Wednesday, 23 May 2012

ஹஜ் பயணத்துக்கு மானியம் ரத்தா? ஒரு சிறப்பு பார்வை....

இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், மும்பை ஐகோர்ட்டில் ஹஜ் பயணம் தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, முக்கிய பிரமுகர்களுக்கான ஒதுக்கீட்டில் 11 ஆயிரம் ஹஜ் பயணிகளில் 800 பேரை தனியார் ஹஜ் பயண நிறுவனங்கள் மூலம் அனுப்ப அனுமதி வழங்குமாறு மத்திய வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட்டது. 

மத்திய அரசு அப்பீல்....
இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல் வழக்கு தாக்கல் செய்தது. இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், ரஞ்சனா தேசாய் ஆகியோரைக் கொண்ட பெஞ்சு விசாரித்து வருகிறது.
ஹஜ் பயணத்துக்கு மானியம் வழங்கும் மத்திய அரசின் கொள்கை சட்டப்பூர்வமாக செல்லுபடி ஆகுமா என்பதையும் சேர்த்து ஆராய சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி நடந்த விசாரணையின்போது, ஹஜ் பயண அனுமதி, மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தது. அந்தப் பதில் மனுவில் ஹஜ் பயணத்துக்கு மானியம் வழங்குவதை மத்திய அரசு நியாயப்படுத்தி உள்ளது. ஹஜ் பயணம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்து நிறைவேற்றி வருவதாகவும் கூறி உள்ளது. 

அந்தப் பதில் மனுவில் கூறி இருந்ததாவது:-
அரசு மானியத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் மானியத்தை குறைத்துக்கொள்கிற வகையில், வாழ்வில் ஒரு முறை மட்டுமே அரசு மானியத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வகையில் கட்டுப்பாடு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. 

ஒரு முறை கூட வாழ்வில் ஹஜ் பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும். இந்த மாற்றங்கள் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அரசு மானியத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். 

70 வயதைக் கடந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் ஏற்கனவே 3 முறை விண்ணப்பம் அளித்தும், வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும். 

2012-ம் ஆண்டில் ஹஜ் மானியம் எவ்வளவு என்பது, ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்கிறவர்கள் மானியம் பெற்று ஹஜ் கடமையை நிறைவேற்றி இந்தியா திரும்பி வந்த பிறகுதான் தெரிய வரும். 
இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது, ஹஜ் பயணிகளுடன் அரசு தூதுக்குழுவினர்களை அனுப்பி வைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி வெளியிட்டது. நல்லெண்ண தூதுக்குழுவினரை உடன் அனுப்பி வைப்பதை முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது. 

அரசு சார்பில் தூதுக் குழுக்களை ஹஜ் பயணிகளுடன் அனுப்பி வைத்து, அதற்கென பெரிய தொகையை வழங்குவது மோசமான மத ரீதியிலான நடவடிக்கை எனவும் கண்டனம் தெரிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு...
ஹஜ் பயணத்துக்கு மானியம் வழங்குவதை குறைக்கிற வகையில் நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், ரஞ்சனா தேசாய் ஆகியோர் நேற்று ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ஹஜ் பயணத்துக்கு மானியம் வழங்கி வருவதை மத்திய அரசு 10 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும்.
* மத வழிபாட்டு தலங்களுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு அரசே மானியம் வழங்குவது என்பது சரியான செயல் அல்ல. அரசு மானியம் வழங்குவது என்பது சிறுபான்மையினரை தங்கள் பக்கம் கவர்வதற்காகத்தான்.
* ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுடன் பிரதமரின் நல்லெண்ண தூதுக்குழு என்ற பெயரில் அனுப்பப்படுகிறவர்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைக்க வேண்டும்.
* இந்திய ஹஜ் கமிட்டியின் செயல்பாடுகள், ஹஜ் புனிதப்பயணத்துக்கு பயணிகளை தேர்வு செய்யும் முறை ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு ஆராயும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது, இடைக்கால உத்தரவு தான். சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவு வந்தபின், இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கான கொள்கை, பயண ஏற்பாட்டாளர்கள், ஹஜ் கமிட்டி, சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்பே, உருவாக்கப்பட்டது. இந்த விஷயத்தில் வெளிப்படையான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கருத்துகள் ....
ஹஜ் பயணத்துக்கான மானியங்களை இப்போதைக்கு குறைத்தும், 10 ஆண்டுகளுக்குள் மானியம் வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை முஸ்லிம் சமூகத்தினர் வரவேற்றுள்ளனர்.  

இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. சைபுதீன் சோஸ் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வரவேற்கிறேன். ஹஜ் மானியம் வழங்கப்பட்டு வருவதை வலதுசாரி தீவிரவாதிகள் எதிர்த்து வருகின்றனர். இது இஸ்லாமுக்கு எதிரானது என உலமாக்களும் கூறுகின்றனர். மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 20 முஸ்லிம் தலைவர்களும் நானும் சேர்ந்து மத்திய அரசிடம் ஏற்கனவே மனு செய்துள்ளோம்என்றார்.

மஜ்லிஸ்-இ-இட்டஹாதுல் முஸ்லிமின் (எம்.ஐ.எம்.) தலைவர் அசாதுதீன் குவாய்சி கூறுகையில், 
ஹஜ் மானியம் ரூ.600 கோடி ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குத்தான் வழங்கப்படுகிறதே தவிர ஹஜ் பயணிகளுக்கு தரப்படவில்லை. மானியம் என்று சொல்லிக்கொண்டு பலவீனமான நிலையில் உள்ள ஏர் இந்தியாவுக்குத்தான் பணம் போகிறது. இந்த ரூ.600 கோடியை சிறுபான்மையின பெண்பிள்ளைகள் கல்விக்கு பயன்படுத்தலாம். அவர்களின் கல்விநிலை மிக மோசமாக உள்ளது.

ஹஜ் புனிதயாத்திரைக்கு மானியங்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஹாஜிகளுக்கு குறைந்த் பயணக் கட்டணம், விசாலமான வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடுச்செய்ய விமான நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜிற்கு செல்லும் புனித யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியாவில் உயர்ந்த தங்குமிட வசதிகளை செய்வது, ஹாஜிகளுக்கு அளிக்கும் தற்காலிக பாஸ்போர்ட் நிரந்தரமாக்குவது, 
 சர்வதேச பாஸ் போர்ட் பெறுவதற்கு விதிமுறைகள் எளிமை யாக்கப்பட வேண்டும். இதை நம் வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத் தில் கொள்ள வேண்டும். ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படக்கூடாது கடந்த காலங்களில் ஹஜ் புனிதப் பயணிகள் பலரும் ஏமாறும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு, மிகுந்த மனக் கவலையும், வேதனை யும் அனுபவித்துள்ளனர். இது தொடர்கதையாக கூடாது.  உள்ளிட்ட கோரிக்கைகளையும் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்துள்ளனர்.

மானியங்கள் தேவையில்லை அதற்கு பதிலாக நீண்டகால கொள்கைதான் தேவை என முஸ்லிம் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் எம்.பிக்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய சந்திப்பில் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


அகில இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கிருஷ்ணா கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர்  "" ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்வது குறித்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவு வந்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று  செய்தியாளர்களிடம் கூறினார்,

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment