Tuesday, 23 October 2012

உலக ஐக்கிய நாடுகள் தினம் -ஒரு சிறப்பு பார்வை ....

File:The United Nations Building.jpg
 நாளை ‘ உலக ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. U.N.O. (United Nations Organisation) என்பதன் தமிழாக்கம் ஐக்கிய நாடுகள் சபை என்பதாகும். ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்பார்கள். 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.


ஐ.நா. அமைப்புக்கு முன்னமே இது போன்றபல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் (League of Nations) ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தைப் பேணுதல் என்றபிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது.
இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்று கூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றநோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு.
ஐ.நா.வின் பணிகளை நெறிப்படுத்தும் விதிகளையும் கோட்பாடுகளையும் கொண்ட ஆவணமே ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Charter) என்றழைக்கப்படுகிறது. உறுப்பு நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் பொது லட்சியங்களை எட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் அதில் அடங்கி உள்ளன. ஒரு நாடு ஐ.நா.வில் உறுப்பினராக சேரும்போது இச்சாசனத்தின் விதிகளை ஏற்று கையொப்பமிட வேண்டும்.
1945ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி ஐ.நா.சாசனம் உருவாக்கப்பட்டு 51 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு.
க்ஷி உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துவது,
க்ஷி நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பது,
க்ஷி ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்
க்ஷி இந்தக் குறிக்கோள்களை எய்துவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு பொது அரங்கமாக செயல்படுதல்.
‘ஐக்கிய நாடுகள்’ என்றபெயரை முன்மொழிந்தவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆவார். ஐ.நா. சாசனம் கையெழுத்திடப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக ரூஸ்வெல்ட் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் முன்மொழிந்த ‘ஐக்கிய நாடுகள்’ என்றபெயரையே ஏற்றுக்கொள்ள சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் பங்குபெற்றஅனைத்து நாடுகளும் சம்மதித்தன.
இதன் தலைமையகம் அமெரிக்கா நாட்டில் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகத்தில் 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்றபொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. இந்தத் தலைமையக கட்டிடத் தொகுதி 1949, 1950ம் ஆண்டுகளில் ஜோன் டி, ராக்பெல்லர் ஜுனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது.
ஐ.நா.சபையின் சின்னத்தில் வெளிர்நீல நிற பின்னணியில் வெள்ளைநிறத்தில் ஐக்கிய நாடுகள் இடம் பெற்றிருக்கும். போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக நீல நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெள்ளையும் நீலமும் ஐ.நா. அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக உள்ளன. ஐ.நா.வின் அலுவலக மொழிகளாக அரபிக், சைனிஸ், ஆங்கிலம், பிரென்ச், ருஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் உள்ளன. தலைமையகத்தில் செயல் மொழிகளாக ஆங்கிலமும், பிரென்ச் மொழியும் உள்ளன. 1945ம் ஆண்டு இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராக ஆனது. இதன் தற்போதைய பொதுச் செயலர் பான் கி மூன்.
ஐ.நா.சபை சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம் (UNICEF)அகதிகளை பராமரிக்கும் UNHCR நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான UNPF நிறுவனம், மசடஊ எனப்படும் மக்கள் தொகை நிதியம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஐ.நா. அமைப்பின் முக்கியமான ஏஜென்சி நிறுவனங்களாக IMF எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம், World Bank எனப்படும் உலக வங்கி, ILO எனப்படும சர்வதேச தொழிலாளர் கழகம், WHO எனப்படும உலக சுகாதார நிறுவனம், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான ‘யுனெஸ்கோ’ நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்றசர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் எதுவென்றால் ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்’ ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதி மன்றம் நீங்கலாக ஏனைய ஐந்து அமைப்புகளும் நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகின்றன.


(1) ஐ.நா. பொதுச்சபை (General Assembly)
(2) ஐ.நா. பாதுகாப்பு மன்றம் (Security Council)
(3) ஐ.நா. பொருளாதார சமூக மன்றம் (Economic and Social Council)
(4) ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம் (Trusteeship Council)
(5) ஐ.நா. செயலகம் (Secretariat)
(6) சர்வதேச நீதி மன்றம் (International Court of Justice)


1. ஐ.நா. பொதுச்சபை: இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.





File:UN security council 2005.jpg
2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினைப் பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்றஅதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.

UN Economic and Social Council
3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.



UN Trusteeship Council
4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.

5. ஐ.நா. செயலகம் : இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்றபணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.


International Court of Justice
6. சர்வதேச நீதிமன்றம் : என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும்.


இந்த நீதிமன்றத்தில் நாடுகள் மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய முடியும். தனிப்பட்டவர்கள் வழக்காட முடியாது. ஒரு நாடு இந்த நீதிமன்றத்தை அணுகும்போது இந்த நீதி மன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்குப் பணிந்து நடப்பதாகவும் அந்த நாடு உறுதியளிக்க வேண்டும். 15 நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தில் இடம் பெறுவார்கள். ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள் ஒரே சமயத்தில் இடம்பெறமாட்டார்கள். நீதிபதிகளின் பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.


ஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அதற்கு வேறு வருமானம் கிடையாது. அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன.


ஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடுகளின் ஐக்கியத்தையே முதன்மையாகக் கொண்டது. உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் செய்ய இயலாது. குறிப்பாக பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் எதிர்த்தாலும் அந்த விஷயம் ஐ.நா.வினால் மேற்கொள்ளப்பட மாட்டாது.


உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. எனினும் ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவிமக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்றகுற்றச்சாட்டு இருந்து வருகிறது.


எல்லா நாடுகளின் மக்களையும் சமமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. சபைக்கு உண்டு. இலங்கையில் முள்கம்பி வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழ் மக்களைப் பாதுகாத்து நல்லதோர் தீர்வை வழங்க வேண்டுமென ஐ.நா. தினத்தில் தமிழ் மக்கள் வேண்டி நிற்கிறார்கள்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment