Tuesday 23 October 2012

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா! - ஒரு சிறப்பு பார்வை...

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக நவராத்திரி நாட்களில் இங்கு நடக்கும் தசரா பிரசித்திபெற்றது. 

தமிழகத்தில் மைசூருக்கு நிகராக சுமார் பத்து லட்சம் முதல் 15 லட்சம் வரை கூடி வழிபடும் இடம் குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் ஆகும்.தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இத் தலம் கடந்த 25 ஆண்டுகளில் மிக அபரிதமான வளர்ச்சி கொண்டுள்ளது.அறுபடை வீடான திருச்செந்தூரிலிருந்து 13 கிமீ தூரத்தில் திருச்செந்தூர்-கன்னி யாகுமரி நெடுஞ்சாலையில் குலசேகரன்பட்டினம்என்ற கடற்கரை கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.தென் தமிழகத்தில் சிறந்து விளங்கும் சக்தி தலங்களில் இது ஒன்றாகும்.இங்கு அம்மையும் அப்பனுமாக ஸ்ரீஞான மூர்த்தீஸ்வரரும் ஸ்ரீமுத்தாரம்மனும் சேர்ந்து சுயம்பாக பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.இயற்கை துறைமுகமாகவும் முன்பு ஏற்றுமதி இறக்குமதி போன்ற வணிகத்திற்கு துணையாக இருந்த நகர் தற்போது ஊராட்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் தொகையுடன் உள்ளது. அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இந்நகர் வழியாக பாண்டிய மன்னர்கள் இறக்குமதி செய்ததாகவும், இலங்கை மன்னனை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாக நாடு திரும்பியதாகவும் புராணம் கூறுகிறது.குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் திருக்காட்சி அளித்ததால் இநநகர் பெருநகராக மாற்றப்பட்டு மன்னன் பெயராலேயே குலசேகரன் பட்டணம் என்று அழைக்கப்படுகிறது.1934ஆம்  வருடத்திற்கு முன் இப்போது வழிபடும் மூல விக்ரகங்கள் இல்லை. சுயம்புவாக தோன்றி சுவாமி மற்றும் அமமன் விரகங்களே இருந்தன. சுவாமி அம்மன் பெரிய திருவடி அமைத்து வழிபட பக்தர்கள் எண்ணிய போது கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி குமரி மாவட்டம் மைலாடியில் சென்றால் உங்கள் எண்ணம் ஈடேறும் என்று வழிகாட்டியுள்ளார்.இதே போன்று மைலாடியிலுள்ள சுப்பையா ஆசாரி கனவிலும் தோன்றி ஒரே கல்லில் ஒரே பீடத்தில் சுவாமி அம்மனை அருகருகே அமைந்துள்ள ஆண்பாறை மற்றும் பெண் பாறையில் வடித்திடு என்றும், அதற்கான பாறை தெற்கு நோக்கி சென்றால் கிடைக்கும் என்றும் அவ்வாறு வடித்ததை குலசை மக்களிடம் வழங்கிடு என்றும் அம்மன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அம்மனே தேர்ந்தெடுத்த திருமேனிதான் இன்றும் பக்தர்கள் கோவிலில் வழிபடுகின்றனர்.இதே போன்று 17.10.1927ல் கோவிலில் அமைத்து இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கும் கோவில் மணியையும் அம்மனே ஏற்பாடு செய்ததுதான் என்கின்றனர்.குலசேகரன்பட்டினம் மலையன் தெருவில் மளிகை கடை நடத்தி வந்த சுப்பையா பிள்ளை கனவில் தோன்றிய அம்மன் அவரது கடைக்கு மறுநாள் வரும் உளுந்து மூட்டையில் இருக்கும் பணத்தைக் கொண்டு கோவிலுக்கு ஆலயமணி செய்து வைக்க பணித்தார்.அவ்வாறே மறுநாள் நடந்ததால் அம்மன் பணித்தபடி அவர் 35 படி கொள்ளவு கொண்ட 56 கிலோ எடையுள்ள மணியை வாங்கி கோவிலுக்கு வழங்கியதாக வரலாறு தெரிவிக்கிறது.பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துக்களே. பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக வழிபட்டனர். அம்முத்துக்கள் அம்பாளாக திருமேனி கொண்டன. முத்துக்களிலிருந்து அம்மன் உதித்ததால் முத்தாரம்மன் என அம்மன் அழைக்கப்படுகிறார்.இஙகு நவராத்திரி திருவிழாதான தசராத் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.புரட்டாசி மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் பிரமை திதியில் கொடியேற்றி 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது.அம்மன் தினசரி பல்வேறு கோலத்தில் காட்சி தருவார்.பத்தாம் திருவிழா அதாவது தசரா தினத்தன்று அம்மன் மகிசாசுர வர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்கிறான்.முனிவராக துவங்கிய வரமுனி தனது பிற்காலத்தில் அசுரனாகி வாழ்வை நடத்தியதால் அந்த மகிஷாசூரனினை அழிக்க முனிவர்கள் வேண்ட பராசகதி அழிக்கின்றார்.அந்த நாள்தான் தசரா திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது.முன்பு குலசேகரன்பட்டினம் ஊருக்குள் நெருக்கமான சந்தில் நடைபெற்ற மகிஷாசூர சம்ஹாரம் தற்போது கடற்கரையில் சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு நடைபெறுகிறது.இந்த திருவிழாவிற்காக பக்தர்கள் பத்து நாட்கள் முதல் 40 நாட்கள் வரை விரதம் இருந்து வேடமிட்டு காணிக்கை பெற்று திருக்கோவிலில் சேர்க்கின்றனர்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 10 முதல் 15 லட்ச பக்தர்கள் தசரா திருவிழாவின்போது குவிகின்றனர்.முன்பு மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தசரா குழுக்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும். இப்போது ஆயிரக்கணக்கான குழுக்கள் வேடம் தரித்து வந்து கலந்து கொள்கின்றன.

 தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வதும், ஆயிரத்துக்கு மேற்பட்ட தசரா குழுக்கள் அமைத்து கரகம், காவடி, குறவன்- குறத்தி, நையாண்டி மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஊர் ஊராக சென்று நடத்துவதும் இதன் தனிச் சிறப்பாகும். 

வேடம் அணியும் பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள், 9 நாள், 7 நாள் என விரதம் இருப்பார்கள். விரதம் தொடங்கும் முன் குலசேகரன்பட்டினம் கடலில் நீராடி விட்டு கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். தற்போது தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர். 

விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலில் கொடியேறியதும், கோவிலுக்கு வந்து தங்களது வலதுகையில் காப்பு கட்டுவார்கள். அதன்பின் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். 

விஜயதசமி அன்று அனைவரும் குலசை கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் தசரா விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தொகுப்பு : மு,அஜ்மல் கான் .

No comments:

Post a Comment