Tuesday 28 August 2012

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?- ஒரு சிறப்பு பார்வை...

File:Pookalam2009onam.jpgகேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம்.
ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி
பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள்
வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை
ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில்
இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை
அறுவடைத் திருநாளாக கொண்டாடினர்.
தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே
மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு
விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா
நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த
குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது "ஓணக்கொடி என்னும் புத்தாடையைஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.

ஓணம் பண்டிகை...
நட்சத்திரங்களிலேயே இரண்டு நட்சத்திரங்கள்தான் மிகவும் மரியாதை பெற்றவை. ஒன்று திருவாதிரை. மற்றொன்று திருவோணம். இந்த இரண்டு நட்சத்திரங்களுக்குமட்டுமே திரு என்ற அடைமொழி உண்டு. இவற்றில், திருவோணம் கேரளத்தில்மட்டுமல்லாது, மலையாளி அன்பர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணியில் உத்திர நட்சத்திரநாள் தொடங்கி திருவோணம் வரை பதினோரு நாட்கள், வீடுகள் தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது. என்னதான் ஏழையாக இருந்தாலும் இந்த நாட்களில் அவர்கள் அடுத்தவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள்.ஓணத்தை ஒட்டிப் பழமொழிகளும் உண்டு. ‘உத்திரம் கறுத்தால் ஓணம் வெளுக்கும்; ஓணம் கறுத்தால் உத்திரம் வெளுக்கும்’ என்பது பழமொழி. அதாவது, உத்திரத்தன்று மழை பெய்தால், ஓணத்தன்று மழை இருக்காது; ஓணத்தன்று மழை பெய்தால், உத்திரத்தன்று மழை இருக்காது.


 மன்னனுக்கான கொண்டாட்டம்..

மகாபலி சக்கரவர்த்தியின் கதை நம் அனைவருக்குமே தெரியும். மூன்றடி மண் கேட்ட பரவாசுதேவனுக்கு, ‘‘தருகிறேன்’’ என்றார், மகாபலி. சுவாமியோ, ஆகாயம் உட்பட எல்லா உலகங்களையும் இரண்டு அடிகளிலேயே அளந்து விட்டார். மூன்றாவது அடிக்கு இடம் கொடுக்க முடியாத மகாபலி சக்கரவர்த்தியை, சுவாமி, தன் அடியால் அழுத்தி பாதாள உலகத்திற்கு அனுப்பி விட்டார். 

அப்படிப்போன மகாபலி, ஒவ்வோர் ஆண்டும் ஆவணித் திருவோணத்தன்றுபாதாள உலகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார். அவர் வெளிப்படும் இடம் கேரளம்.அப்படி வெளிப்பட்ட மகாபலியை வரவேற்கும் முகமாகவே இப்பண்டிகைகொண்டாடப்படுகிறது. ‘‘மூன்றடி மண்ணை, ஆண்டவனுக்கே தருவேன்.கடவுளே வந்து என்னிடம் கை நீட்டி யாசகம் கேட்கிறார் என்றால், அதைவிடஎன்ன வேண்டும்?’’ என்று ஆணவம் பிடித்துப் பேசிய மகாபலியின் ஆணவத்தை,சுவாமி அடக்கினார்.ஆகவே, ஆணவ நீக்கமே ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பார்கள் பெரியோர்கள்.

அத்தப்பூக்கோலம்..

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.



சிறப்பு உணவுகள்..

கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை,அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய்,சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.

புலிக்களி

"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

மலையாளப் பண்டிகையான ஓணம் திருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு எனது  வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

நன்றி : தினமலர்,தினத்தந்தி.தமிழ் விக்கிப்பீடியா
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment