Tuesday, 4 December 2012

தமிழகத்தில் கிடைக்கும் அறிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்!! ஒரு சிறப்பு பார்வை..


File:Red-Plums.jpg


சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம். 


இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்
இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.
நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.

வேப்பம்பழம்:
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.
வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.


இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!

மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன.

பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில்
 இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இவற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. 

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !!


சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். · வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள்.

இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. · இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. 

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். · மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment