Wednesday, 2 May 2012

பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும் பாஸ்போர்ட்...

தமிழ்நாட்டில் பாஸ்போர்டுக்கு அப்ளை செய்யும் தொண்ணுதியொம்பதே சொச்சம் சதவீதத்தினரின் கனவு வெளிநாடு போவது. பதினெட்டு வயதாகிவிட்டாலே கேட்கப்படும் அடுத்தக் கேள்வி “பாஸ்போர்ட் அப்ளை பண்ணிட்டியா?”. பாஸ்போர்ட் வந்துவிட்டாலோ “பயணம் எப்போ போற?” கேள்வி வந்துவிடும். அப்படியான கேள்விகளுக்கு முன்னரே பாஸ்போர்ட் கிடைத்தவனின் கண்களில் விமானப்பயணமும், புது வீடும், தங்கைகள் திருமணமும், அம்மாவுக்கு நாலுவடச் சங்கிலியும், தனக்கு ஒரு கைசெயினும் கனவுகளாய் மின்னும். ஏஜண்டுக்குக் காசு கொடுத்து முட்டி மோதி விசா பேப்பர் கையில் கிடைத்து விமானத்தில் பறக்கும் வரையில் அந்த பாஸ்போர்ட் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும்.

அப்படி பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும் பாஸ்போர்ட் வளைகுடா நாடுகளில் நம்மவர்களின் முதலாளிகளிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவது பெரும் சோகம். வளைகுடா நாடுகளில் ஒரு சில கம்பெனிகளைத் தவிர்த்து அனைவருமே வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே பாஸ்போர்ட்டைப் பிடுங்கிக்கொண்டு வேலைக்கான உரிம அட்டையைக் (work permit) கையில் திணித்துவிடுவார்கள். ப்ரியா படத்தில் தேங்காய் சீனிவாசன் “உங்க எல்லோரோட பாஸ்போர்டும் என் கையிலே” என்று சொல்வது போல சொல்லாத குறை மட்டுமே.

முதலாளியின் கைக்குப் போய்விட்டு மீண்டும் விடுமுறைக்குச் செல்லும்போது கிடைக்கும் பாஸ்போர்ட்டைப் பார்க்கும்போது “இது நம்மளோடதா?” என்று எண்ணும் அளவில் இருக்கும் அதன் கதி. பாஸ்போர்ட்டின் மேலே மஞ்சள், பச்சை, வெள்ளை என நமது கம்பெனிக்குப் பிடித்த நிறத்தில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதில் சில அரபி எழுத்துகளும், எண்களும். முன்னட்டை பின்னட்டைகளில் ஸ்டாப்ளர் பின் அடிக்கப்பட்டு இருக்கும். சில காலம் ஆன பாஸ்போர்டுகளில் அடிக்கடி ஸ்டாப்ளர் அடிக்கப்பட்டும் பிய்க்கப்பட்டும் உள்ளிருக்கும் லேமினேஷன் எதற்காகச் செய்யப்பட்டது என்ற அர்த்ததையே இழந்திருக்கும்.

பாஸ்போர்ட் பற்றி ஒரு நண்பர் சொன்ன விஷயம், எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும், அதற்கான சாத்தியங்கள் வளைகுடா நாடுகளில் மிக அதிகமே. நண்பரின் நண்பர் விடுமுறைக்குச் செல்வதற்காக அவரது கம்பெனின் மனிதவளத்துறைக்குச் சென்றிருக்கிறார். பிற வளைகுடா நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை, சவுதியைப் பொறுத்தவரையில் மனிதவளத்துறையில் மண்ணின் மைந்தர்களே அதிகம். ந.நவுடைய கம்பெனியிலும் அவ்வாறே. விடுமுறைக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட்டைக் கேட்க, மண்ணின் மைந்தர் பல இடங்களில் குடைந்து தேடியும் இவரது பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இந்த நண்பரும் டேபிளின் இந்தப்புறம் இருந்து தவ்வித் தவ்வித் தேட, ம.மை’ன் நாற்காலியின் காலுக்குக் கீழே எதோ கருப்பாகத் தென்பட்டு என்னவென்று பார்க்க, அது அவரது பாஸ்போர்ட். நாற்காலி ஆடுகிறதென்று ஆட்டத்தை நிறுத்த பாஸ்போர்ட்டை சொருகி வைத்த புண்ணியவானை என்ன சொல்வது. விதியை நொந்தபடியே ந.ந பாஸ்போர்ட்டை வாங்கிச் சென்றிருக்கிறார்.

நேற்றிரவு மனைவியும் குழந்தையும் இந்தியா செல்ல, அவர்களை வழியனுப்பிவிட்டு விமானம் புறப்படும் வரையில் காத்திருந்தேன், எனக்குத் துணையாய் என் இரு நண்பர்களும். உலக அதிசயமாய் ரியாத் விமான நிலையம் நேற்றிரவு ஆள் அவரமே இல்லாமல் இருந்தது. நாங்கள் மூவரும் ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு தமிழர் கையில் பெட்டியுடன் ஓரிடத்தில் நின்றுகொண்டு இருந்தார். சென்னை செல்லும் விமானம் கிளம்ப பதினைந்து நிமிடங்களே இருக்கும் நிலையில் இந்த மனுஷன் இங்கே நிற்கிறாரே, ஒரு வேளை கைப்பையின் எடை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வைத்திருந்ததால் உள்ளே விடவில்லையோ, அப்படி இருந்தாலும் கொஞ்சம் தேவையில்லாத பொருள்களை வெளியில் எடுத்துவிட்டு திரும்ப உள்ளே செல்லலாமே, ஏன் இங்கேயே நிற்கிறார் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். 

எங்களைப் பார்த்த அந்த நபர் எங்களிடம் வந்தார். என்னவென்று விசாரித்தபோது

“பாஸ்போர்டு தேதி முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க, உள்ளே விட மாட்டேங்கிறாங்க” என்றார்.

நான் பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தபோது அதிசயம்/அதிர்ச்சியாக இருந்தது. பாஸ்போர்ட் காலாவதியாகி எட்டு மாதங்கள் ஆகி இருந்தது. 

“எக்பைரி ஆகி எட்டு மாசம் ஆச்சே, எப்படி கவனிக்காம விட்டிங்க” என்றேன்.

“ஹவுஸ் ட்ரைவரா இருக்கேன், கஃபீல் (முதலாளி) தான் பாஸ்போர்ட் வச்சிருந்தார். இன்னைக்கு தான் எக்ஸிட் ரீஎண்ட்ரி (சவுதி விட்டு வெளியில் சென்று திரும்ப வருவதற்கான விசா) அடிச்சு பாஸ்போர்ட்டையும் கைல கொடுத்தார்” என்றார்.

“எப்படிங்க ரீஎண்ட்ரி அடிக்க முடியும், முதல்ல உங்க விசாவே எட்டு மாசம் எப்படி செல்லுபடி ஆச்சு.” என்றேன்.

“தெரியலிங்க, அவன் தான் அடிச்சுக் கொடுத்தான்”

“இப்போ கஃபீல் எங்கே” என்றேன்.

“ஃபோன் பண்ணேன். ஏர்போர்ட்ல எதோ சவுதி ஆபீஸருக்கு ஃபோன் பண்றேன், அவன் உள்ளே விடுவான்ன்னு சொன்னாரு” என்றார்.

“அப்படியெல்லாம் உள்ளே விட மாட்டாங்க. அப்படி இவங்க விட்டாலும் நம்மூர்ல புடிச்சு கேள்வி கேப்பாங்க. திரும்ப இங்கே வர்றதே சிரமம் ஆகிடும். நீங்க பேசாம திரும்ப போய்ட்டு நாளைக்கே எம்பஸி போய் பாஸ்போர்ட் ரினிவலுக்கு அப்ளை பண்ணுங்க. ரெண்டு நாள்ல கிடைச்சிடும். அதுக்கு அப்புறம் ஊருக்குப் போங்க” என்றோம்.

“எதுக்கும் கஃபீல் ஃபோன் பண்ணி இங்கே ஆபிஸருக்குப் பேசின பிறகு என்ன செய்யலாம்ன்னு பாக்குறேன்” என்றார்.

நாங்கள் மூவரும் ஒரே இடத்தில் நின்று போரடிக்க, சிறிது அங்கிங்கே சுற்றிவிட்டுத் திரும்பி வந்தோம். கொஞ்ச தூரத்தில் அந்தத் தமிழர் கையில் பெட்டியுடன் ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் சென்றுகொண்டு இருந்தார்.

பாஸ்போர்ட் முடிந்து எட்டு மாதம் ஆகியும் அதை கவனிக்காமல் விட்டது யாருடைய தவறு? இரண்டோ மூன்றோ நான்கோ வருடங்களுக்கு முன் கையசைத்து விடை பெற்ற கணவன் நாளை வருவான் எனக் காத்திருக்கும் அவரது மனைவிக்கும், அப்பா வருவாரு புதுச்சட்டையும் கைகெடிகாரமும் வாங்கிட்டு வருவாரு என்ற கனவுகளில் திளைக்கும் குழந்தைகளுக்கும் யார் பதில் சொல்வது? போர்டிங் பாஸ் வாங்கும்போது உள்ளனுப்பப்பட்ட அவரது லக்கேஜுகள் எப்பொழுது கிடைக்கும்? அடுத்த நாளே அவர் பாஸ்போர்ட் ரினிவலுக்கு அப்ளை செய்ய அவரது சூழ்நிலை இடம் கொடுக்குமா? அப்படியே அப்ளை செய்தாலும் எட்டுமாதம் கடந்த பாஸ்போர்ட்டை இந்தியத் தூதரகம் உடனடியாக புதுப்பித்துக்கொடுக்குமா? எல்லாம் முடிந்து உடனடியாக அவர் விடுமுறைக்குச் செல்ல முடியுமா? 

கேள்விகள் பலவாயினும் விடை ஒன்று தான். தெரியல..
தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment