Monday, 29 October 2012

நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படப்போகும் விளைவு!!- ஒரு சமுதாய பார்வை ...




 கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.சிறுவணிகத் துறையில் அதாவது மளிகைப் பொருட்களை விற்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இந்த அனுமதியை அளித்துள்ள மத்திய ஆட்சியாளர்களின் செயலைப் பற்றி இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், தமது ஓட்டு சீட்டு அரசியலுக்கு ஏற்ப பல வண்ண கருத்துகளை தெரிவித்துள்ளன. இதன் மூலம் மத்திய அரசு எந்த கொள்கையின் அடிப்படையில், இந்த அனுமதியை அளித்துள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.தாய 



”காங்கிரசு ஆட்சியாளர்கள் என்பதனால்தான் இந்த அனுமதியை அளித்துள்ளனர். நாங்கள் ஆட்சி ஆண்டால் இப்படி ஒரு அனுமதியை வழங்கியிருக்க மாட்டோம்”, என்பதை போன்று நமது காதில் பூ சுற்றுகின்றனர். தாங்கள்தான் மக்கள் நலனிலும், நாட்டின் நலனிலும் அக்கறை உள்ளவர்களைப் போன்று நாடகமாடுகின்றனர்.

அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதில் காங்கிரசு கட்சிக்கும், ஏனைய கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காங்கிரசு அரசின் இந்த முடிவை எதிர்ப்பதாக கூறும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஆளும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டுக் கம்பெனிகளின் வாசலில் தவமிருக்கிறார். மேற்குவங்கத்தை ஆண்ட போலிகம்யூனிஸ்டு முதல்வர் அமெரிக்காவிற்கே சென்று பன்னாட்டு கம்பெனிகளின் காலில் விழுந்துவிட்டு வந்தார்.

தமிழக முதல்வர் ஜெயா மக்களுக்கே மின்சாரம் இல்லாவிட்டாலும், பன்னாட்டு கம்பெனிகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இலவசமாக, தடையில்லாமல் மின்சாரம் தந்து தனது விசுவாசத்தைக் காட்டி வருகிறார். இவரைப் போன்றவர்தான் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி. ஆனால் இவர்களோ சில்லரை வணிகத்துறையில் தங்களது மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்!

எந்த உலகமயமாக்களின்படி சிறப்பு பொருளாதாரமண்டலங்களை கொள்கை ரீதியாக இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, அந்தக் கொள்கையின் இன்னொரு பகுதிதான் சில்லரை வணிகத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதுமாகும்.

மளிகைக்கடை வைக்க அன்னிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை, மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம் என்கிறார் மத்திய மந்திரி மாமா நாராயணசாமி. மாமாவின் இந்த பேச்சு மத்திய அரசின் ஜனநாயகத் தன்மையை காட்டுவதாக தவறாக நினைத்துவிடாதீர்கள்! இந்த அறிவிப்பு நயவஞ்சகம் நிறைந்தாகும். மத்திய அரசின் இந்த நயவஞ்சகத்தைப் பற்றியும், சில்லரை வணிகத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றியும் இனி பார்ப்போம்.


1,பல நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை விற்கும் கடைகள் என்றால் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்யலாம்.

2,ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை மட்டும் விற்பதாக இருந்தால் 100 சதவீதம் முதலீடு செய்யலாம்...

என்று மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வணிகத்துறை அமைச்சர் மாமா ஆனந்த் சர்மா, சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், ஏற்படப் போகும் நன்மைகள் என்று சிலவற்றை பட்டியலிட்டார்.அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்களை கட்டுபடுத்தும் விதிமுறைகளையும் வகுத்துள்ளதாகவும் கூறினார்!

1. பத்துலட்சம் மக்கள் தொகைக்கும்  மேற்பட்ட நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

2.ரூபாய் 300/- கோடி முதலீடு செய்ய தகுதியுள்ள நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

3.பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு விவசாயிகளிடம்தான் பொருட்களை கொள்முதல் செய்யவேண்டும். போன்ற நிபந்தனைகளை நமது மாமாக்கள் விதித்துள்ளார்களாம்!

