க்கெட்டிங், டூரிஸம் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படும். வகுப்பறைப் பாடங்களுக்குக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், செயல்முறை பயிற்சிக்கும் அளிக்கப்படும். இந்த மூன்று ஆண்டு செமஸ்ட்டர் முறையில் நடைபெறும் இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் கல்வி நிலையங்கள் தவிர, குறிப்பிட்ட சில மாநில அரசுகள் நடத்தும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்களும் சில தனியார் நிறுவனங்களும் இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்கின்றன.

ஹோட்டல் துறை வளர்ந்து வரும் முக்கியத்துறை. சுற்றுலா துறை வளர்ந்து வருவதால் புதிய நட்சத்திர ஹோட்டல்களும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடுத்தர ஹோட்டல்களும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மேனேஜ்மெண்ட் ட்ரெயினி, கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸ்கியூட்டிவ், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், கிச்சன் மேனேஜ்மெண்ட், ஹவுஸ் கீப்பிங் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் ஆபீஸர் போன்ற பல்வேறு பணிகளில் சேரலாம். நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், ஹெல்த்கேர் நிறுவனங்கள், ரிசாட்டுகள், காபி பார்கள், சுற்றுலா கப்பல்கள், விமானங்கள், சுற்றுலா துறை விடுதிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இங்கு படிக்கும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலைவாய்ப்புக் கிடைத்து விடுகிறது. சென்னை மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் படித்து முடித்த அனைத்து மாணவர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது. எனவே, அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்வி நிறுவனங்களில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர்ந்து படிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் தகவல் குறிப்புகளும் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வரை வழங்கப்படும். குறிப்பிட்ட சில வங்கிகளில் பணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.900. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.450. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதுகுறித்த விவரங்களை இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


விவரங்களுக்கு: www.nchmct.org

No comments:

Post a Comment