Saturday, 4 February 2012

சூதாட்டம் (Gambling) என்பது மக்களை வழி கெடுப்பதற்காகவா ? ஒரு சமுதாய சிந்தனை !!


Post image for சூதாட்டம்


  சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன.

பல சமூகங்களில் சூது ஒரு தீய பழக்கமாகவும், விலக்கி வைக்கவேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது. கத்தோலிக்க, யூத மரபுகளில் சூதாட்டத்துக்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடைய மதங்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சூதாட்டத்தினால் விரும்பத்தகாத பல சமூக விளைவுகள் ஏற்படுகின்றன. இதனாலேயே பல நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சில இஸ்லாமிய நாடுகளும், வேறு சில நாடுகளும் சூதாட்டத்துக்கு முற்றாகவே தடை விதித்துள்ளன.
இந்து சமய நூல்களும், தமிழில் தோன்றிய நீதி நூல்கள் பலவும் சூதாட்டத்தில் ஈடுபடாடாதிருக்கும்படி அறிவுறுத்துகின்றன. இந்தியாவின் பழைய நூல்களான மகாபாரதக் கதையும், நளன் கதையும் சூதினால் விளைந்த கேட்டையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.
 மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப் பட்டவற்றையும், பரிசுத்த மானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)
    கண்ணியமிக்க இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நமது ஊர்களில் பலர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதிலும், அதனை வாங்குவதிலும் அதிக ஆர்வமுடையவர்களாக உள்ளனர் என்பது ஊரறிந்த உண்மை. இதிலும் குறிப்பாக இன்றைய இஸ்லாமிய தோற்றம் என்று நம்வர்களால் சிறப்பித்துச் சொல்லப்படும் ஜுப்பா தலைப்பாகை தொப்பியுடன் லாட்டரி சீட்டுக்கள் விற்பதையும் வாங்குவதையும்  காண்கிறோம். லாட்டரி சீட்டுகள் வாங்குபவர்களும், விற்பவர்களும், அதற்கு துணையாக இருப்பவர்களும் லாட்டரி சீட்டு வேறு, சூதாட்டம் வேறு என்று எண்ணிக் கொண்டார்கள் போலும்.

    பரிசுச் சீட்டு என்பது சூதாட்டத்தின் மறுபெயர். மக்களை வழி கெடுப்பதற்காக செய்த ஷைத்தானின் சூழ்ச்சியே இது. இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகள் அதிகம் உள்ளது என்பதாலேயே வல்ல அல்லாஹ் இதை விட்டும் விலகியிருக்கச் சொல்கிறான். இதில் வேதனைப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அல்லாஹ்வுடைய பள்ளியை ஒட்டி உள்ள பள்ளிக்குச் சொந்தமான கடைகளில் கூட லாட்டரி விற்பனை.
    நாம் திருக்குர்ஆனை ஒரு எழுத்துக்கு 10 நன்மை கிடைக்கும் என்பதை அறிந்து ஓதி வருகிறோம். ஆனால் இது இம்மை மறுமைக்கு வழி காட்ட வந்த வேதம் என்பதால் பொருள் உணர்ந்து ஓதினோமா?. பொருள் உணராது ஓதியதால் மதுவும் – சூதும் ஒன்று என்றும், பெரும் பாவம் என்றும் இறைவன் தனது திருமறையில் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மிலே பலர் மிகச் சாதரணமாக விற்பனை செய்துகொண்டும், வாங்கி சந்தோஷித்துக் கொண்டும், பரிசு தனக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குர்ஆனுக்குள் பரிசு சீட்டை வைத்து இறைவனிடம் துஆச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதனைக் குறித்து சூரா பகராவில் இறைவன் மிகத் தெளிவாகக் கூறுகிறான்.
    (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. (அல்குர்ஆன் 2: 219)
    மதுவும், சூதாட்டமும் இருமுகம் கொண்ட மத்தளங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) நூல்: அபூதாவூத்
    மேற்கண்ட வசனத்தின் பொருளையும், ஹதீஸின் கருத்தையும் உணர்ந்த முஸ்லிம்கள் குடிகாரனும், லாட்டரி விற்பவனும், அதற்குத் துணை செய்பவனும் ஒரு தரத்தில் உள்ளவர்கள் என்பதை உணர வேண்டாமா? இதில் ஈடுபடுபவர்கள் இப்பெரும் பாவத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டாமா? முஸ்லிம்கள் இறைவனால் ஹராமாக்கப்பட்ட மதுவையையும் பன்றி மாமிசத்தையும் வெறுக்கும் அளவுக்கு லாட்டரி சூதாட்டத்தை வெறுக்கவில்லையே?…… இதிலும் அல்லாஹ்வுடைய கருத்துக்கு மாற்றமாக இவர்களுடைய சொந்தக் கருத்துக்களைப் புகுத்தி வித்தியாசம் கற்பித்து விட்டார்களா?…
    இறைவன் மது, சூதாட்டம், சிலை வணக்கம், ஜோதிடம் இந்நான்கையும் இணைத்து கூறி இவைகள் ஈமான் கொண்டவர்களைக் கெடுக்கச் செய்யும் ஷைத்தானின் சூழ்ச்சி என்று தெளிவாக கூறுவதை நாம் உணரவேண்டாமா?
    ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)
    நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?  (அல்குர்ஆன் 5:91) 
    (நபியே!) நிச்சயமாக நாம் மிகத் தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:99)
    மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா, ஹராமானதா, முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாதுருப்பர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி
    எனவே எனதன்பு நடுநிலைச் சமுதாயத்தவர்களே! அல்லாஹ்வும் அவனது தூதரும் பெரும்பாவம் என எச்சரித்த இந்த தடுக்கப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ள நமது சகோதரர்களுக்கு இதன் தீமைகள் பற்றி நயமாக எடுத்துக்கூறி அனுமதிக்கப்பட்ட வழிகளில் தொழில் செய்து ஹராம், ஹலாலை பேணி நடக்கும் முஸ்லிம்களாக நாம் வாழ்வோமாக!

தொகுப்பு  மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment