இந்திய மக்களின் பண்பாட்டை வளர்க்கும் சாதனங்களுள் விழாக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்துக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பல. அவற்றுள் முக்கியமானது நவராத்தி. தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் நவராத்திரி என்றும் , கர்நாடகத்தில் தசரா என்றும், வட மாநிலத்தில் பூஜா விழா என்றும் பெயரிட்டு இவ்விழா கொண்டாடப்படுகின்றது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் ஆங்காங்கே கொண்டாடுவது வழக்கம்.
ஆலயங்கள் தோறும் இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவிகளுக்குச் சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு, விசேட பூசைகள், விழாக்கள் நடைபெறும். இந்நவராத்திரி விழாவையொட்டி ஆலயங்களிலும் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபாடு செய்யப்படும்.
நலன்தரும் நவராத்திரி
கடும் கோடைக்காலமும் மழைக் காலமும் எமனது இரண்டு கோரைப்பற்கள் என ஞான நூல்கள் சொல்கின்றன. இந்த இரண்டு காலங்களிலும் பலவிதமான தொற்று நோய்கள் நம்மைத் தாக்கும் ஆபத்து உண்டு. இது உடலை பாதிக்கும், உடல் கெட்டால் உள்ளமும் பாதிப்பு அடையும்.அனைத்தும் உயிர் வாழ்கின்றன என்ற தத்துவத்தை விளக்கவே இந்நாளில் சக்தி வழிபாடு செய்கிறோம்.
சித்திரை மாதம் வளர் பிறைப் பிரதமை முதல் நவமி வரையுள்ள நாட்களில் கொண்டாடப் படுவது வசந்த கால நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரையுள்ள நாட்களில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி எனப் படுகிறது. இந்த நவராத்திரியைத்தான் நாம் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.
வரலாறு
இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது.சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள்.மக்களை துன்புறுத்திய போது, தங்களைக் காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.
மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்’ என்றாள்.
அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.
அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி, உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்துவிடுகிறான். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. அன்னை ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாள் மகிசாசுரனை வதம் செய்து வெற்றி கொண்டாள். அந் நிகழ்ச்சியைக் கொண்டாடுவதே நவராத்திரி எனப் புராணங்கள் கூறுகின்றன. நவராத்திரி மாதக் காலத்தில் ஏற்படும். மாறுபாடான தட்ப வெப்பநிலை கடுமையான நோய்களை ஏற்படுத்துவதாகவும்., கிரக நிலை சரியில்லாதவர்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாகவும், அக்கொடுமையினின்றும் விடுபட அரசர்கள் பெரிய வேள்வி நடத்தி, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி பூஜை நடத்தி,நவராத்திரி விழா கொண்டாடி மக்களைப் பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த முறையில் தான் இன்றும் தொடர்ந்து இவ்விழாவினைக் கோயில்களிலும் வீடுகளிலும் கொண்டாடுகிறார்கள்.
பத்தாம் நாளான விஜயதசமி அன்று புதிய தொழில்களையும், படிப்பையும் துவக்கினால் வளர்ச்சி ஏற்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நவராத்திரி நாட்களில் பெண்கள் ஆர்வத்துடன் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஒன்பது நாளும் பராசக்தியை விதவிதமாக அலங்கரித்து விரதமிருந்து வழிபாடு செய்வார்கள்.
ஒன்பது நாட்களும் வண்ணக் கோலங்கள் போட வேண்டும்.
இந்த ஒன்பது நாளும் அம்பாள் ஒன்பது வகையான கோலத்துடன் காட்சியளிக்கிறாள் என்பது ஐதிகம். முதல் நாள் : பாலை, 2ம் நாள்: குமாரி, 3ம் நாள் : தருணி, 4ம் நாள் : சுமங்கலி, 5ம் நாள் : சதேக்ஷி, 6ம் நாள்: ஷ்ரீவித்யா ரூபிணி, 7ம் நாள் : மஹா துர்கை, 8ம் நாள் : மஹா லக்ஷ்மி, 9ம் நாள் : சரஸ்வதி, 10ம் நாள் : சிவசக்தி ஐக்யரூபிணி.
என்னை கவர்ந்த கொலு ....
பொதுவாகவே நம் பண்டிகைகள் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து விடும். ஆனால் இந்த கொலு மட்டும் விதிவிலக்கு. மொத்தமாக ஒன்பது நாட்கள் நடைபெறும். இருபது வருடங்களுக்கு முன்பு யார் வீட்டிலாவது கொலு வைத்தால், அந்த வீட்டு வாண்டுகளுக்கு நேரு, காந்தி, டீச்சர் போன்ற வேடமிட்டு அவர்களை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துப் போய் 'எங்க வீட்டுல கொலு வச்சிருக்கோம். எல்லாரும் வந்திருங்க' என்று அந்த குழந்தைகளின் மூலமாக அழைப்பார்கள்.
பெரும்பாலான வீடுகளில் கொலு பார்க்க வரும் உறவினர்கள் ஏதாவது ஒரு கொலு பொம்மையை வாங்கி வந்து பரிசளிப்பார்கள். ஏற்கனவே ஒன்பது படிகளில் கொலு பொம்மைகள் மொத்தமாக இடங்களை ஆக்கிரமித்திருக்கும். அந்த இடங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து உறவினர் கொடுத்த பொம்மையை வைப்பார்கள். இந்த விஷயத்தில் எங்கள் வீடும் விதிவிலக்கல்ல.தாண்டியா நடனம்
கொலு வைத்திருக்கும் வீடுகளில் கண்டிப்பாக சுண்டல் கிடைக்கும். நம்பிப் போகலாம். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சுண்டல்.
பொம்மைக் கொலு வைத்து சிறு குழந்தைகளையும், உறவினர்களையும் அழைத்து மங்கலப் பொருட்களுடன் பொங்கல் ,சுண்டல் அளித்து மகிழ்வார்கள்.
கர்பா ,தாண்டியா நடனம்....
குஜராத்தில் நவராத்திரி, மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் பண்டிக, நவராத்திரிப் பண்டிகைஆகும். புகழ் வாய்ந்த 'கர்பா', 'தாண்டியா', 'ராசலீலை'நடனங்களை இந்தச் சமயத்தில் அதிகமாய்ப் பார்க்கலாம்.
கர்பா நடனத்தில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்கிறார்கள். பாரம்பரியமிக்க கண்கவர் எம்பிராய்டரி சேலை அணிந்து, காக்ரா, பாந்தினிதுப்பட்டா, விதவிதமான நகைகள், கிணிகிணி என ஒலி எழுப்பும் சதங்கை கட்டிய கோலாட்டக் கழிகளுடன் காட்சி அளிப்பார்கள். தாண்டியாநடனம், பொழுதுபோக்கு நடனம், உல்லாச நடனமும்கூட. கர்பா எனும் ஆரத்தி நடனம் ஆன பிறகுதான் தாண்டியா கோலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தாண்டியா நடனம் வட இந்தியர்களின் பாரம்பரிய நடனம் என்றாலும், அந்த நடன அமைப்பு, உடையலங்காரம், ஆடும் விதம் ஆகியவை தென் இந்தியர்களையும் கவர்ந்து உள்ளது.இரண்டு கைகளிலும் குச்சிகளை வைத்துக்கொண்டு, இசைக்குத் தகுந்தவாறு ஆடுவார்கள். இப்படித்தான் தாண்டியா நடனம் மக்களிடையே பரவ ஆரம்பித்தது. ஆனால், நாளடைவில் கலாசார மாறுதல்களுக்குத் தகுந்தவாறு இந்த நடனம் மக்கள் மகிழ்வான தருணங்களில் ஒன்று கூடும் இடங்களில் இந்த நடனம் பார்வையாளர்களின் கவனத்தை கவருவதற்காகவும், மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நடனம் தற்போது ஆடப்பட்டு வருகிறது.
வளர்ந்தும் பெருகியும் வரும் விஞ்ஞான உலகில் காலப்போக்கில் தற்போது வசந்தகால நவராத்திரியும், சாரதா நவராத்திரியுமே பெரும்பான்மையாகக் கொண்டாடப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தசரா எவ்வாறு கொண்டாட படுகிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போமே !
ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment