Saturday, 1 September 2012

உங்கள் குழந்தைகளை வளர்ப்பது எப்படி(பெற்றோரின் கடமை) ? பகுதி-1...


பிள்ளைகளைக் குறை சொல்வதற்கு முன், உங்களை நீங்களே சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள் பெற்றோர்களே... 

1. பெற்றோரின் கடமை என்ன?
அ) பிள்ளைகளை, விதிகளை மதித்து, கட்டுபட்டு நடக்கும்படி வளர்ப்பது.
ஆ) எப்போதும் பிள்ளைகளைக் கண்காணிப்பது... அதன் மூலம் அவர்களை 'சரியான' விஷயங்களை மட்டுமே செய்யவும்,, தேர்ந்தெடுக்கவும் செய்வது.
இ) வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளைக் கற்றுக் கொடுப்பது, அதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களை ஒழுக்கமான, பொறுப்பானவர்களாக மாற்றுவது.
ஈ) சுதந்திரமான, கவலைகள் அற்ற குழந்தைப் பருவத்தைக் கொடுப்பது.
உ) தேவையான திறமைகளைக் கற்றுக் கொண்டு, தாமாகவே ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளச் செய்வது.

2. குழந்தைகளின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருடையது?
அ) அதிகாரம் பெற்றோர் கையில் இருக்க வேண்டும். அவர்கள் சொல்வதற்குப் பிள்ளைகள் கீழ்ப்படிய வேண்டும்.
ஆ) அனுபவமும், அறிவும் நிறைந்த பெற்றோர் சொல்வதைத் தான் பிள்ளைகள் செய்ய வேண்டும்.
இ) பிள்ளைகளின் சுயக்கட்டுப்பாட்டுக்குத் தேவையான விஷயங்களை சொல்லி தர வேண்டிய பொறுப்பு பெற்றோருடையது.
ஈ) ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அதற்கு பிள்ளைகளை ஒத்துழைக்குமாறு விளக்கிச் சொல்ல வேண்டும்.
உ) தவறுகளும், முயற்சிகளுமே பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும்.

3. யாருக்கு உரிமை உண்டு?
அ) பெற்றோருக்குத் தான் எல்லா உரிமைகளும். ஏனென்றால் அவர்கள் பெரியவர்கள். குழந்தைகளுக்கு எந்த உரிமையும் கூடாது.
ஆ) அனுபவத்திலும், அறிவிலும் மூத்தவர்களுக்கே உரிமைகள் அதிகம்.
இ) பெற்றோர் & பிள்ளைகள் என இருவருக்கும் சம உரிமைகள் உண்டு. இருவருமே மரியாதையுடனும், கவுரவத்துடனும் நடத்தப் பட வேண்டியவர்கள்.
ஈ) பெற்றோரைவிட, பிள்ளைகளின் உரிமைகளும், தேவைகளும் அதிகம்.
உ) பெற்றோரை உறுத்தாதவரை பிள்ளைகளுக்கே அதிக உரிமைகள்...

4. யாருக்கு மரியாதை?
அ) பிள்ளைகள், பெற்றோரை மதித்தாக வேண்டும். ஆனால் பிள்ளைகளைப் பெற்றோர் மதிக்க வேண்டியதில்லை.
ஆ) மரியாதை தானாக கிடைப்பதற்கு முன், அதை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் பிள்ளைகள்.
இ) வயதோ, வேறு எதுவுமோ பெரிதல்ல... எல்லாரும் மரியாதைக்குரியவர்களே...
ஈ) பெற்றோர், பிள்ளைகளை மதித்தால்தான் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.
உ) அவ்வப்போது மரியாதை குறைவாக நடந்து கொள்வது குழந்தைகளின் இயல்பு. அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை.

5. தவறுகளை எப்படி அணுக வேண்டும்?
அ) விதிகளை மீறும் பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்தத் தண்டனை, அவர்களை உறுத்த வேண்டும்.
ஆ) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி, ஆரோக்யமாக விமர்சிப்பதன் மூலம் பிள்ளைகளின் தவறுகளை பெற்றோர் சரி செய்யலாம். தவறுகளை சுட்டிக்காட்டி, மீண்டும் அது நேராமலிருக்கவும் அறிவுறுத்தலாம்.
இ) தவறுகளில் இருந்து தாமே பாடம் கற்றுக் கொள்வார்கள் குழந்தைகள். எதிர்காலத்தில் அது நடக்காமலிருக்கவும் கற்றுக் கொள்வார்கள்.
ஈ) பிள்ளைகளின் தவறுகளை உணர்ந்து, அது அவர்களை பாதிக்காமல் காப்பது பெற்றோரின் கடமை.
உ) பிள்ளைகளின் தவறுகளுக்கு மற்றவர்களே பொறுப்பு.

6. பிரச்னைகள் எப்படி தீர்க்கப் படுகின்றன? முடிவுகள் எடுக்கப் படுகின்றன?
அ) மற்றவர்களின் உரிமைகளையும், தேவைகளையும் பொறுத்தே அவை தீர்மானிக்கப் பட வேண்டும்.
ஆ) பிரச்னைகள் தானாக வரும், போகும். அல்லது பெற்றோர் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள்.
இ) பெற்றோருக்குத் தான் சரியான முடிவுகள் தெரியும். பிள்ளைகள் அவர்களைப் பின்பற்றினால் போதும்.
ஈ) பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவர்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து, அதை அடையும் போது ஊக்கத்தையும், பரிசுகளையும் கொடுக்க வேண்டும் பெற்றோர்.
உ) பெற்றோர் பிள்ளைகளின் தேவையைத் தெரிந்து கொண்டு, அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.

7. நெகட்டிவ் உணர்வுகளை எப்படிக் கையாள்வது?
அ) பிள்ளைகளின் நெகட்டிவ் உணர்வுகளை மாற்ற பெற்றோர் முயற்சி செய்ய வேண்டாம். ஆனால் அவற்றை எப்படி வெளிப்படுத்துவது எனக் கற்றுத் தரலாம்.
ஆ) பிள்ளைகள் தமது நெகட்டிவ் உணர்வுகளைத் தமக்குள்ளேயே வைத்துக் கொண்டால், எல்லாம் சுமூகமாகவே நடக்கும்.
இ) அத்தகைய உணர்வுகளை பிள்ளைகள் வெளிப்படுத்தவே கூடாது. அப்படிச் சொன்னால் அவர்களுக்குத்தான் மரியாதைக் குறைவு.
ஈ) பெற்றோர் நினைப்பதும், உணர்வதுமே சரி என்று பிள்ளைகள் நம்ப வேண்டும்.
உ) பிள்ளைகளை நெகட்டிவ் உணர்வுகளில் இருந்து காப்பாற்றுவது பெற்றோரின் கடமை.

8. விதிகளைப் போடுவது யார்?
அ) பிள்ளைகளுக்கு ஒரு எல்லைக்குட்பட்ட சாய்ஸ் இருக்க வேண்டும். விதிகளின் அவசியத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
ஆ) பெற்றோர் சட்டம் போடும் போது, அதை எதிர்க்கவே நினைப்பார்கள் பிள்ளைகள்.
இ) என்ன செய்ய வேண்டும் என்பதைப் பெற்றோர் சொல்ல, கேள்வி கேட்காமல் அதைப் பின்பற்ற வேண்டும் பிள்ளைகள்.
ஈ) பிள்ளைகளுக்கு அவசியமான விதிகளைச் சொல்லி, அவற்றை சரியான அணுகுமுறை மற்றும் ஆலோசனையுடன் பின்பற்றச் செய்ய வேண்டும் பெற்றோர்.
உ) இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என அமைதியாக சொன்னாலே, பிள்ளைகள் கேட்டு நடப்பார்கள்.

9. பெற்றோர், பிள்ளைகளை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும்?
அ) இலக்குகளையும், அவற்றின் மதிப்பையும் எடுத்துச் சொன்னாலே, பிள்ளைகள் தாமாக அதை நோக்கி உந்தப்படுவார்கள்.
ஆ) பிள்ளைகள் தமக்குத் தாமே உந்து சக்தியாக இருக்க வேண்டும்.
இ) கட்டளைகளும், மிரட்டல்களும் தான் பிள்ளைகளை உந்திக் கொண்டு போகும்.
ஈ) பரிசுகள், பாராட்டுக்கள், அங்கீகாரம் போன்றவற்றின் மூலம்....
உ) பிள்ளைகளின் தேவைகளை பெற்றோர் நிறைவேற்றினால், அவர்கள் சந்தோஷத்தில், தாமே உந்தப் படுவார்கள்.

10. ஒழுக்கத்தை எப்படிப் போதிப்பது?
அ) பிள்ளைகளின் போக்கிலேயே விட்டு, அதன் விளைவுகளுக்கு பிள்ளைகளே பொறுப்பு எனக் கண்டிப்பாகச் சொல்வது.
ஆ) தமக்கான ஒழுக்கத்தை தாமே போதித்துக் கொள்வார்கள் பிள்ளைகள்.
இ) பிள்ளைகளின் போக்கு பிடிக்காதபோது, பெற்றோரின் வருத்தத்தையும், தர்மசங்கடத்தையும் புரிந்து கொண்டு, பிள்ளைகள் திருத்திக் கொள்வார்கள்.
ஈ) தமது ஒழுங்கீனங்களுக்குத் தாமே பொறுப்பு என்பதை பிள்ளைகள் உணரச் செய்து, சில சிறப்பு சலுகைகளை அவர்களிடமிருந்து பறிக்கலாம் பெற்றோர்.
உ) அடிக்கடி பிள்ளைகளைத் தண்டிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் பிள்ளைகளின் அன்பை இழக்க நேரிடும்.
ஒழுக்கத்தை எப்படிப் போதிப்பது என்று பிறகு விளக்குகிறேன்.

நன்றி : Dr. U. Gautham's MD PhD DPM DCBD
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment