Friday, 28 September 2012

மெக்ஸிகோவில் தவசம் செய்யும் திருவிழா-ஒரு பார்வை...




நவம்பர் 1 - All Saints Day மற்றும் நவம்பர் 2 - All Souls Day என்று பல கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.  மெக்ஸிகோவில் நவம்பர் 2 - பெரிய விசேஷமான நாளாம்.  ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குடும்பத்தில் இறந்து போன உறவினர்களை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் நாளாம்.  

Oct. 15 முதல் Nov. 2 வரை கோலாகலம்தானாம்  ...... நம்மூரு ஊர் திருவிழா மாதிரி சொன்னார்.   குடும்ப கல்லறைகள் இருக்கும் இடத்துக்கு,  Family Reunion என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஊர் திருவிழா போல ஆஜர் ஆகி விடுகிறார்கள்.  எல்லா கல்லறைகளும் வெள்ளை அல்லது பெயிண்ட் அடிக்கப்பட்டு,  புல்லு பூண்டுகள் எல்லாம் நீக்கி சுத்தமாக்கப்பட்டு,   நிறைய மலர்களால் அழகாக அலங்காரம் செய்யபடுகின்றன.  இறந்து போன உறவினர்களின் விருப்ப உணவு வகைகள் அனைத்தும் சமைத்து கொண்டு வருகிறார்கள்.  ஒரு சின்ன பூஜை மேடை போல அமைத்து, உணவு வகைகளை படைத்து,  ஸ்பெஷல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கிறார்கள்.

வாழைப்பழம், பத்தி,  தேங்காய் மூடி  எல்லாம் இருக்குமா என்று கேட்கலாம் என்று நினைத்தேன்.....  அவற்றிற்குரிய ஸ்பானிஷ் வார்த்தைகளும் சரி,  எனது அபிநயமும் சரி - ரொம்ப கேவலமாக  வந்ததால், அந்த முயற்சிக்கு "சங்கு" ஊதிட்டேன்.

skull சாக்லேட்:  

  Nov. 2 - அந்த விசேஷ நாளை:  "Day of the Dead" என்று அழைக்கிறார்கள். 
 Skeletons and Skulls  போல செய்யப்படும் பொருட்கள், கடைகளில் 
ஏராளமாக அலங்காரப் பொருட்களாக விற்கப்படுகின்றன.  Halloween 
நேரத்து Scary கதைகள் போல கேட்டு கொண்டு இருந்த என்னை,  நாங்கள் 
இருந்த கடையில் ஒரு பிரிவுக்கு அழைத்து சென்று காட்டினார்:  
எலும்பு கூடு - மண்டை ஓடு போன்ற அமைப்பில் உள்ள சாக்லேட்கள்.
 அதை வாங்கி போய்,  இறந்தவர்களுக்கு வைக்கும் படையலில் 
 மறக்காமல் வைப்பார்களாம்.  நல்லா கிளப்புறாங்க பீதியை!  யம்மாடி!

அமெரிக்கா வந்த பின்னும், இந்த  traditional customs விடாமல் வருடா 
வருடம் மெக்ஸிகோ செல்வதாக  சொன்னார். அடுத்த வருஷம் 
பொங்கல் வைக்க ஊருக்கு போகணும் என்று சொல்ல ஆசையாக
 இருந்தது.  ம்ம்ம்ம்...... பெருமூச்சு!  தவசம் 

 கீழ் உள்ள படத்தில்:    ஒரு இனிய தமிழ் கிராமம் அல்ல - ஒரு இனிய மெக்ஸிகோ கிராமம்:  

 அடுத்து அவர் சொன்ன விஷயம்,  சுவாரசிய களஞ்சியம்.  வீட்டில் 
படிக்கட்டுகள் போல மேடை அமைத்து இருப்பார்களாம்.  அவர் 
சொன்னதை பார்த்தால் - கொலு வைக்க அமைக்கும் மேடை போல 
இருந்தது.  எந்த அளவுக்கு புரிந்தது என்று பார்க்க கூகிள்னேன்.  
 அப்படித்தான் தெரியுது.   அந்த ஸ்பெஷல் ஆல்ட்டர்ல, குடும்பத்தில் இறந்தவர்களின்  புகைப்படங்கள்,  மலர்கள்,  அவருக்கு பிடித்த சின்ன
 சின்ன பொருட்கள்,  உணவு பொருட்கள்,  பானங்கள் (விருப்பப்பட்ட 
குளிர் பானங்கள் அல்லது காபி அல்லது பீர் அல்லது Tequila பாட்டில்) ,   மெழுகுவர்த்திகள்,  பத்திகள்,  சின்ன பொம்மைகள் எல்லாம் வைத்து 
அலங்கரித்து வைப்பார்களாம்.  இனிப்பினால் (candy) செய்யப்பட்ட
 சின்ன skulls (மண்டை ஓடுகள்)  எடுத்து வைத்து,  ஒவ்வொன்றிற்கும் 
பின்னால் இறந்த குடும்ப உறுப்பினர்களின்  பெயர் எழுதப்பட்டு 
வைக்கப்படுகிறது.

கீழ் உள்ள படத்தில், Mexican கொலு:  

 நவம்பர் மாதம் இரண்டாம் நாள்,  இறந்து போன குடும்பத்து ஆத்துமாக்கள் 
வீட்டிற்கு விஜயம் செய்யும் என்று நம்புகிறார்கள். அதான் இத்தனை
 ஏற்பாடாம்!  காக்கா உருவத்திலா என்று கேட்க நினைத்து,  கைகள் 
இரண்டையும் விரித்து நானே பறக்க எத்தனிக்கையில்,  அவரே
 அண்டங்காக்கைகள் பற்றி பேச ஆரம்பித்ததும்,  வாலை சுருட்டி - சாரி, 
கைகளை மடக்கி கொண்டேன். 

 குடும்பத்தினர் அனைவரும் கூட்டு குடும்பத்தினர் போல -   வேறு எந்த 
ஊர்களில் இருந்தாலும் தங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுகிறார்கள்.  கல்லறைகளுக்கு சென்று, அங்கேயே விழா கொண்டாட்டம்!  
மெக்ஸிகோவில் பிரசித்தி பெற்ற மரியாச்சி (Mariachi Band - மரப்பாச்சி 
இல்லையாம் மரியாச்சியாம்)  இசைகுழுவினரின் கச்சேரி,  
வாண வேடிக்கைகள்,  பிக்னிக் உணவுகள் எல்லாவற்றுடன் 
அமர்க்களப்படுமாம்.   விடிய விடிய நிகழ்ச்சிகள் - ஜெபங்கள் 
என்று இருக்குமாம்.


குடும்பத்தில் இறந்து போனவர்களை நினைவு கூர்ந்து மரியாதை 
செலுத்துவது மட்டும் அல்ல,  குடும்பத்தின் பெருமைகளை 
மதித்து - உறவுகள் பலப்படுத்தப்படவும் - வேலை நிமித்தமாக 
பல ஊர்களில் இருக்கும் குடும்பத்தினர் - தங்கள் குடும்பத்தின் 
வேர் பதிந்து உள்ள இடத்தில் சங்கமிப்பதும் இந்த நாளில் என்று 
சொன்னார்.   அட அடடா....... நம்மூரு நாட்டமை குடும்பங்கள் 
 ரேஞ்சுக்கு சொல்லிட்டாரே!  என்ன, அங்கே ஆலமரத்தடி - 
இங்கே கல்லறையடி - அம்புட்டுத்தேன்!

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment