Tuesday 4 September 2012

கண்ணியமிக்க "காயிதே மில்லத்"-ஒரு வரலாற்று பார்வை....


"கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்" என்று போற்றப்படும் ஜனாப் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப், இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர். 

நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து 
சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை 
இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.

அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக 

திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.

அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, 
லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.


பிறப்பு மற்றும் கல்வி :
                                                  திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய ட்டையில் 
5.6.1896-லபிறந்தவர். காயிதேமில்லத் என்ற அரபி சொல்லுக்கு "மக்களின் வழிகாட்டி"என்று பொருள்.இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.

திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல்
 மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு 
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட துவங்கினார்.


அரசியல் பணி 
                                    1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1946 முதல் 52-ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை 
உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952-ம் 
ஆண்டு முதல் 58-ம் ஆண்டு வரை டெல்லி மேல்-சபை உறுப்பினராக 
பதவி வகித்தார்.

1962-ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து 

எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு
பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.


"இந்தியா தான் எங்கள் தாய் நாடு. இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்' என்று அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இங்கே தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கி விட்டு.. 1949-ல் 'இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் காயிதேமில்லத். இதன் முதல் மாநாடே சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் தான் நடந்தது.


1971 ல் பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்தபோது, "தனது ஒரே மகனை போர்க்களத்திற்கு அனுப்ப தயார்" எனக்கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியில் மாநில அரசுக்கு உரிய பங்கு கோரி பெற்றுத் தந்தவர். இந்திய நாட்டு அரசின் தேசிய மொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு என ஓங்கி முழங்கியவர்.


அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.


கேரளா "மஞ்சேரி" மக்களவை தொகுதியிலிருந்து மூன்று முறை (1962, 1967, 1971) தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்காமலே வெற்றி பெற்ற மகத்தான தலைவர். அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.


அன்றைய சென்னை மாநிலத்தின் சட்டமன்ற பிரதான எதிர்கட்சி தலைவராகவும் சிறப்பாக பணியாற்றினார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.


அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதே மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரி கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.


சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழகத்தில் 14 இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை அமைத்தவர். அடக்கமும் ஒழுக்கமும் நிறைந்த நன்னடத்தையால் அனைத்து தரப்பினராலும் "கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்" என அன்புடன் அழைக்கப்பட்டார். 


நோயினால் துன்பம் மற்றும் இறப்பு..

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962-ம் ஆண்டில்
 காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

காயிதே மில்லத்” இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25-ந்தேதி திடீர் உடல் 
நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் 
யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள்.31-ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஏப்ரல் 4-ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் 
ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.

நள்ளிரவு  1-15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது,  அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.

இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள 
அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே  மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.

மறுநாள் (5-ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு 
வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில்இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால்  போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள
 வாலாஜா மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. 
அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம்
 செய்யப்பட்டது. அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

அரசு மரியாதை :
                                       காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது. பின்னர் 1996ல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது. 2003ம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தை கட்டியுள்ளது.காயிதெ மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. 

முடிவுரை :
                            தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல - இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் 
உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம் அனைவரின் உள்ளத்தில் இருக்கிறார்.''



ஆக்கம் & தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment