Saturday 27 October 2012

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!


மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். “காதிரியா தரீகா” என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது. 
ஜனனம
எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, காதிரியா தரிக்காவின் ஸ்தாபகர், மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்,( 18 March 1077)ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள். 
ஜனனத்தின் மகத்துவம்
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். 
கல்வி
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். 
ஷைக்கின் சகவாசம் 
எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள். 
துறவு நிலை 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள். 
*காதிரியா தரீக்காவின் உருவாக்கம்* 
ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு “ராத்திப்” என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள். 
முஹியித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை
ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார். 
அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல்
கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள். 
குடும்ப வாழ்க்கை
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள். 
மறைவு
40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள்.





என் கருத்து :

ரபீவுல் ஆகிர் மாதம் வந்து விட்டால் அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அநாச்சாரங்களில் முஹ்யித்தீன் அப்துல்; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் தான் கொடுமையிலும் கொடுமை. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் அந்தந்த ஊர்களில் தான் நடக்கின்றன. ஆனால் தமிழகமெங்கும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் கேளிக் கூத்துக்கள் சொல்லி மாளாது. அப்துல்   காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் பள்ளிகள் தோறும் பரவசமாக முஹ்யித்தீன் மௌலிது ஓதப்படுவது ஷிர்க்கின் உச்சக் கட்டம்.

அல்லாஹ்வை வணங்க கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் என்னும் இறையில்லங்களில் அல்லாஹ்வை அழைத்துப் பிராத்திப்பதை விட்டு விட்டு ஒரு மனிதரை அழைத்துப் பிரார்த்திப்பது பச்சையான ஷிர்க் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இதை உணர மாட்டீர்களா?

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும் (திருக் குர்ஆன் 7:194)


நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளையே கொண்டாட மார்க்கத்தில் அனுமதி இல்லாத போது, அவர்களை தம் உயிரினும் மேலாக மதித்த சத்திய சஹாபாக்கள் கொண்டாடாத போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது மிகப் பெரும் வழிகேடல்லவா? நான்கு கொடியை பக்தி சிரத்தையுடன் தூக்கி ஊர்வலம் செல்வதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும், அதற்காக நேர்ச்சை செய்வதும் இவை யாவும் நரகப் படுகுழியில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.



அறிந்துக் கொண்டே பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்பவன் பிடிபட்டு தண்டிக்கப்பட்டால் அது நியாயம் தான். ஆனால் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்று மிகவும் ஆடம்பரமாகப் பயணத்தை மேற்கொள்ளும் போது பரிசோதனையில் அது போலியானது எனத் தெரிய வந்து நீங்கள் தண்டிக்கப்பட்டால் எவ்வளவு வேதனைப்படுவீர்கள்?

அறிந்து கொண்டே தவறுகளைச் செய்தவன் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவது உறுதி. நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் உரைகல்லாக அல்லாஹ்வின் திருமறையும் அவனது திருத்தூதரின் வழிகாட்டுதல்களும் தௌ;ளத் தெளிவாக நம் முன்னே இருக்கும்போது அவற்றை ஏரெடுத்துப் பார்க்காமலும், செவி தாழ்த்திக் கேட்காமலும் ‘முன்னோர்கள் காட்டிய வழி’ என்று அநாச்சாரங்களிலும், வழிகேடுகளிலும் பிடிவாதம் காட்டுவீர்களானால் அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.

இது நாள்வரை அறியாமையினால் இந்த கொடிச்சீலை விழாவைக் கொண்டாடி இருந்தால் அறியாமல் செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் அழுதழுது மன்னிப்புக் கேளுங்கள். இந்த அநாச்சார விpழாவை இனி கொண்டாடுவதில்லை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சபதம் செய்யுங்கள்.


அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)

தொகுப்பு : மு.அஜ்மல் கான் 

No comments:

Post a Comment