Sunday, 8 June 2014

உலக கடல் தினம் பற்றிய விழிப்புணர்வு தவகல்!!


உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டு  நமது சமுத்திரங்களும், நமது பொறுப்புகளும் (Our oceans, our responsibility)  எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக கடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .

இதே நாளில் 1992 ஜுன் மாதத்தில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற புவி மாநாட்டின் போது,  சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதன்படி 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் தேதியிலிருந்து உலக சமுத்திர தினத்
தைக் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை 63/iiiம் தீர்மானத்தின்படி முடிவெடுத்தது.

சமுத்திர விவகாரங்கள் மற்றும் சமுத்திர நீதிக்குப் பொறுப்பான திணைக்களம், செய்தித் திணைக்களத்துடன் இணைந்து இத்தினத்தில் பல நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் செய்து வருகின்றது. விழிப்புணர்வு நடவடிக்கையாக நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன. உலகின் சமுத்திரங்களால் நாம் பெறும் பயனை அளவிடவும், அவை  நமக்கு வழங்கும் (கடல்) உணவுகள், மீன்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களையும், அவற்றின் பயன்கள், பெறுமதிகள் பற்றி உயர் மதிப்புடன் நோக்கவும் இத்தினத்தை வருடாவருடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடல் பற்றிய விழிப்புணர்வு தவகல்..
பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். இவ்வாறு சமுத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகச் சமுத்திரம் என்னும் எண்ணக்கரு கடலியலில் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதன்மையான சமுத்திரங்களின், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், ஏனைய பகுதி இயற்கை நீதிகளினாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.

இன்று உலகில் பசிபிக் சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம், இந்து மகா சமுத்திரம், அன்டாட்டிக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. பசிபிக் மற்றும் அத்திலாந்திக் சமுத்திரங்களை புவிமையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. சமுத்திரங்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன.

பூமி ஒரு பங்கு நிலத்தாலும், மூன்று பங்கு தண்ணீராலும் சூழப்பட்டுள்ளது. உலகில் உள்ள மொத்த தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீர். இதனால், வானில் இருந்து பூமியை பார்த்தால் ஊதா நிறத்தில் தெரிகிறது. கடலால், மனிதர்களுக்கு பலவிதமான நன்மை கிடைக்கிறது. தற்போது அவை வேகமாக மாசடைந்து வருகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பிரச்னைகளை கடல் சந்திக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில், 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாக உருவாகிறது. நமக்குத் தேவையான குடிநீரும், கடலில் இருந்து மழையாக கிடைக்கிறது. கடல் மூலம் தான் அதிகளவு வணிகம் நடக்கிறது. உலகில் பல கோடி மக்கள் தினமும், உணவு, வருமானம் ஆகியவற்றுக்காக கடலை நம்பி தான் உள்ளனர். மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே. உலக மக்களில் பெரும்பகுதியினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கடல் மூலம் பயன் பெறுகின்றனர். 

மக்கள் வாழ்வில் சமுத்திரங்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் சமுத்திரங்கள் சம்பந்தமாக நாம் எவ்வாறான வழிகளில் பணியாற்ற முடியும் என்பது பற்றி உலக சமுத்திர வலை பின்னலோடு சமுத்திர திட்டமும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.அளவுக்கதிகமாக மீனினங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகவும், மீன்களினதும் மற்றும் பெரும்பாலான கடல் உயிரினங்களினதும் தொகை சீக்கிரமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இன்னும் 12 வருடங்களில் மீனினங்கள் வெகுவாககக்குறைந்து விடலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நேரடியாகப் பங்கு கொள்வதற்கு இத்தினமானது நமக்கொரு அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.

கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் உள்ளன. பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது.செயற்கை கழிவுகளை கடலில் கொட்டுவதாலும், எண்ணெய், கழிவுகள் கலப்பதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடல்களில் குறிப்பிட்ட சதவீத பவளப்பாறைகள் அழிந்து விட்டன. மேலும் உள்ள பவளப்பாறைகள், வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கடலை நாம் கண்டுகொள்ளாவிடில், கண்டிப்பாக பெரிய பாதிப்புக்கு உள்ளாவோம். கடலின் வளத்தை பேண, உலக மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். 


சென்னையில் உள்ள குப்பையால் பாதிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள்..
இந்தியாவின், முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில், பல சிறு, குறு தொழிற்சாலைகள், தங்களின் கழிவுகளை சுத்திகரிக்காமல், ஆறுகளின் வழியே திறந்து விடுவதாலும், உர, பெட்ரோலிய தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்கள், ஆறுகளில் கலப்பதாலும், கோவளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழும் உயிர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மீனவர்கள் பயன்படுத்தும் சிலவகை வலைகளில், டால்பின், கடல் ஆமைகள் போன்ற, மீனவர்களுக்குத் தேவையில்லாத, 90 சதவீத உயிரினங்கள் சிக்கி உயிரிழக்கின்றன. கேளிக்கை பூங்காக்கள், தனியார் நிறுவனங்கள், கடற்கரை சார்ந்த உணவகங்கள் உள்ளிட்டவை, புதிது புதிதாய், மாமல்லபுரம் வரையில் உள்ள கிழக்கு கடற்கரையில் முளைக்கின்றன. ஆனால், அந்த இடங்கள், ஏற்கனவே பல்வேறு உயிர்களின் இனப்பெருக்க பிரதேசங்களாக இருந்தவை.


சென்னை பகுதிக்குட்பட்ட கடலின் பல்லுயிர் பெருக்கம் எப்படி இருக்கிறது?
ஏறத்தாழ, 40 கி.மீ., அளவுள்ள, சென்னைப் கடற்கரைப் பகுதியிலும், அதன் கழிமுகப் பகுதிகளிலும், ஏறக்குறைய, 1,270 வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அதில், 200 வகை க்ரஸ்டேசியன்கள், 273 வகை மொலாஸ்க்கள், 493 வகை மீன்கள், 19 வகை ஊர்வன, ஆறு வகை பாலூட்டிகள் அடக்கம். ஊர்வன இனத்தைப் பொறுத்தவரை, சென்னை பகுதியில், கடல் பாம்புகள், கடல் ஆமைகள் அதிகம் உள்ளன.

 தற்போது, இந்த உயிரிகளின் பெருக்கம் உயர்ந்திருக்கிறதா?
நம் நாட்டில், நிலவாழ் உயிரிகளின் பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, கடல் உயிரினப் பாதுகாப்புக்கு, குறைவான முக்கியத்துவமே கொடுக்கப்படுகிறது. அதனால், கடற்பஞ்சு, கடற்பசு, கடற்குதிரை, பவளப்பாறைகள் உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கம் குறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


சென்னையின் பல்லுயிர் பெருக்கம் குறைவதற்கான காரணங்கள்என்ன ? 

அதற்கு, பல்வேறு காரணங்களை சொல்லலாம். பொதுவாக, எண்ணூர் துறைமுகத்தை அடிக்கடி ஆழப்படுத்துவதால், வடசென்னையின் பல்வேறு பகுதிகளில், மணல் அரிப்பு ஏற்படுகிறது. மேலும், ஆழப்படுத்தும் போது, நீர் குழம்புவதாலும், வெளியேறும் வண்டல் படிவு, விலங்குகளின் வாழ்விடங்களில் படிவதாலும், அவற்றின் வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கிறது. அதனால், அந்த பகுதிகளில் பல்லுயிர்ப் பெருக்கம் குறைகிறது. வீட்டுக் கழிவுகளும், குப்பைகளும் தான், சென்னையின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. இந்த கழிவுகள், அடையாறு, கூவம் ஆறுகளின் வழியாக, கடலை வந்தடைவதால், கடல்வாழ் உயிரினங்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு உயிரினங்கள், அழியும் நிலைக்கே சென்று விட்டன. சென்னை நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதி களில், நவம்பர் முதல் மார்ச் வரையில், சில அரிய வகை கடல் ஆமைகள் வந்து, முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், அந்த பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்குவதால், ஆமைகள் மிகுந்த குழப்பமடைவதோடு, அதன் இனப்பெருக்கமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. 

 பெருங்கடல் தினத்தில் மக்களுக்கு விடுக்கும் செய்தி?
கோவா, கேரளம் உள்ளிட்ட இந்திய கடற்பகுதிகளோடு ஒப்பிடும்போது, சென்னை கடற்கரையில் தான் அதிக அளவு, பிளாஸ்டிக் கழிவுகள் போடப்படுகின்றன. இந்த பெருங்கடல் தினத்தில் இருந்து, கடற் கரைக்கு வருபவர்கள், 'பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன்' என, சபதமெடுத்தால், நம் சந்ததிக்கும், பல்லுயிர்களின் சந்ததிக்கும் செய்யும் உபகாரமாக இருக்கும்.


நம்  அனைவரின் கடமை  என்ன ?
கடலை காக்க அனைவருக்கும் அதிகாரம் உள்ளது  என  இந்த ஆண்டு கடல் தினத்தின் மையக்கருத்தாக உள்ளது. இத்தினத்தில் புதிய மன நிலையுடன் தனிப்பட்ட மற்றும் சன சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கடற்கரைகளின் சுத்திகரிப்பு, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நிரல்கள், வரைதல் போட்டிகள், திரைப்பட விழாக்கள், கடலுணவுகள் பற்றிய அறிவுறுத்தல் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது வாழ்வு சமுத்திரங்களில் எவ்வாறு தங்கியுள்ளது என்பதை உணர்த்துவதன் மூலம் மக்களின் மனச்சாட்சியினை மேம்படுத்த முடிகின்றது.

இச்சமுத்திரங்களினால் மக்களுக்கு ஏற்படும் சேவைகள் விசாலமானவை. அதே நேரம் பாரிய அழிவுகளையும் நொடிப்பொழுதில் இந்த சமுத்திரங்கள் ஏற்படுத்தி விடும.; உதாரணமாக 2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையைக் குறிப்பிடலாம்.

உலகை ஆட்சி செய்வதில், கடல்களுக்கு பெரும்பங்கு உண்டு. கடல்கள், பல்லுயிர் பெருக்கத்தின் ஆதித் தாய், உயிர் வாயு உருவாக்கத்தின் மூலம், அழகின் அதிசயம்,மனிதர்களை வசியமாக்கும் ரகசியம்  தான்  இந்த கடற்கரை.அப்படிப்பட்ட கடலையும், கடற்கரையையும் காப்பாற்றுவதும், கொண்டாடுவதும், தூய்மையாக வைத்திருப்பதும் நம் கடமை. 

சமுத்திரங்கள் எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. சமுத்திரங்கள், சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன. நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும், உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன.இத்தகைய சிறப்புகளை கொண்ட கடல்கள் மற்றும்   சமுத்திரங்களை  காப்பது ஒரு தனி மனித மற்றும் சமூக கடமையாகும்.

அக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment