Sunday 14 October 2012

டாக்டர் அப்துல் கலாம் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில்கள்!!- ஒரு சமுக பார்வை....



1.இந்தியாவை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல இளைய சமுதாயத்துக்கு தங்களுடைய அறிவுரை என்ன?
ஆர்.சரண்யா, சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 



டாக்டர் அப்துல் கலாம் : நாம் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையின் படி, எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக கீழ்க்கண்ட 5-விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை.

1. பெண் கல்வி மற்றும் உடல்நலம்

2. விவசாயம் மற்றும் உணவு பதனிடல்
3.தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம்
4.உள்கட்டமைப்பு வளர்ச்சி
5.முக்கிய தொழில்நுட்பங்களில் சுயசார்பு ஆகியன.

இவ்விஷயங்களை மனதில் கொண்டு இளைஞர்கள் தங்கள் படிப்பில் மிகச்சிறந்து விளங்குவதன் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக்க உதவலாம். நீங்கள் ஒவ்வொருவரும், வாரவிடுமுறை நாட்களில் உங்களை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு சென்று அங்கு 5 பேருக்கு படிக்க எழுத உதவலாம். உங்கள் வீட்டை சுற்றியும் பள்ளியை சுற்றியும் ஐந்து மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்கலாம். எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

2.பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் கண்டிப்புடன் கடைபிடிப்பதில்லை. ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக நடந்து கொள்ள உங்கள் ஆலோசனையைக் கூறுங்களேன்?
பசுவலிங்கப்பா, கோகுலம் காலனி, கோவை-41

டாக்டர் அப்துல் கலாம் : புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். நல்ல உடல்நலம் நல்ல மனநலம் ஆகியனதான் நல்ல வாழ்க்கைக்கான, நல்ல குடும்பத்துக்கான, நல்ல நாட்டுக்கான அடித்தளம். முடிவு எடுக்க வேண்டியது தனிநபர்கள்தான். ஆனால் அது அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நாட்டுக்கும் நல்லதாக இருக்க வேண்டும்.

3.இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் தகவல் தொழில்நுட்பம் என்ன பங்கு வகிக்கும்?
வி.கண்ணன், வி.எச்.என்.எஸ்.என்., கல்லூரி, விருதுநகர்.

டாக்டர் அப்துல் கலாம் : 
சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க முடியும். குறிப்பாக கிராமப்புற வளர்ச்சியிலும் அதிக பங்கு வகிக்க முடியும். தொலை தொடர்பு கல்வி, மின்னணு நிர்வாகம், தொலை மருத்துவம், மின்னணு நுõலக வசதி மற்றும் அறிவு மையங்கள் ஆகியவற்றை அமைக்க அவை உதவும். இது அறிவு மற்றும் திறன் அளிக்கும். மக்களிடம் விழிப்புணர்வு, கல்வி, சுகாதாரம் மற்றும் மின்னணு நிர்வாக சேவையை மக்களுக்கு அளித்து அவர்களை சக்தி மிக்கவர்களாக்கி தரமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது. பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயம், சேவை மற்றும் உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. தொழில் சிறப்பாக நடத்துவதற்கான களம்தான் தகவல் தொழில்நுட்பத்துறை. 

4.இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிறார். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகுமா?
வனிதா, அசோக்நகர், சென்னை, திவ்யா, ஸ்ரீ அகோபில மட ஓரியண்டல் பள்ளி, சென்னை. முகில் வண்ணன், காருண்யா பல்கலை. கோவை. மோகன் சிவானந்தம், புதுச்சேரி பல்கலை. சண்முக சுந்தரம், திருவள்ளுவர் நகர், ராஜபாளையம்.

டாக்டர் அப்துல் கலாம் : கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கும் 22 கோடி மக்களை கைதுவக்கி விடவும் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே நம் நாட்டின் முன் உள்ள சவால். அடுத்த பத்தாண்டுகளுக்கு நம் கடின உழைப்பால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 10 சதவீதமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கல்வி, சுகாதார சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் மதிப்பு கூடுதல் சேவை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இப்போதுள்ள தனிநபர் சராசரி வருமானத்தை மும்மடங்காக உயர்த்த வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான தொடக்கக் கல்வி அளிக்க வேண்டும். பல்கலைக்கழக அளவில் ஆராய்ச்சியை உள்ளடக்கிய உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அடுத்த 12 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தலைவர்கள் செயல்பட வேண்டும்.
இதுபோன்று உழைத்தால் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகும். அதுவரை நம்வீட்டையும், தெருவையும், கிராமத்தையும், நகர்ப்புறத்தையும், மாநிலத்தையும் மற்றும் தேசத்தையும் நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்துதான் சுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும்.

5.வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேற்றுவது எப்படி... இலக்குகளை அடைவதில் சில நேரங்களில் தடைகள் ஏற்படுகின்றன. இவற்றை கடந்து சாதிப்பது எப்படி?
செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. பிரீத்தா, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மதுரை. புருஷோத்தமன், பாங்காக், தாய்லாந்து
ஐஸ்வர்யா, டி.ஏ.வி. பள்ளி, சென்னை.சுப்பையா, லீடர்ஸ் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி. ஐஸ்வர்யா, ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி, சென்னை. சுரேஷ்கிருஷ்ணா, ஐ.சி.எஸ்.ஐ. இன்ஸ்டிடியூட், சிவகாசி.

டாக்டர் அப்துல் கலாம் : கீழ்கண்ட நான்கு விஷயங்களை நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
1. உங்கள் வாழ்க்கையின் தெளிவான லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
2. அது தொடர்பான உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.அதை அடைவதற்காக மிகக் கடினமாக உழையுங்கள்.
4. விடாமுயற்சி அவசியம். பிரச்னை உங்களை தோற்கடிக்கக்கூடாது. நீங்கள்தான் பிரச்னைகளை வெல்ல வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் லட்சியத்தை அடைவதிலிருந்து யாரும் தடுக்க முடியாது. நீங்கள் கண்டிப்பாக லட்சிய சிகரத்தை தொடுவீர்கள். எந்த பணியானாலும் அதை மிகச்சிறப்பாக செய்து முடியுங்கள். அதன் மூலம் நீங்கள் தேச வளர்ச்சிக்கு பாடுபடுகிறீர்கள்.

6.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்தில் பயன்படும்?
சவும்யா, கேந்திரிய வித்யாலயா, அசோக்நகர், சென்னை. பாலாஜி கவுலா, மதுரை காமராஜ் பல்கலை., மதுரை. மன்னர் மன்னன், அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால். காசிநாதன், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுவரி, சிவகாசி.நெல்சன், பயனியர் கலை அறிவியல் கல்லுவரி, கோவை.ராம்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி

டாக்டர் அப்துல் கலாம் : யுரேனியம் அணு உலைகள் மூலமாக நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியமானது. தற்போது யுரேனிய அணு உலைகள் 55 சதவீத திறனையே வெளிப்படுத்துகின்றன.

உயர்திறன் கொண்ட அணு உலைகளுக்குத் தேவையான தோரியம் எரிபொருளுக்கு வெளிநாடுகளை சாராமல் நம் ஆராய்ச்சியின் வழியாக சொந்தக் காலில் நிற்கும் நிலை வரும் வரையில் யுரேனியம் நமக்குத் தேவைப்படும்.

2030ம் ஆண்டுக்குள் எரிசக்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே நம் லட்சியம். பூமியிலிருந்து எடுக்கப்படும் மரபுசார்ந்த எரிபொருள் குறைந்துவருவதால், சூரிய சக்தி, அணுசக்தி மற்றும் உயிரி எரிபொருள் வழியாகவும் காற்றாலை, ஹைட்ரஜன் சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல பிற சக்தி மூலமாகவும் நாம் இந்த லட்சியத்தை அடைய வேண்டும். எனவே அணு எரிபொருள் எங்கு கிடைத்தாலும் அதை வாங்குவதுதான் புத்திசாலித்தனமானது.

இதே கேள்வியை இளைஞர்களும் பொதுமக்களும் என்னிடம் இமெயில் வழியாக கேட்டு வருகிறார்கள். அந்த கேள்விகளுக்கு பலமுறை நான் மீடியா வாயிலாக பதில் அளித்திருக்கிறேன். இருந்த போதிலும் இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காணும் விதமாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நான் அளித்துள்ள விரிவான விளக்கம் பில்லியன் பீட்ஸ் இபேப்பரின் அடுத்த இதழில் வெளியாகிறது. www.abdulkalam.com இணையதளம் வழியாக இந்த இதழை நீங்கள் படித்து எளிதாக புரிந்து கொள்ளலாம்.

7. மனிதன் கால் வைத்ததற்கும் இப்போது அனுப்பியுள்ள சந்திரயானுக்கும் என்ன வேறுபாடு?
ஜோ பெர்னாண்டோ, கேந்திரிய வித்யாலயா, மண்டபம்.ரேஷ்மா, ஸ்ரீஅரவிந்த மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை.மணிகண்டன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக், வேலூர்.சுகன்யா, கே.சி.இ.டி., விருதுநகர்.சிதம்பரம், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம்.விக்கி, எஸ்.டி.ஏ., மெட்ரிக் பள்ளி, திருச்சி

டாக்டர் அப்துல் கலாம் : சந்திரயான் 100 கி.மீ., கொண்ட சுற்றுப்பாதையிலிருந்து சந்திரனை சுற்றி வருகிறது. மிகக்குறைந்த செலவில் சந்திரனுக்கு செல்ல முடியும் என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது. சந்திரனின் தொலையுணர்வு செயற்கைக்கோளாக சந்திராயன் செயல்படும். சந்திரனின் தரைப்பகுதியை ஆராய்ந்து, ரசாயன மற்றும் தனிமங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கான தகவல்களை அனுப்புவதே சந்திரயானின் நோக்கம். மனிதர்கள் யாரும் சந்திரயான் திட்டத்தில் செல்லவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் நிலவிலும் ஓர் இந்தியரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.

8.தலைவர் ஆவதற்கு தேவைப்படும் தகுதிகள் என்ன? தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி?
வசந்த் தங்கவேல், ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை

டாக்டர் அப்துல் கலாம் :தொலைநோக்கு பார்வை, நடுநிலை நோக்கு, நம்மால் முடியும் என்ற எண்ணம், வெல்ல முடியாததை வெல்லும் எண்ணம் ஆகியனவே தற்போது வளர்ந்து வரும் பொருளாதார யுகத்தில் தலைமைப்பண்புக்கு தேவைப்படக்கூடியன. ஆய்வு மனப்பான்மை, கற்பனை வளம், தொழில்நுட்ப அறிவு, தொழில்முனையும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9.லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
கார்த்திக், அரசு கலைக் கல்லூரி, திருநெல்வேலி. குழந்தை வேல், அண்ணாமலை பல்கலை., சிதம்பரம். முகுந்தன், பிஷப் அம்புரோஸ் கல்லூரி, கோவை

டாக்டர் அப்துல்கலாம் : குடும்பத்தில்தான் அறிவார்ந்த குடிமக்கள் உருவாகின்றனர். இந்த சூழ்நிலை உருவாகவில்லை என்றால் இப்போது நாம் சந்திக்கும் கடினமான சூழ்நிலையைத்தான் உணர முடியும். லஞ்சத்தை ஒழிப்பதற்கான நாடு தழுவிய இயக்கம் தேவைப்படுகிறது. குடும்பத்திலும் பள்ளிகளிலும்தான் தோன்ற வேண்டும்.

மூன்று பேரால் மட்டும்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்தான் அவர்கள். குழந்தைப் பருவத்திலேயே நேர்மையை அவர்கள் கற்பித்தால் அது வாழ்நாள் முழுக்கத் தொடரும். பொது வாழ்வில் ஊழலை தடுக்க ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இயக்கம் துவங்க வேண்டும்.

குடும்பத்தில், கல்வி பயிலும் இடத்தில், பணியிடத்தில், தொழிலில், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலையில், நிர்வாகத்தில், அரசியலில், அரசில், நீதித்துறையில் நேர்மை இருக்க வேண்டும்.

10.விண்வெளி வீரர் ஆவதற்கு நான் எந்த பிரிவு பாடத்தை படிக்க வேண்டும்?
கோகுல், சாந்தோம் மேல்நிலை பள்ளி, சென்னை. சண்முகராஜ், சின்மயா வித்யாலயா மேல்நிலை பள்ளி, சென்னை. தமிழ் அரசி, இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மேல்நிலை பள்ளி, புதுச்சேரி. திருநாவுக்கரசு, பூர்ணம்விஸ்வநாத், ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரி, மேல்மருவத்தூர். காமாட்சி, ஸ்ரீலதாங்கி வித்யா மந்திர், கோவை

டாக்டர் அப்துல் கலாம் : வான் இயற்பியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டுள்ள முதுநிலை படிப்பை படிப்பது, விண்வெளி வீரர் ஆவதற்கான தகுதிகளைப் பெற்றுத்தரும்.

11.விமானவியல் படித்து விஞ்ஞானி ஆக ஆசை. இத்துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
முகமதுஅப்துல் ரஹ்மான், சாம்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. கோகுல் அமிர்தா வித்யாலயம், கோவை. கவுசிக் சுந்தரராஜன், அகோபிலமட ஓரியன்டல் மேல்நிலை பள்ளி, சென்னை. ராஜேஸ்வர், ஆஸ்ரம் ஐ.சி.எஸ்.இ., டி.ஏ.எஸ்.எஸ்.சி., பள்ளி, சென்னை. தானியா, சி.இ.ஓ.ஏ., மாஸ்டர்ஸ் ஸ்கூல், மதுரை. குமரகுரு, பாரதி மெட்ரிக் பள்ளி, கோவை. வினோத், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை

டாக்டர் அப்துல் கலாம் : பிளஸ் 2வில் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் படித்த பின், பி.இ., படிப்பில் விமானவியல் துறையை படிக்கலாம். விமானத்துறை மற்றும் விண்வெளித் துறையில் இத்துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவிலேயே சொந்த போர் விமானங்கள் தயாரிக்கிறோம். 50 -90 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்கள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பும் நடந்து கொண்டுள்ளன. விண்வெளியில் நாம் அடுத்ததாக செவ்வாய் கிரகத்துக்கு செல்ல விருக்கிறோம். எனவே இத்துறையில் சிறந்த விஞ்ஞானியாக ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

12.தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். தேர்வு பயத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
திலீபன், ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர். சுகன்யா, பாஸ்கோ அகடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சென்னை. ஆஷா, முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டையூர்.ஜகதீஸ், ஸ்ரீவேணுகோபால் வித்யாலயா, சென்னை.சந்தோஷ்குமார், லட்சுமி நகர், போரூர்.

டாக்டர் அப்துல் கலாம் : உங்கள் படிப்புடன் விளையாட்டு, இசை, கலை மற்றும் கலாச்சார விஷயங்களில் பங்கு கொள்ளுங்கள். படிப்பதற்காக நன்றாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். படிக்கும்போது உங்கள் சிந்தனைகளை படிப்பில் மட்டுமே முழுமையாக செலுத்துங்கள். நீங்கள் இதை தொடர்ந்து செய்யும் போது உங்களுக்கு போதுமான அறிவு வளரும். அப்போது தேர்வு பயம் வராது. நீங்கள் மிகச்சிறப்பாக மதிப்பெண் எடுப்பீர்கள்.

13..என்னைப் போன்ற மாணவர்கள் எதிர்காலம் சிறக்க தங்களுடைய வழிகாட்டுதல்கள் என்ன?
பிரியங்கா, கக்கன் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை-45. மனோஜ், ஆதர்ஷ் வித்யாலயா, அந்தியூர், ஈரோடு.

டாக்டர் அப்துல் கலாம் : உங்களுடைய லட்சியத்தை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து வெற்றி அடையுங்கள். நேர்மையான சிந்தனையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்காலம் சிறக்கும்.

14.கடலிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்யுமா?
சித்ரா சத்தியமூர்த்தி, அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, திருவேற்காடு.

டாக்டர் அப்துல் கலாம் : இந்தியாவின் கடற்கரை நீளம் 7,500 கி.மீ., அலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யக்கூடிய சிறிய மின் உற்பத்தி ஆலைகளை நிறுவிக்கொள்ள வாய்ப்புள்ளது. குஜராத்திலும், கேரளாவிலும் இரு வகையான முன்மாதிரி திட்டங்கள் தற்போது செயல்படுகின்றன.

இந்தியாவின் எரிசக்தி உற்பத்தியில் அணு, நீர் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. 2020ம் ஆண்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் இந்தியாவுக்கு தேவைப்படும். இது தற்போதுள்ள தேவையை விட மும்மடங்காக இருக்கும். தோரியம் அடிப்படையிலான அணு உலைகள், சூரிய மின்சக்தியை பரவலாக பயன்படுத்துதல், கடல் அலை மின்சாரம் உள்ளிட்டவற்றிலிருந்து நாம் மின்சக்தி பெற வேண்டும்.


15.சிறந்த விஞ்ஞானி ஆக என்ன செய்ய வேண்டும்?
விகாஸ், கார்மல்ஸ் பள்ளி, திருச்சி. ரோகிணி, சாய் மெட்ரிக் மேனிலை பள்ளி, மடிப்பாக்கம், சென்னை. சரண்யா தேவி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் கல்லூரி, மதுரை. வெங்கடராமன், அரசு கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரி. பாலசுப்ரமணியன், டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி, சென்னை. முகமது பர்ஹான், எஸ்.எம்.பி., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல். ராமசுப்ரமணியன், காமராஜ் மேனிலைப்பள்ளி, குரும்பூர், துõத்துக்குடி. அன்பு செல்வம், எம்.ஏ.வி.எம்.எம்., இன்ஜினியரிங் கல்லூரி, கிடாரிபட்டி, மதுரை. விக்னேஷ், என்.எஸ்.என்., மெட்ரிக் மேனிலைப்பள்ளி, சிட்லபாக்கம், சென்னை. விஜய் கார்த்திக், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, மதுரை. சுதா, டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி, சீனிவாசா நகர், சென்னை. கீர்த்தனா, ஏ.வி.மெய்யப்பன் மெட்ரிக் பள்ளி, சென்னை. ராகவி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, திருமுல்லைவாயல், சென்னை.பாஸில் கான், என்.எஸ்.என்.மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை

டாக்டர் அப்துல் கலாம் : உங்கள் வாழ்க்கையில் முதலில் லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இது விஞ்ஞானி ஆக வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே லட்சியம் வேண்டும். நீங்கள் என்னவாக உருவாகப் போகிறீர்கள் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அது தொடர்பாக உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கடினமாக அதை நோக்கி உழையுங்கள். விடா முயற்சியுடன் இவற்றை எல்லாம் செய்து வந்தால் நீங்கள் யார் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையாலாம்.


 16.வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை நாம் எப்படி கட்டுப்படுத்துவது?செல்வசிவாகணேஷ், செங்கல்வராயா பாலிடெக்னிக், சென்னை. சன்சித், பிளேட்டோ அகடமி மெட்ரிக் பள்ளி, திருப்பூர். ராஜயோகன், மகாராஜா பிருத்வி இன்ஜினியரிங் கல்லூரி, அவினாசி. கிரீஷ், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா பாலிடெக்னிக், கோவை. அனீஷ், திருநகர், வில்லிவாக்கம், சென்னை. விக்னேஷ், லட்சுமி மில்ஸ் பள்ளி, தூத்துக்குடி. விஷ்ணு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் :
 சமுதாய கட்டமைப்பின் நிலையற்ற தன்மையால்தான் பயங்கரவாதம் உருவாகிறது. பல்வேறு நாடுகளில் இப்பயங்கரவாதம் உள்ளது. இளைஞர்களுக்கு நாம் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கும் போது அதை தடுக்கலாம். நிதி வசதியில் உள்ள சமச்சீரற்ற தன்மையை நாம் மாற்றும் போது, சமூகத்தில் உள்ள பல்வேறு வகையான பாகுபாடுகள் களையப்பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்கலாம். மதம் என்பது ஆன்மிகமாக மாற்றம் அடைய வேண்டும். பசி பட்டினியை ஒழித்து வளர்ந்த நாடாக நாம் மாற வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அமைதி தவழும் நாடாக இந்தியா மாறும்.
17. 2020ம் ஆண்டில் இந்தியா அறிவு சார் சூப்பர்பவர் ஆகுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மணிகண்டன், வீனஸ் கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர். நாகேந்திர குமார், வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. ஈஸ்வரன், ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம். சந்தோஷ், மேரி மாதா மெட்ரிக் பள்ளி, மதுரை. ஜனனி, ஸ்ரீதாராசந்த் ஜெயின் வித்யாலயா, சென்னை. சத்யராஜ், கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம். மோனிஷ்குரு, செயின்ட் மேரி மெட்ரிக் பள்ளி, கோவை. மணிகண்டன், பி.கே.என்., கல்லூரி, திருமங்கலம். சுரேஷ்குமார், தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை/பிரவீன், சர் எம்.சி.டி.எம், டிரஸ்ட் பள்ளி, கீழ்ப்பாக்கம். மாது, ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. குருபரன், ஸ்ரீஆனந்த் ஜோதி வித்யாயலயா, சென்னை. கார்த்திகேயன், வேல்டெக், ஆவடி, சென்னை
டாகடர் அப்துல்கலாம் : நாம் கல்வியில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம் சமுதாயத்துக்கு தரமான கல்வியை அளித்தாலே அறிவுசார் சமுதாயம் உருவாகும். இளைஞர்கள் அனைவரும் கல்லாமையை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கிராமப்புறங்களில் சிறு சிறு தொழில்கள் துவங்க உதவி செய்து அங்குள்ள இளைஞர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்க வேண்டும். இதுவே இந்தியாவை 2020ம் ஆண்டில் அறிவுசார் சூப்பர்பவர் ஆக்க உதவும்.

18.உலகம் வெப்பமடைந்து வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
வெங்கட் சுப்ரமணியன், லட்சுமி மெட்ரிக்பள்ளி, கருப்பாயூரணி, மதுரை. பிரசன்ன குமார், டி.எம்.எச்.என்.யு., பள்ளி தேனி.சுகன்யா ராஜமன்னார், நடராஜன் நகர், தஞ்சாவூர்

டாகடர் அப்துல்கலாம் : உலகம் வெப்பமடைதல் என்பது கட்டுக்கதை என்று இனி சொல்ல முடியாது. அது உண்மையாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பூமி தற்போது 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துவிட்டது.
உறைபனி மற்றும் பனிக்கட்டிகள் இந்த வெப்ப உயர்வில் மாற்றங்கள் அடையும். பனிக்கட்டிகள் இந்த வெப்பநிலை மாற்றத்தால் உருக தொடங்கியுள்ளன. மலைகளில் உள்ள பனி உருகுவதால் அவை கடல் மட்டத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் துருவப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் கடல்மட்டத்தை உயர்த்தும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகள், நம் வாழ்க்கை முறையில் கடைபிடிக்கப்படும் எளிய முறைகள் ஆகியவற்றால் உலகம் வெப்பமடைதலை தடுக்கலாம்
19..உள்நாட்டிலேயே உருவான நீங்கள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது ஏன்?
சந்திரன், யாதவா கல்லூரி, மதுரை
டாகடர் அப்துல்கலாம் : உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஆனால் 0.8 சதவீத எண்ணெய் மற்றும் காஸ் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. 2030ம் ஆண்டில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் எரிசக்தி தேவைப்படும். தற்போது ஒரு லட்சத்து 44 ஆயிரம் மெகாவாட் எரிசக்தி மட்டுமே கிடைக்கிறது. இந்த தேவையை நிறைவேற்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி (சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி) அணு சக்தி மற்றும் உயிரி எரிசக்தியிலிருந்துதான் பெற வேண்டும்.
அணுசக்தி உற்பத்தி தற்போது 3,900 மெகாவாட் ஆக உள்ளது. 2012ம் ஆண்டில் 9 புதிய அணு உலைகளின் உதவியால் 7,160 மெகாவாட்டாக உற்பத்தியை உயர்த்த வேண்டும். 2030ம் ஆண்டில் 50 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த தேவையான பணிகள் தற்போது அணுசக்தி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் தோரியம் அடிப்படையிலான அணு உலைகளில் உற்பத்தி சிக்கல் ஏற்படும் போது, தேவைப்படும் யுரேனியம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள யுரேனியம் இறக்குமதி அவசியம். 2030க்குப் பிறகு நமக்கு அந்த தேவை இருக்காது.
20.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவுகள் என்ன?
ஹரிப்பிரியா, ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை
டாகடர் அப்துல்கலாம் : நம்மிடம் 61 ஆயிரம் டன் யுரேனியம் மட்டுமே உள்ளது. இது 10 ஆயிரம் மெகாவாட் மின் சக்தி உற்பத்திக்கு மட்டுமே பயன்படும். எனவே நமது அணு உலைகளை 50-55 சதவீதமே பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளோம். எல்லாவகையில் உள்ள எரிசக்தியை பயன்படுத்தினாலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியா எரிசக்திக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் நாம் எரிசக்திக்கு பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தடை இல்லை. ஆகவே எரிசக்தி தேவையை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும்.
21.அணு சக்தி ஒப்பந்தம் நமக்கு நல்லதா... கெட்டதா?
ரம்யா கேசவ குமார், தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, பெரம்பலூர். செந்தில், நாகசாமி மெமோரியல் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை
டாகடர் அப்துல்கலாம் : அமெரிக்காவும் இந்தியாவும் தனது தேசிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வதற்கே இந்த உடன்படிக்கை. அமெரிக்க விதிமுறைகளை மீறி அங்குள்ள நிறுவனங்கள் நடந்து கொள்ளாது
22. தற்போதுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு என்ன?
வி.ஹரிஷ், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் மெட்ரிக் பள்ளி, மதுரை. கார்த்திகாயினி, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சென்னை
டாகடர் அப்துல்கலாம் : பணவீக்கத்தை கட்டுப்படுத்த தற்போது அரசு முயற்சி செய்து வருகிறது. கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கிராமப்புற வளர்ச்சி திட்டமும் உள்ளது. ‘ஒரு கிராமம் - ஒரு பொருள்’ என்னும் திட்டப்படி, ஒரு கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யுமளவுக்கு தரமாக இருக்கும்படி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர்ந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் உயரும்.
23.கல்வியின் நோக்கம் என்ன, அறிவை வளர்ப்பது எப்படி?
மாதேஸ்வரன், ஒச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி. அழகு முருகேசன், எஸ்.பி.எம்., பள்ளி,விழுப்புரம். கோகுலகிருஷ்ணா, ஸ்ரீஅரவிந்த வித்யாலயா, நெய்வேலி
டாகடர் அப்துல்கலாம் : கல்வியின் நோக்கம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே. அறிவார்ந்த சமுதாயத்துக்கு மூன்று அடிப்படை குணாதிசயங்கள் உள்ளன. மதிப்பீடு அடிப்படையிலான கல்வி, ஆன்மிக நெறிகளாக மாறக்கூடிய மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி. பள்ளியில் கற்பிக்கப்படுவது அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான பணி. இது தேசிய வளர்ச்சிக்கு உதவும்.
24.நல்ல ஆசிரியராவதற்கான குணாதிசயங்கள் என்ன?
ஆனந்த், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, சாத்தான்குளம். ராஜேஸ் குமார், அமெரிக்கன் கல்லூரி, மதுரை
டாகடர் அப்துல்கலாம் : ஆசிரியர் பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும். கற்பிப்பதில் விரும்புபவராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
நாகரிக சமுதாயத்தையும் நல்ல மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மாணவர்களை சுயமாக கற்றுக்கொள்பவர்களாக உருவாக்க வேண்டும்.
25.கிராமப்புறங்களை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?
சீனிவாசன், அன்னை தெரசா முதுநிலை மற்றும் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.. மிதுன்சிங், காமராஜர் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர்
டாகடர் அப்துல்கலாம் : கிராமப்புறங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் புரா (PURA). இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமப்புறங்களிலேயே நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வசதிகளை செய்து கொடுக்க நான்கு விதமான இணைப்புகள் அவசியம். முதல் இணைப்பு சாலை போக்குவரத்து. இரண்டாவது தகவல் தொடர்பு இணைப்பு. மூன்றாவது அறிவுசார்ந்த இணைப்பு. இந்த மூன்றையும் சேர்த்தால்தான் நான்காவதாக பொருளாதார இணைப்பு உருவாகும்.

அருகில் உள்ள கிராமங்களை இணைத்து புரா குழுமம் அமைய வேண்டும். பிறகு புரா திட்டத்தின் முதல் இணைப்பாக அக்கிராமங்களுக்கு சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள், எலக்ட்ரானிக் தொடர்புகள், மின்னணு தொலைபேசி வசதிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். அப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு சுற்றிலும் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். புரா அமைந்துள்ள கிராமங்களைச் சுற்றி கல்வி அறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இதன் வழியாக சிறுதொழில்கள் பெருகி குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
26.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கூறுங்களேன்?
செந்தில் பாலாஜி, சி.பி.டி., கல்லூரி, தரமணி, சென்னை.
டாகடர் அப்துல்கலாம் : தற்போது அணுசக்தி மூலம் நாம் பெறும் மின்சாரம் 3 சதவீதம் மட்டுமே. 2030ம் ஆண்டு வாக்கில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அப்போதுதான் நம்முடைய பொருளாதார வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அணு உலைகளிலிருந்து பெற்றாக வேண்டும். அப்போதுதான் நிலக்கரியை சார்ந்து மின் உற்பத்தி செய்வதை நாம் தவிர்க்க முடியும். தற்போது 55 சதவீத மின் உற்பத்தி நிலக்கரி மூலம் நடைபெறுகிறது. இதை 2030ம் ஆண்டில் 33 சதவீதமாக குறைக்க வேண்டும்.
27.வெற்றியின் ரகசியம் என்ன?
விமல்ராஜ், பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரி, கோவை. ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை. ஐஸ்வர்யா, டி.ஏ.வி., பள்ளி,வில்லிவாக்கம்.புஷ்பம், ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி,திருநின்றவூர்
டாகடர் அப்துல்கலாம் : எனது வெற்றியின் ரகசியம் எனது பெற்றோர்கள்தான். நான் எப்போதுமே என்னுடைய ஆசிரியர்களை நினைக்கிறேன். அவர்கள்தான் என்னுடைய வாழ்க்கைக்கான லட்சியத்தை அளித்தனர். நீங்கள் கடினமாக உழைக்கும் போது, சில பிரச்னைகள் உங்களை தேடி வரும். பிரச்னைகளை வரவிடாமல் தடுத்து வெற்றி அடையுங்கள். அப்போது நீங்கள் தோல்வியை துவள செய்து
வெற்றியாளராக உருவாவீர்கள்
28.பூமியைத் தவிர வேறு எங்காவது உயிர்கள் இருக்கின்றனவா?
சிவக்குமார், ஸ்ரீசாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
டாகடர் அப்துல்கலாம் : உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் பிற கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து வருகிறார்கள். நமது சூரிய குடும்பத்தில் பூமியில் எப்படி உயிர்கள் தோன்றியதோ, அதேபோல் வேறு எங்கும் உயிர்கள் உருவாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன. சூரியனைப் போல் கோடானு கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.
29.பெர்முடா முக்கோணத்தின் அதிசயம் என்ன?
குருமூர்த்தி, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சாத்தூர். நந்தினி, ஜவஹர் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி. நித்தியேஸ்வர், விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவை.. சதீஷ்குமார், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை. ராஜா, வி.கே. மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்
டாகடர் அப்துல்கலாம் : அமெரிக்காவின் தென்கிழக்கு அட்லான்டிக் கடற்கரையை ஒட்டிய பகுதி பெர்முடா முக்கோணம் அல்லது சாத்தான்களின் முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. அதற்கான காரணங்கள் வெவ்வேறாக கூறப்படுகின்றன. இந்த இடத்தில் விபத்துகள் நடப்பதற்கு மனிதத் தவறுகள்தான் காரணம். உலகின் இரு இடங்களில் காந்த துருவம் வடக்கு நோக்கி காட்டாது. அதில் ஓர் இடம் இந்த பகுதி. இது கப்பல் மற்றும் விமானிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
30.இளைஞர்கள், மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? கோபிநாத், சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். தீப்தி, டாக்டர் ஜி.ஆர்.டி அறிவியல் கல்லூரி, கோவை. ராம்குமார், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். ஆர். ஹரிஹரன், முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை, ராமநாதபுரம். பி.கே. சுவாமிநாதன், சாஸ்தா பல்கலைக்கழகம், சென்னை. ராணி, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை. கீர்த்தி குமார், சி.எஸ்.ஐ., பள்ளி, கோவை. சிவஹரிநாதன், ஜேசிஸ் பள்ளி, சிவகாசி. ரமேஷ் சண்முகம், நேஷனல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர். மகேஸ்வரம், தியாகராஜர் கல்லூரி, மதுரை
டாகடர் அப்துல்கலாம் : அரசியல் இளைஞர்களை வரவேற்கிறது. அரசியலில் ஈடுபட நினைப்போர், காந்தியடிகளுக்கு அவரது தாயார் சொன்ன அறிவுரையை நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் சொன்னது, “மகனே உனது வாழ்வில் துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் மாற்றத்தை உருவாக்கி அவரை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றால், நீ மனிதனாக பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்து அடையும், என்றார். மாணவர்கள் முதலில் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் உங்கள் திறனுக்கேற்ப நீங்கள் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யலாம்.

31.இந்தியாவில் மூளைவறட்சி ஏன்?
ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை.
முஸ்தபா,ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி, வேப்பூர், கடலூர்

டாகடர் அப்துல்கலாம் : 
இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் ஏராளமான துறை நிபுணர்களை இந்தியா உருவாக்கி வருகிறது. இவர்களில் சிலர்வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதைப் பற்றி நாம் கவலை அடைய வேண்டாம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு வைத்துள்ளனர். சொந்த நாட்டில் பணிபுரிவதா அல்லது வெளிநாட்டுக்கு செல்வதா என்பது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்ததுதான். தேசத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை உள் உணர்வில்தான் ஏற்படுவது.

32.நிலவுக்கு மனிதனை எப்போது இந்தியா அனுப்பும்?
பிரபு, ரயில்வே காலனி மேல்நிலை பள்ளி, ஈரோடு

டாகடர் அப்துல்கலாம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுதொடர்பாக முயற்சி செய்து வருகிறார்கள். சந்திரனில் தற்போது பூமியில் காணப்படும் எரிபொருளை விட 10 மடங்கு அதிக சக்தி கொண்ட எரிபொருளான ஹீலியம்-3 சந்திரனில் காணப்படுகிறது. ஏழ்மையை ஒழிக்க அவற்றை இங்கு கொண்டு வருவது அவசியம். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்தான் இஸ்ரோவின் அடுத்த முக்கிய திட்டம்.

33.கல்லாமையை ஒழிக்க மாணவர்களாகிய எங்கள் கடமை என்ன?
தண்டபாணி, தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், கோவை

டாகடர் அப்துல்கலாம் : மாணவர்களாகிய நீங்கள் கல்லாமையை ஒழிப்பதில் பங்கேற்க முடியும். உங்கள் விடுமுறை காலங்களில் நீங்கள் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று அங்கு 10 பேருக்கு எழுத படிக்க சொல்லிக் கொடுங்கள். இதுபோன்ற முயற்சியை மாணவர்கள் தொடங்கினால் இந்தியாவில் கல்லாமை என்பது இல்லாமல் போய்விடும்.

34.நல்ல அறிவாளிகள் வெளிநாட்டில் வேலை செய்வதையே விரும்புகிறார்களே ஏன்?
ஸ்ரீமணிகண்டன், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை. சண்முகபிரியா, ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சென்னை. அசாருதீன், எஸ்.ஐ.வி., மெட்ரிக் பள்ளி, மேட்டுப்பாளையம்.

டாகடர் அப்துல்கலாம் : இந்தியாவில் மிகச்சிறந்த நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றன. சிலர் வெளிநாட்டுக்கு செல்வதை விரும்புகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்கட்டமைப்புகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டுக்கு மூன்று கோடி பட்டதாரிகளை நாம் உருவாக்குகிறோம். இவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு செல்வதைக் கண்டு நம் நாட்டில் அறிவு வளம் குறைந்துவிட்டது என்று கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் நம் இந்தியாவின் அறிவு வளமும் பெருகுகிறது என்றுதான் நினைக்க வேண்டும்.

35.மேற்கத்திய கலாசாரத்தால் நம் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மாணவர்கள் மாற்றுவது எப்படி?
சந்தீப், சிந்தி மாடல் ஸ்கூல், சென்னை. பிரீத்தி கோமதி, சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி, மதுரை. ராமதாஸ், விப்ரோ டெக்னாலஜிஸ், சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : குடும்பம் மற்றும் சமூகத்தால் கலாசாரம் மாற்றம் ஏற்படுகிறது. பாடத்திட்டத்திலும், கூடுதல் பாடத்திட்டத்திலும் நம் கலாசார நெறிகளை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப்பீடு அடிப்படையிலான கல்வி திட்டம் அவசியம்.

36.ஜீரோ கிராவிட்டி பற்றி கூறுங்களேன்
குமார், எச்.சி.எல்.லிட் ., புதுச்சேரி. ரமேஷ் ராஜா, சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் மையம், சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : விண்வெளி பயணத்தில் ஈடுபடுவோர் ஜீரோ கிராவிட்டி அதாவது புவியீர்ப்பு விசையை உணராத நிலையை அடைவார்கள். விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் போதும் இந்நிலையை அவர்கள் உணர்வார்கள்

.37.இந்திய பொருளாதாரத்தை சர்வதேச நாடுகளைவிட உயர்த்துவதற்கான வழிகள் என்ன?
அருள் முருகன், ஸ்வாதி, ஐ.எப்.இ.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், விழுப்புரம். துர்கா, பிரின்ஸ் மெட்ரிக். பள்ளி, சென்னை. பிரியதர்ஷினி, தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை. செழியன், டி.பி.ஜெயின் கல்லூரி, சென்னை. சுகன்யா, எஸ்.எஸ்.வி.சாலா மேனிலைப் பள்ளி ஆத்திகுளம்.

டாகடர் அப்துல்கலாம் : இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நகர்ப்புற பொருளாதாரம் ஆகிய இரண்டையும் சமப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் பொருளாதார வலிமையை மேம்படுத்த தகவல்தொடர்பு மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நாம் சிறந்து விளங்க வேண்டும். மக்களை மையமாகக் கொண்ட தொழில் கொள்கைகள், புதிய இளம் தலைவர்களை உருவாக்குதல், பயன்பாட்டு அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

38.இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு தீர்வு என்ன?
தீபா, அருணை இன்ஜினியரிங் கல்லூரி, திருவண்ணாமலை. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, நாகமலை.

டாகடர் அப்துல்கலாம் : மாணவர்களுக்கு தொழில் முனையும் திறன் வழங்காததுதான் அவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான தொழில்களை அமைக்க அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களை மையமாக கொண்டு, நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளிக்க வேண்டும்.

39.நமது பாடத்திட்டத்தில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டுமா?
கார்த்திக், சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

டாகடர் அப்துல்கலாம் : நமது பாடத்திட்டத்தில் அறிவியல் கருத்து அளவிலேயே உள்ளது. இது நடைமுறைக்கான செயல்முறை கற்றலிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நம்முடைய சிந்தனைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே இருக்கின்றன. நம்முடைய கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். 5 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

40.நான் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சல்மான், ஹோலிகிராஸ் பள்ளி, சென்னை. ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு.

டாகடர் அப்துல்கலாம் : இது நல்ல கனவு. உங்களுடைய செயல்களில் 100 சதவீத முயற்சி செய்யுங்கள். ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக வாருங்கள். இடையில் சில தோல்விகள் வந்த போதிலும் அது பற்றி வருத்தப்படாதீர்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.

41.ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் விஞ்ஞானி அப்துல்கலாமுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
விஷ்ணு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர். பவித்ரா, கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : இரு பணிகளிலுமே நான் கடின உழைப்பையே அளிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

42.ஏன் செவ்வாய் கிரகம் சிவப்பாக இருக்கிறது?
ஜேம்ஸ் மார்ட்டின், பெடிட் செமினேர் மேனிலைப்பள்ளி, புதுவை.

டாகடர் அப்துல்கலாம் : பெர்ரிக் ஆக்சைடு எனும் இரும்பின் துரு செவ்வாய் கிரகத்துக்கு சிவப்பு நிறம் அளிக்கிறது. செவ்வாயின் மேற்புறத்தில் உள்ள இரும்பும் மற்ற தனிமங்களும் ஆக்சைடுகளாக மாறியுள்ளன. செவ்வாய் துரு நிறைந்த ஒரு கோளாக உள்ளது. சிவப்பு நிறத்தால் போருக்கான ரோமக்கடவுளான மார்ஸ் பெயரே இக்கோளுக்கு இடப்பட்டது.

43.ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியமா? 2020ம் ஆண்டுக்குப் பின்னரும் இது தொடருமா?
பிரபு, பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி, சிவகாசி. பத்மபிரியா, வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. சிவக்குமார், சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி, திருமயம்.

டாகடர் அப்துல்கலாம் : குறிப்பிட்ட சமுதாய மக்கள் வழிவழியாக வாய்ப்பு இழந்துள்ளனர். அவர்களுக்காக அரசியல் அமைப்பில் வகுக்கப்பட்டுள்ள சட்டதிட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை நிறைவேற்றுவது நமது சமுதாய கடமை. 2020ம் ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் பெருகிவிடும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் படிக்க விரும்பும் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் திறமைக்கும் மதிப்பு இருக்கும்.

44.சமுதாய ஒழுக்கம், லஞ்ச ஊழல் ஒழிப்பு, தனிநபர் சுகாதாரம் இவற்றைப் பேண மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அவசியமா?
ஜேசுதாஸ், தேனாம்பேட்டை, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : ஒழுக்கம் மற்றும் நல்ல மதிப்பீடுகளை நல்ல ஆசிரியர்கள் கற்றுத் தந்தாலே மாணவர்களுக்கு நல்ல குணங்கள் வந்துவிடும்.

45.சூரிய ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்கிறோமா?
ஆனந்தவேலு, அரசு இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் :
 சூரிய சக்தி மிகுதியாக இருக்கிறது. கூடுதல் சக்தியை சேமிக்கும் சூரிய கலன்களை நாம் தயாரித்தால் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். நேனோ டெக்னாலஜி இதற்கு பெரும்பங்கு வகிக்கும். கார்பன் நேனோ டியூப் சூரிய கலன்களின் சக்தியை அதிகரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

46.உங்கள் ரோல்மாடல் யார்?
ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி, சாத்தூர்

டாகடர் அப்துல்கலாம் :
 என்னுடைய ரோல் மாடல் பேராசிரியர் சதீஷ் தவான். அவரது தலைமைப்பண்புகள் என்னைக் கவர்ந்தது. முக்கியமான பணிகளை மேற்கொண்டிருக்கும் போது, பிரச்னைகள் வரும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து நாம் வெற்றி பெற வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார்.

47.நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியுமா?

கணேஷ்ராம், பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : ராணுவ படைகள் மற்றும் இடர்பாடு மேலாண்மைத் துறையினர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று, உதவி வருகிறார்கள்.நாம் நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமானால், சேதத்தை குறைக்கலாம். இதற்கான ஆராய்ச்சி துவங்கிவிட்டது. இடர்பாடு நிர்வாகத்துறையினர் சேத அளவை குறைக்கவும், நிவாரணப் பணியில் ஈடுபடவும் செய்கின்றனர். விஞ்ஞானிகளும் முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றனர். இது பேரிழப்புகளை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

48.ஹீலியம் - 3 எந்த அளவுக்கு நமக்குப் பயன்படும்?
அன்புச்செல்வன், டால்பின் மெட்ரிக் பள்ளி, பொன்மேனி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : சந்திரனில் ஹீலியம் -3 பெருமளவில் உள்ளது. எரிபொருளுக்கான மிக நேர்த்தியான மூலப்பொருள் இது. நல்ல ஆற்றல் அதே சமயம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. கதிர்வீச்சு இருக்காது. 21ம் நூற்றாண்டுக்கான எரிபொருள் இது என்று எல்லோரும் வரவேற்கிறார்கள்.

49.எதை வெற்றிகரமான சாதனையாக கருதமுடியும்?
எஸ்.சிவா, தங்கவேலு தொழில்நுட்ப கல்லூரி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : இது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. பிறரால் சாதிக்க முடியாத ஏதேனும் ஒன்றை, சாதித்துக்காட்டி ஜெயித்தால், நீங்களும் சாதனையாளரே.

50.உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உள்ளதா?
எஸ்.மகாலட்சுமி, ஸ்ரீ ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரி, மாமண்டூர்

டாகடர் அப்துல்கலாம் : விடாமுயற்சியுடனான, கடின உழைப்பும், வியர்வையுமே வெற்றியை பெற்றுத்தரும்.

51.இளைய தலைமுறைக்கு உங்களது அறிவுரை? அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ஆர்.ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சாத்தூர்

டாகடர் அப்துல்கலாம் : படிப்பில் சாதியுங்கள். அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் இலக்கை தீர்மானியுங்கள். அந்த இலக்கை நீங்கள் அடைய முயற்சிக்கும் போது, கண்டிப்பாக சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். பிரச்னைகள் உங்களை வீழ்த்திவிடக்கூடாது. நீங்கள் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு வீழ்த்துங்கள். நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்காற்றக் கூடிய அறிவான குடிமக்களாக நீங்கள் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

52.இந்த வயதில் எனக்கு ஏற்படும் மனச்சிதறல்களிலிருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
சிவா, டி.ஐ., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காரப்பாக்கம், சென்னை

டாகடர் அப்துல்கலாம் : மனச்சிதறல்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமே. மாணவப் பருவம் பொறுப்புள்ளது என்பதால் நம் பலம் மற்றும் ஆர்வத்தை அறிந்து கொள்ள வேண்டும். உங்களது லட்சியத்தை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக நீங்கள் தொடர்ந்து போராடுங்கள். இந்த லட்சியத்தை அடையும் போது நீங்கள் கண்டிப்பாக சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து உங்கள் லட்சியத்தில் நீங்கள் வெற்றி பெறுங்கள்.

53.நர்சிங் துறை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மூகாம்பிகை, மங்களசுந்தரி, மதர்தெரசா போஸ்ட் கிராஜுவேட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ், புதுச்சேரி

டாகடர் அப்துல்கலாம் : நர்சிங் மிகச்சிறந்த உன்னதமான பணி. இரவிலும் பகலிலும் வேதனையுறுவோருக்கு தேவையானதை செய்யும் பணி என்பதால் ஆஸ்பத்திரி வார்டுகளில் அவர்கள் தேவதை போல் காட்சியளிப்பார்கள். இந்த பணியில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உலகம் முழுவதும் இப்பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்திய நர்ஸ்கள் எங்கு போய் பணியாற்றினாலும் அவர்களுக்கு நல்ல மரியாதை உண்டு.

54.இந்தியாவில் ஏராளமான தோரியம் தாது உள்ளது.ஆனால் அணு உலைகளுக்கு எரிபொருளுக்கு அடுத்த நாடுகளை நம்பியிருக்கிறோமே?
பிரதீப் குமார், 12ம் வகுப்பு, பி.வி.எம்., பள்ளி, பொள்ளாச்சி

டாகடர் அப்துல்கலாம் : இன்னும் சில ஆண்டுகளில் நமது விஞ்ஞானிகள் இதில் வெற்றி கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.00ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில்

55.இந்தியா எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?
தரண்குமார், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை

டாகடர் அப்துல்கலாம் : ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தற்போது இதற்கான வசதி பெருகி வருகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு போதுமான சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து கூட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் திட்டங்கள் மேற்கொள்ள மாணவர்கள் வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலை மற்ற இன்ஜினியரிங் பிரிவுகளிலும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

56.ஒரு மதத்துக்குள்ளேயே பல பிரிவுகள் உள்ளபோது, நீங்கள் எப்படி பல்வேறு மதங்களை மதிக்கிறீர்கள்?
கமலாதரன், மருதுபாண்டியன் நகர், சிவகங்கை

டாகடர் அப்துல்கலாம் :
 நமது மதங்கள் மிக அழகான தீவுகளைப் போன்றவை. மதம் என்பது ஆன்மிகமாக மறுமலர்ச்சி அடைய வேண்டும். எல்லோரிடமும் ஒருமைப்பாட்டை பார்க்க வேண்டும். மதம், ஜாதி மற்றும் மொழி வேறுபாட்டுக்கு ஆதரவாக செயல்படமாட்டேன் என்று எல்லா மாணவர்களும் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

57.சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சூரியன் என்னவாகும்?
கிரிதர்ராஜ், இ.பி.ஜி., மெட்ரிக். பள்ளி, மூன்றுமாவடி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : சூரியன் இதற்கு முன்பு 460 கோடி ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இயங்கி வந்திருக்கிறது. இன்னும் 50 லட்சம் ஆண்டுகளுக்கு அதிலுள்ள எரிபொருட்கள் தீராது. சூரியனின் கடைசி காலத்தில் அதிலுள்ள ஹீலியம் குறைந்து பிற தனிமங்களால் அது பெரிதாகத் துவங்கும், அவ்வாறு விரிவடையும் போது, அது பூமியையே விழுங்கிவிடும்.

58.உங்களைப் போன்று உயர்ந்த பணிகளை மேற்கொள்ள நானும் விரும்புகிறேன். வழி சொல்லுங்களேன்.
உமர் பரூக், யாதவா கல்லூரி, மதுரை. சத்யா, பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, வத்தலக்குண்டு

டாகடர் அப்துல்கலாம் : இளைஞர்களாகிய உங்களுக்கு வாழ்வில் லட்சியம் வேண்டும். இலக்கை தீர்மானித்த உடன் அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. சலிக்காத மனம், இடைவிடாத கடின உழைப்பு இருந்தால் தடைகளை தாண்டி இறுதியில் வெற்றி பெறலாம்.

59.கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
ஹேமா, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை.

டாகடர் அப்துல்கலாம் : நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன் மற்றும் சர் சி.வி.ராமன் போன்றோர் கூட இந்த அண்ட சராசரத்தை படைத்த கடவுளின் விந்தையை கண்டு பிரமித்தனர். ராமன் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். என்னைப் பொறுத்தவரை நமக்கு இறைவன் மீது நம்பிக்கை இருந்தால், நமது முயற்சியின் முடிவு பல மடங்காகப் பெருகும்.

60.நேனோ டெக்னாலஜியின் எதிர்காலம் என்ன?
ஜெகநாதன், அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர். கவிதா, கலைமகள் கல்லூரி, கோவை. ஷியாம் சுந்தர், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம். முருகேசன், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்

டாகடர் அப்துல்கலாம் : மிக நேர்த்தியான தொழில்நுட்பத்தைக் கொண்டது நேனோ டெக்னாலஜி. மருத்துவத்துறையில் இந்த தொழில்நுட்பம் சாமான்யர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. பயோ இன்பர்மாடிக்ஸ் துறையுடன் இந்த துறை எதிர்காலத்தில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது. அது மருத்துவத் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

61.வளர்ந்த நாடாக இந்தியா உருவாகும் போது விவசாயத்தின் நிலை என்ன?
ராஜபிரபு, பி.எஸ்.என்.ஏ., கல்லூரி, திண்டுக்கல். சதீஷ்ராஜா, குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி, கரூர்

டாகடர் அப்துல்கலாம் : நம் நாட்டில் 70 கோடி மக்கள் இன்னும் கிராமத்தில் வாழ்கிறார்கள். இதற்காக குறைந்தபட்சம் 7 ஆயிரம் கிராமங்களை நகர்ப்புறங்களுக்கு இணையான வசதி கொண்ட தொகுப்புகளாக மாற்ற வேண்டும். இதனால் அக்குறிப்பிட்ட கிராமங்களுடன் அதை சுற்றியுள்ள கிராமங்கள் சாலை வசதிகள், மின்னணு வசதி, தொலைதொடர்பு வசதி கிடைக்கும். அக்கிராமங்களும் முன்னேற்றம் அடையும். தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள வல்லம் கிராமம் 65 கிராமங்களை தன்னுடன் இணைத்து நகர்ப்புறத்துக்கு இணையாக திகழ்கிறது. வளர்ந்த நாடாக மாறும்போது கிராமங்கள் வளர்ந்தால்தான் விவசாயமும் விளைபொருட்களும் உயரும்.

62.இன்றைய வாழ்க்கையில் அறிவியல் இரண்டற கலந்துவிட்டது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
தீபக் ராஜ், குலப்பட்டி பாலகிருஷ்ணா ஜோஷி குருகுலம் பள்ளி, கொளத்தூர்

டாகடர் அப்துல்கலாம் : ‘டிவி, ரேடியோ, தொலைதொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் அறிவியலின் விளைவுகளே. எதிர்காலத்திலும் இவற்றில் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும். பண்ணைகளில் உற்பத்தியை பெருக்குவது, கடலில் குறிப்பிட்ட இடங்களில் மீன்களை அறிவது, வானிலை அறிக்கை ஆகிய அனைத்துமே அறிவியல் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்.

63.இந்தியா முழுவதும் ஆறுகளை எப்போது இணைப்பார்கள்?
ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு

டாகடர் அப்துல்கலாம் : ஆறுகளை இணைப்பது மிகுந்த பலன் தரக்கூடியது. மத்திய பிரதேசத்தில் சிறு ஆறுகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் தலைமுறைக்கு இது முக்கியமான பணி.

64.ஏழ்மையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
தினேஷ், சி.ஐ.டி., பாலிடெக்னிக், கோவை

டாகடர் அப்துல்கலாம் : கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை உருவாக்கித் தரும் புறா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஏழ்மையை ஒழிக்க முடியும். இது கிராமப்புற மக்களின் தொழில் வாய்ப்பையும் தொழில்முனையும் திறனையும் அதிகரித்து அவர்களது வாழ்க்கையை வளம் பெற செய்யும்.

65.இந்திய மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?
கார்த்திக், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி, கோவை

டாகடர் அப்துல்கலாம் : எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும். அந்த வல்லரசான நாட்டில் மாணவர்கள் வாழ வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இந்த சூழலில் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வளர்ச்சியும் ஏற்படும்.

66.எதிர்கால சந்ததியினரிடம் எதிர்பார்ப்பது என்ன?

மதுமிதா, ஸ்ரீசாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை கனவாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். நீங்கள் ஒரு லட்சியத்தை கொண்டு, எதிர்வரும் தடைகளை தகர்த்து, சிறப்படைய வேண்டும். விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்கள் லட்சியங்களை தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பாக கொள்ள வேண்டும். இயலாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்
நன்றி : கல்வி மலர்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment