Monday, 22 October 2012

போலிகளைக் கண்டு மயங்கி பணத்தை பறிகொடுப்பவர்கள்! ஒரு சமுக பார்வை...



ரசியல் பண்ண மூன்று நபர்கள் தேவை என்றால், போலிகள் அரங்கேற இரண்டு நபர்களே போதுமானது! இரண்டு நபர்களுக்கு இடையே மூன்றாவதாக ஒருவர் வரும்போதுதான் அரசியல் வருகிறது. ஆனால், இரண்டாவதாக ஒருவர் வந்தாலே போலி அங்கே வந்துவிடும்! அந்த அளவுக்கு அரசியலைவிட பவர்ஃபுல்லானது போலி!
 
இது எத்தர்களின் காலம்… போலிகளைக் கண்டு மயங்கி பணத்தை பறிகொடுப்பவர்கள் ஏராளம். எல்லா துறையிலும் நீக்கமற வியாபித்து இருக்கும் இந்த போலிகளை ஓரளவாவது அடையாளம் காட்டும் முயற்சியே இக்கட்டுரை.
‘முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரிந்துவிடும்’ என்பது போல, நாம் குறிப்பிட்டிருக்கும் சில அடையாளங்கள் தெரிந்தாலே, போலியாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையோடு அவர்களை அல்லது அவற்றை அணுகுங்கள். பாடுபட்டுச் சேர்த்த பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

பணம் பத்திரம்!
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போலி நிதி நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு, முதலுக்கே மோசம் போய், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைகிறவர்கள் இன்றும் பலர். இந்த போலி நிதி நிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..? இதோ சில ‘நச்’ வழிகள்..!
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என்று அவசியம் பாருங்கள்.
பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.
சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.
மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப்படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விடலாம் அந்த நிறுவனம் போலியானது என்று!
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைகளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.
சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அலுவலகம் திறப்பது, அவர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றாகும்.
அவசரப்படுத்தி முதலீடு செய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய்துவைப்பது போன்ற வையும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே! 
பானுமதி அருணாசலம்.

நல்லவரா, கெட்டவரா?
ரியல் எஸ்டேட்டில் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் போலி புரோக்கர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது?
சூப்பர் டிப்ஸ்கள் இதோ…
போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள்.
ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவணங்கள் என வியாபார ரீதியாகக் கொடுக்க வேண்டிய எதையுமே உங்களுக்குத் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற்றையும் துண்டுக் காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள்.
டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட்ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலில் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தியாசப்படும்.
கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பணம் மட்டுமே கேட்பார்கள்.
காசோலை வாங்கும்போது வெவ்வேறு பெயரிலோ தனிமனிதரின் பெயரிலோ வாங்குவார்கள்.
உங்கள் கணக்கிற்கு யாருடைய கணக்கில் இருந்து காசோலை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்.
இத்தனை லாபம் நிச்சயம்; பத்திரத்தில்கூட எழுதித் தருகிறோம் என்கிற போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.
ஆள் பிடித்து தந்தால் கமிஷன் தருவதாகவும் ஆசை காட்டுவார்கள்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என அனைத்து சந்தைகளிலும் வியாபாரம் செய்கிறேன் என்று பச்சைப் பொய் சொல்வார்கள்.
செ.கார்த்திகேயன்.


பார்த்து வாங்குங்க!
ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நிலத்தின் மீதுள்ள உரிமைகள் போலியானதாக இருக்கும், புரோக்கர்களில் சிலர் போலிகளாக இருப்பார்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சில போலியாக இருக்கும்… இப்படி பல போலிகளை எதிர்கொள்ளவேண்டிய துறை இது. அதனால் அதிக கவனம் தேவைப்படும்.
மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலகட்டத்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக் கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையாளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்லது பாகப் பிரிவினை செய்து தந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தாய் பத்திரம் அல்லது கிரயப் பத்திரம் தொலைந்துவிட்டது என்று சொன்னால் கூடுதலாக உஷாராகுங்கள்.
வீட்டை நேரில் பார்க்காமல் வாங்காதீர்கள். அதில் யாராவது குடியி ருந்தால் அவர்களிடம் நீங்கள் வீட்டை வாங்கும் விஷயத்தைச் சொல்லுங்கள். சில இடங்களில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கு ஆள் கூட்டி வருவதாகச் சொல்லி வீட்டைக் காட்டி, போலிபத்திரம் மூலம் வீட்டை விற்கும் வேலையும் நடந்து வருகிறது!
புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் ஒரு முறைக்கு நூறு முறை விசாரியுங்கள்.
சொத்தின் உரிமையாளரை கண்ணில் காட்டாமலே விலை பேசிக் கொண்டிருந்தால் அந்த புரோக்கரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
புரோக்கர் நல்லவர்தானா என்பதை அறிய அப்பகுதி சார் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிந்துவிடும்.
சி.சரவணன்.


காந்தி கணக்கு!
நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாராகின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வைக்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்…
வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும்.
பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் இந்த அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும்.
அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக் கேற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும்.
20 ரூபாய் – செவ்வகம், 50 ரூபாய் – சதுரம், 100 ரூபாய் – முக்கோணம், 500 ரூபாய் – வட்டம், 1000 ரூபாய் – டைமண்ட். 10 ரூபாய் நோட்டுக்கு மட்டும் இந்தக் குறியீடு இருக்காது.
கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழையைத் தூக்கிப் பார்த்தால் அதில் ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத்திலும், பாரத் என்று இந்தியிலும் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிறமாகவும் இது இருக்கும்.
மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிட பட்டிருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும் போது தெரியும்.
மாறும் நிறம்: நடுவில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாயின் நிறம் சாய்த்து பார்க்கையில் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும்.
அசல் நோட்டுகளை தொட்டு உணரும்படி மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை மேலெழுந்து பிரின்ட் ஆகியிருக்கும்.
- நீரை.மகேந்திரன்.

அதுதான்; ஆனா அது இல்லை..!
பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. ஆனால், நயா பைசா செலவு செய்யாமல் அப்படியே காப்பி அடித்து, கல்லா கட்டும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் அசந்தாலும் நம் கண்ணை ஏமாற்றிவிடும் போலி பிராண்டுகளைக் கண்டுபிடிக்க சில வழிகள்…
புகழ் பெற்ற பிராண்டுகளின் பெயரை கண்டுபிடிக்க முடியாதபடி லேசாக மாற்றி இருப்பார்கள். அல்லது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ  கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு வேறு ஒரு பெயரைச் சேர்த்திருப்பார்கள். எனவே, ஒரிஜினல் பிராண்டின் எழுத்துக் களை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
லோகோவை காப்பி யடித்து சில மாற்றங்களை செய்திருப்பார்கள். இதனால் நமக்கு எது ஒரிஜினல், எது போலி என்கிற குழப்பம் வரும்.
புகழ்பெற்ற பிராண்டு களின் பெயரை சம்பந்தமில்லாத வேறு ஏதாவது பொருட்களுக்கு வைத்து அள்ளி விடுவார்கள். உதாரணமாக சோனி என்ற பெயரில் ஷேவிங் கிரீம் வரும்!
சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட  சில இடங்களில் மட்டுமோ அல்லது தனி விற்பனை மையங் களில் மட்டுமோதான் கிடைக்கும். ஆனால், போலி பொருட்கள் எந்த கடையில் வேண்டுமானாலும் கிடைக்கும்.
துணி வகைகளில் ஒரிஜினல் பிராண்டில் காணக்கூடிய நேர்த்தி, வடிவம், மிருதுதன்மை மற்றும் கலர்கள் போலி பிராண்டுகளில் இருக்காது.
சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட கலர் அல்லது குறிப்பிட்ட வாசனைகளில் மட்டுமே கிடைக்கும்.
சில பிராண்டட் பொருட்களுக்கு விற்பனைக்கு பிறகான சேவை மற்றும் வாரண்டி, கியாரண்டி போன்ற உத்தரவாதங்கள் இருக்கும். போலிகளுக்கு இந்த உத்தரவாதங்கள் இருக்காது.
நீரை.மகேந்திரன்
நன்றி:- சி.சரவணன், பானுமதி அருணாசலம், நீரை.மகேந்திரன், செ.கார்த்திகேயன்.

தொகுப்பு : மு.அஜ்மல்  கான்.



No comments:

Post a Comment