10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் மளிகை கடை வைக்க அனுமதிப்போம்”, என்பது முதற்கட்ட நடவடிக்கைதான்.அன்னிய நிறுவனங்களை முதலில் பெரிய நகரங்களில் அனுமதித்த பின்னர்,அந்த நகரங்களில் உள்ள சிறுவியாபாரிகளை விட சிறிது குறைவான விலைக்கு பொருட்களை அவர்கள் விற்பார்கள்.இதனால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அந்நகரங்களில் சிறுவணிகர்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள்.

பெரு நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளில் குறைவான விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக அறிந்துகொள்ளும் ஏனைய நகரங்களில் உள்ள  மக்களும், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டுள்ள தூண்டிலில் சிக்கிக்கொள்வார்கள்.இதன் பிறகு அனைத்து இடங்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்துவிடும்.சிறிது காலத்தில் இங்கே உள்ள சிறுவணிகர்களும் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள்.இதன் பிறகு உலகில் உள்ள மாபெரும் நிறுவனங்களாக உள்ள ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டுமே சில்லரை வணிகத்தில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்துவார்கள்.

சில்லரை வணிகத்தில் உள்ள கோடிக்கணக்கான வணிகர்கள் மட்டுமல்ல,அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ள பரந்து, விரிந்த வலைப்பின்னலும் முற்றாக அறுத்தெரியப்பட்டுவிடும்.

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும், இந்த வலைப்பின்னலைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.சிறுவணிகர்கள் ஒழித்துக்கட்டப் படுவதை விட, இந்த வலைப்பின்னலை அறுத்தெறிவதுதான் மிகவும் அபாயகரமானதாகும்.இந்த வலைப்பின்னலில் நான்கு கோடி சிறு வணிகர்கள்,அக்கடைகளில் வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,80 கோடி விவசாயிகள்,லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள்,லாரி ஓட்டுனர்கள்,சுமை தூக்கும் தொழிலாளார்கள்,சிறு தொழில் துறையில் உள்ள கோடிக்கணக்கானோர்,நெசவாளர்கள் என்று நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இந்த வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் அனைவரின் வாழ்க்கையையும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு சூறையாடிவிடும்.

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்வதால்,விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்,இதனால் மக்களுக்கு குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் மத்திய  அமைச்சர் ஆனந்த் சர்மா நமக்கு பொறி வைக்கிறார்.

மத்திய  அமைச்சர் ஆனந்த் சர்மா இந்த வாதம் முழு பொய்யுமல்ல,முழு உண்மையும் அல்ல.அரை உண்மையாகும்.முழு பொய்யை விட அரை உண்மை ஆபத்தானது.

பன்னாட்டு நிறுவனங்களை சில்லரை வணிகத்துறைகளில் அனுமதிப்பதன் மூலம் சிறு வணிகர்கள் முற்றாக ஒழிக்கப் படும் வரை, ஒப்பீட்டளவில் இவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் சிறிது விலை குறைவாக மக்களுக்கு கிடைக்கும்.விவசாயிகளுக்கும் இதே போன்று சிறிது கூடுதல் விலை கிடைக்கும்.

சிறு வணிகத்துறை மூலம் பிணைக்கப்பட்டுள்ள வலைப்பின்னல் அறுத்தெரியப் பட்ட பின்னர், பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் அனைத்து அம்சங்களிலும் ஏகபோக ஆதிக்கம் பெற்று விடுவார்கள்.இதனால் இப்போது இருப்பதைவிட பன்மடங்கு பொருட்களின் விலையை அதிகரித்து விடுவார்கள்.விவசாயிகளின் விளை பொருட்களின் விலையையும்,தங்களின் விருப்பத்திற்கும், கொள்ளை லாபத்திற்கும் ஏற்ப குறைத்து விடுவார்கள்.

நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளையும்,தமது பிடிக்குள் கொண்டுவந்து அவர்கள் விரும்புகிற படிதான் உற்பத்தி செய்ய ஆட்டுவிப்பார்கள்.இவர்களின் நிபந்தனைகளை நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் பெரும்பான்மையாக உள்ள சிறு விவசாயிகள் ஏற்க முடியாமல் ஒன்று விவசாயத்தில் இருந்தே விரட்டி அடிக்கப்படுவார்கள்.அல்லது தமது நிலங்களிலேயே பன்னாட்டு 
நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுவிடுவார்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.

இதன் பிறகு ஆட்சியாளர்களே நினைத்தாலும் இவர்களைகட்டுப்படுத்த முடியாது.ஏனேன்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சில்லரை வணிகத்திற்கும்,விவசாயம் மற்றும் ஏனைய துறைகளுக்குமான வலைப்பின்னல் அறுத்தெறியப்பட்டு, இவற்றின் மீதான முழுக்கட்டுப்பாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும்.இந்த சூழலில் ஆட்சியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த நினைத்தால்,தாங்கள் உருவாக்கிய வலைப்பின்னலை அவர்கள் சிறிது சிக்கலுக்கு உள்ளாக்கினாலும், நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும்.இதை தவிர்ப்பதற்கு மீண்டும் உள்நாட்டு வலைப்பின்னலை உருவாக்குவதும் உடனடி சாத்தியம் இல்லை.ஏனென்றால் உள்நாட்டு வலைப்பின்னலை உருவாக்குவதற்கான மூலதனம் உட்பட அனைத்து ஆற்றலையுமே  அப்போது நாம் நாம் இழந்து போயிருப்போம்.

எனவே பன்னாட்டு நிறுவனங்கள்தான் நாட்டின் சமூகம்,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும்,கட்டுப்படுத்தும் சக்திகளாக உருவெடுத்திருப்பார்கள்.
நாட்டின் தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவானதுதான்.தொழிற்துறையில் சில கோடி தொழிலாளர்கள்தான் பாதிக்கபடுவார்கள்.தொழிற்துறையின் வலைப்பின்னல் எப்போதுமே ஏகாதிபத்தியங்களோடுதான் பிணைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் ஒட்டுமொத்த நாட்டையே நிலைகுலைய வைக்கும் அளவிற்கு அது வலிமையானது அல்ல.  


இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.

 வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.

 அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்! எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் ""கொள்முதல் பாணி'' இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.


 உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த ""மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த'' நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக ""பாடுபட்ட சக்திகள்'' வென்றுவிட்டன. ஆனால், ""இந்தியா'' தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.

 பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

 இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

  இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.

 பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.

 அதேசமயம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.

 இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.


 இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.

 வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் "கொள்முதல் பாணி' ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.

 விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

 நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.

 மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.

 சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

 கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: ""சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் - அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்''.

 இதைவிட முக்கியம், சிறு - குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.

 கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.

 இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.

 இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, ""நகர்ப்புற விலை நிர்ணயம்'' கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.

 நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?

 அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.

 இப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.

 கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.

 சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்!

 இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.

 கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.

 இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.

 வார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.

 ஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.

 மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.

 மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.

 இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர்.

 இங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.

 கால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத்தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.

 அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.

 விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு.

 கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.

 அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.

 எனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.

 இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் ""எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது'' என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்பட

குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்!


  
ஆனால்,சில்லரை வணிகத்தின் வலைப்பின்னலோடு ஏறத்தாழ நூறுகோடி மக்களும் பிணைக்கப்பட்டுள்ளதால், நாடே அன்னிய சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும், அதிகாரத்திற்குள்ளும் சென்றுவிடும்.ஆகவே சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்பது நாட்டை மீண்டும் காலணியாக்கும் உச்சகட்ட செயலாகும்.1947-க்கு முந்தைய காலணி ஆதிக்கத்தை விட இப்போதைய இந்த வடிவிலான காலணி ஆதிக்கம் கோரமானதும்,அழிவை மட்டுமே உள்ளடக்கியதுமான செயலாகும்.

எனவே மத்திய அரசின் இந்த துரோகத்திற்கு எதிராக இந்த நிமிடமே மக்களை   அமைப்பாக அணிதிரட்டி போராடுவது அவசர,அவசிய தேவையாகும். 

   நன்றி: அசோக் சாவ்லா, எஸ் .குருமூர்த்தி, செந்தில் குமார், சுரேஷ்குமார்.

  தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment