
சோடிஸ் என்பது ....
சூரிய ஒளி மூலம் தண்ணீரை சுத்திகரிக்கும் எளியமுறைகளை தான் சோடிஸ்(SODIS – Solar Water disinfection) என்கிறோம். சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த நீரியல் ஆய்வு நிறுவனமான ஏவாக், இந்த முறையை கண்டறிந்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது. ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் ஏழை மக்களுக்கு சோடிஸ் ஒரு வரப்பிரசாதம். நீரில் உருவாகும் உடல்நலத்துக்கு எதிரான நுண்கிருமிகளை இம்முறை பெரும்பாலும் அழித்துவிடுகிறது என்று பல்வேறு அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் (WHO),யூனிசெஃப் மற்றும் ரெட் க்ராஸ் நிறுவனங்கள் இம்முறையை மக்களுக்கு பரிந்துரைக்கின்றன.


சோப்பு கொண்டு நன்கு கழுவப்பட்ட பெட் பாட்டிலில் குடிநீரை நிரப்பி, குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் நேரடியாக சூரிய ஒளி படும்படி வைத்துவிட்டால் போதும். சூரியக் கதிரில் வெளிப்படும் அல்ட்ரா வயலட்(Ultra Violet) கதிர்கள் செய்யும் மாயத்தால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ரெடி. நீங்கள் காசு கொடுத்து கேன் வாட்டர் வாங்குபவராக இருந்தாலும், சோடிஸ் முறையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.
மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் அடுத்தடுத்த நாட்களில் பாட்டிலை வெயிலில் காயவைக்க வேண்டும். தொடர்ச்சியாக மழை பொழியும் மழை நாட்களில் சோடிஸ் முறையை செயல்படுத்த முடியாது. அப்போது வானில் இருந்து பொழியும் நேரடி மழைநீரை சேகரித்து அருந்துவதே பாதுகாப்பானது.
சோடிஸ் முறை வீடுகளுக்கு மட்டுமே ஏதுவானது. அதிகளவிலான குடிநீரைப் பயன்படுத்தும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்களில் செயல்படுத்துவது கடினம். ஆனாலும் இங்கே புழங்கும் தனி மனிதர்கள் தமக்கென்று பிரத்யேகமாகபாதுகாக்கப்பட்ட குடிநீரை தயாரித்துக் கொள்ளமுடியும்.
நன்றி: புதிய தலைமுறை
No comments:
Post a Comment