Saturday, 4 February 2012

புரோகிதர்களை புறக்கணிப்போம்!



Post image for புரோகிதர்களை புறக்கணிப்போம்!

புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.
“நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலானாகவும் இருக்கின்றோம்” (அல்குர்ஆன் 15:9) இறைவனே பாதுகாவலனாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. யோசித்தார்கள்; அணுக விட்டால் தானே அறிந்துக் கொள்வார்கள். நம் வியாபாரத்துக்கு வேட்டு வைத்து விடுவார்கள். ஆபத்தை உணர்ந்தார்கள். அரபி உங்களுக்கு விளங்காது. அதை விளங்க நாங்கள் மட்டுமே விஷேச பயிற்சி பெற்றவர்கள் என்றார்கள். ஒவ்வொரு வசனங்களுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன என்று பயமுறுத்தினார்கள். நீண்டகாலமாகவே குர்ஆனை மொழிபெயர்க்க முன் வராமல் இருந்தார்கள். இறைத்தூதரின் போதனைகளில் இடைசொருகலானவைகளையே அதிகம் அதிகம் பயன்படுத்திக் கொண்டார்கள்; விளைவு – மார்க்கம் மக்களுக்கு கஷ்டமானது.
நபி(ஸல்) கூறுகிறார்கள்: அல்லாஹ் என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும் எளிதாக்குபவனாகவும் அனுப்பியிருக்கிறான். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: முஸ்லிம்
இலகுவான மார்க்கத்தைக் கஷ்டமாக்கியதால் வியாபாரம் விறுவிறுப்பானது. போலி நபிமொழிகள் மூலம் புதிய அமல்கள் அறிமுகமாயின. ஐவேளை தொழுகையில்லாமல் அல்லாஹ்விடம் சொர்க்கம் பெற குறுக்கு வழி பார்த்தார்கள் மக்களுக்கு குறுமதி படைத்த புரோகிதர்கள் தர்காவுக்கு வழிகாட்டினார்கள். இதன் மூலம் ஷைத்தானின் சபதம் நிறைவேற சகல வழிகளிலும் உதவிச் செய்கிறார்கள். ஒன்றுபட்ட சமுதாயத்தை பிளவுபடுத்தி வழிகெடுத்து இருக்கிறார்கள். இதையெல்லாம் அறிந்துக் கொண்டே செய்கிறார்கள். ஆதாரம் அல்லாஹ் தருகிறான்.
“”அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப்போல் (இந்த உண்மையை)அறிவார்கள்.” (அல்குர்ஆன் 2:146) தானும் வழிகெட்டு, சமுதயாத்தையும் வழிகெடுக்கிறோமே. நாளை அல்லாஹ்விடத்தில் கேவலமான இழிநிலையை அடைய போகிறோமோ என்ற கவலையும் கிடையாது. “”அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம் ” (அல்குர்ஆன் 5:13)
 இறுகிப் போன இதயத்தில் ஈரம் எப்படி இருக்கும்? இறைவனைப் பற்றிப் பயம் எப்படி வரும்? இரக்க மில்லா பூசாரிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் இந்தச் சமுதயாத்தை விடுவிக்க ஒவ்வொரு முஸ்லிமும் முன்வர வேண்டும்.
ஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட இந்த புரோகிதப் பூசாரிகளின் பிடியிலிருந்து பிளவுபட்ட சமுதாயத்தை விடுவித்து ஒன்றுபடுத்த ஒவ்வொரு முஸ்லிமும் இப்போதே செயலில் இறங்க வேண்டும். இதற்குச் சுலபமான வழி உண்டு. பள்ளியில் தினசரி சுபுஹு தொழுகைக்குப் பின்னால் சில நிமிடங்கள் நேரம் குர்ஆனை – ஹதீஸ் மொழி பெயர்ப்புகளைப் படிப்பது. அரபி ஓதத் தெரிந்தவர்கள் – தெரியாதவர்களுக்கு ஓதக் கற்றுக் கொடுப்பது. கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் அரபியை போல் ஒரு இலகுவான மொழி வேறு எதுவுமே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இதை தினசரி கடமையாகச் செய்து வந்தால் மிக குறுகியக் காலத்தில் மகத்தான மார்க்க அறிவை நாம் பெற முடியும்.
“”முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” (புகாரீ 58)
என்ற அடிப்படையில், வழிதவறி அரசியலிலும், இயக்கங்களிலும் சிக்கிக் கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அதன் தீமைகளை எடுத்துச் சொல்லி குர்ஆன் – ஹதீஸுக்கு அழைத்து வர வேண்டும். செயல்படுத்த இலகுவான மார்க்கம் என்பதை நம் செயல்கள் மூலம் காட்ட வேண்டும். இதே போல்
தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் நம் சகோதரிகள், மார்க்க கல்வியின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டும் நபி(ஸல்) எச்சரிக்கையை மனதில் கொண்டு,
“நரகவாசிகளில் பெண்களையே அதிகமாக் கண்டேன்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரி, 29, 1052
பெண்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவர்கள் தானும் மார்கக் கல்வி கற்று, தங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுத் தரலாம். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களாக வாழலாம். இப்படி நாம் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் மார்க்கத்தைக் கற்றுக் கொண்டால்தான் புரோகிதர்களைப் புறக்கணிக்க முடியவும்.
 (புரோகிதத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லும் சகோதரர்களுக்கு நம் நிறுவனங்களில், கடைகளில் அல்லது சுயமாகச் சம்பாதிக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, அவர்களும் நேர்வழி பெற உதவலாம்).
 மார்க்கத்தை மறைக்கிறார்கள் – மக்களை வழிக் கெடுக்கிறார்கள் என்று புரோகிதர்கள் மீது குறை மட்டும் சொல்வதில் பிரயோசனமில்லை. புரோகிதர்கள் தப்லீக்கில் இருந்தாலும் சரி, தவ்ஹீத்தில் இருந்தாலும் சரி சமூக ஒற்றுமைக்கும், மனித நேயத்திற்கும் முட்டுகட்டை. இந்த புரோகிதம் ஒழிந்தால் மட்டும் ஒன்றபட்ட சமுதாயம் உயரவும், மனித நேயம் மலரவும் முடியும். நாம் ஒவ்வொருவரும் மார்க்கம் கற்றுக் கொள்வதின் மூலமே புரோகிதர்களைப் புறக்கணிக்க முடியும்.
இறைவா! எனக்கு நீ கற்றுத் தந்தவைகள் மூலம் எனக்குப் பயனளிப்பாயாகா! பயனுள்ளவற்றையே எனக்குக் கற்றுத் தருவாயாக. கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக! எல்லா நிலையிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் நபி(ஸல்). அறிவிப்பவர்:- அபூஹுரைரா(ரழி), நூல்: இப்னுமாஜ்ஜா(251), திர்மிதி
பயனுள்ள மார்க்க கல்வி கற்றுக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் அன்புடன் அழைக்கிறோம்.
“மேலும் எவர்(கள்) நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் நேர்வழியில் சேலுத்துகிறான்.” (அல்குர்ஆன் 19:76)

Thanks Mr.M.S. கமாலுத்தீன்

No comments:

Post a Comment