Saturday, 11 February 2012

பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?


 


உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது. முதலில் அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!
'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவு படுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும்.

பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது.
'இப்படி நடந்திருக்கலாம்..அப்படி பண்ணியிருக்கலாம்' என இறந்த காலத்தையே நினைத்து வருந்துவது கோழைகளின் செயல்!
நடந்தது நடந்து விட்டது. இப்போது நிகழ்காலத்தில் அதனை அலசி ஆராய்ந்து நாம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் பிரச்சனையை போக்கும். குறைந்த பட்சம் இப்போது என்னென்ன செய்யலாம் என்று முடிவு எடுக்க வேண்டும். நல்ல வேளை பிரச்சனையை தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்து கவலையை போக்கிக் கொள்ள வேண்டும்.

முடிவெடுக்காமல் நடந்ததையே நினைத்து கோழையாய் வருந்துவது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தடுக்கும். பிரச்சனையை மேலும் அதிகப் படுத்தும்.
முக்கியமான விஷயமென்னவென்றால் தவறான முடிவுகள் மட்டும் தோல்விக்கு காரணமல்ல. முடிவெடுக்காத தன்மையும் தான்!
ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் முடிவுகள் கூட நமது தன்னம்பிக்கையை அதிகரித்து பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்கு உதவும்.
ஆனால் பயந்து கொண்டு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் நாம் மனதின் ஆழத்தில் அந்த பிரச்சனையை பார்த்து பயந்து அப்படி ஆகி விடுவோமோ, இப்படி ஆகி விடுவோமோ என்று பயப்படுகிறோம் என்று அர்த்தம். அந்த ஆழ்மன பயமே நாம் விரும்பத்தகாத விளைவுகளை அழைத்து வரலாம்.

ஆக பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்.
'இந்த பிரச்சனைக்கு நாம் விரும்பும் முடிவு என்ன? இந்த முடிவு நமக்கும், மற்றவர்களுக்கும் இப்போதும், வருங்காலத்திலும் என்னென்ன முடிவுகளை ஏற்படுத்தும்' என நன்கு ஆழமாக அலசி எண்ணி பார்க்க வேண்டும்.
முடிவுகளின் விளைவுகளை நமது அனுபவத்தை வைத்தும், நண்பர்களின் ஆலோசனையை கேட்டும் கணித்து முடிவு எடுக்க வேண்டும்.
சிறிய முடிவுகள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை என்பதை உணர்ந்து நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
அதற்காக பயந்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது இன்னும் பிரச்சனையை கொடுமையாக்கும்.


மேலும் அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது சரியான முடிவு எடுப்பதற்கு மட்டும் உதவாமல், நாளை நாம் எடுக்கும் முடிவு எந்த விளைவை ஏற்படுத்தினாலும் ' நாம் ஒன்றும் ஒற்றையா ரெட்டையா போட்டு முடிவெடுக்கவில்லை..நன்கு அலசி ஆராய்ந்து தான் எடுத்தோம் என்று மனம் சமாதானமாகும்.

அடுத்தது நமது முடிவை அடைய, செயல்படுத்த தற்போது என்னென்ன வழிகள் உள்ளன என்று ஆராய வேண்டும்.

கண்டிப்பாக பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு சாதகமான ஆயிரம் வழிகள் இருக்கும்! அவற்றை ஒரு தாளில் எழுத வேண்டும். இதற்கு நமது படைப்பு ஆற்றலை உபயோகப்படுத்தினால் வித விதமான யோசனைகள் வரும்.


அடுத்தது தைரியமாக அவற்றை ஒவ்வொன்றாக செயல் படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போவதை கண் கூடாக பார்க்கலாம்.

மேலும் இந்த பிரச்சனையை அணுகும் செயல்பாடுகள் முழுவதிலும் நமது மனோபாவம் நேர்மறையாகவும், வெற்றியை எதிர் நோக்கி இருப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு கப்பல் மாலுமியின் மனக் கண்ணில் சென்று சேர வேண்டிய இடம் குறிக்கோளாக இருப்பது போல் வெற்றி நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அது நமக்கு சரியான யோசனைகளையும், சரியான சூழ்நிலைலைகளையும் நம்முடன் இணைத்து விடும். வெற்றியை தேடித்தரும்.
நன்றி : தமிழ் தாயகத்திற்காக S. சவிதா

No comments:

Post a Comment