Wednesday, 2 May 2012

டிகிரி படிப்பே டிப்ளோமா படிப்பை விட சிறந்த்தது....



பல்வேறு டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிப்பதைவிட அது தொடர்பான பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்கான சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.


இதற்கேற்ற வகையில், பல்வேறு டிப்ளமோ படிப்புகளை நடத்திய கல்வி நிறுவனங்கள் அது தொடர்பான பட்டப் படிப்புகளுக்கு மாறிவிட்டன. தற்போது ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகியுள்ள நிலையில், பொறியியல் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகளே பெருமளவு தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. அதனால், இன்ஜினியரிங் டிப்ளமோ மாணவர்கள் நேரடியாக லேட்ரல் என்ட்ரி மூலம் பி.இ., இரண்டாம் ஆண்டுப் படிப்புகளில் சேர்ந்து தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ளும் நிலை உள்ளது.

டிப்ளமோவை விட டிகிரி படிக்கும் போது ஊதிய நிலையிலும் பெரிய மாற்றம் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் பி.ஜி.டி.சி.ஏ., படிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டிய நிலை தற்போது இல்லை. அதற்கு பதிலாக எம்.சி.ஏ., படிக்கவே மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதையும் சில பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

டிப்ளமோ இன் நர்சிங் படிப்பு, அரசு நர்சிங் கல்லூரிகளுடனேயே நின்று விட்டது. இந்த டிப்ளமோ படிப்பில் சேரும் பெரும்பாலான மாணவியர் அரசுப் பணிகளை மட்டுமே நம்பி இப்படிப்புகளில் சேர்ந்தவர்கள். தற்போது, பி.எஸ்சி., நர்சிங் பட்டப் படிப்புக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் சென்று பணிபுரிவதற்கும் அது உதவியாக இருக்கிறது என்று பல மாணவியர் கருதுகிறனர். அத்துடன் நர்சிங் துறையிலேயே எம்.எஸ்சி., – பிஎச்.டி., என்று படிப்புகளைத் தொடரவும் பட்டப் படிப்பே உதவியாக இருக்கிறது. ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி பாடப்பிரிவில் டிப்ளமோ படிப்புகளை படித்து வந்த காலம் போய், தற்போது அந்தப் பாடப்பிரிவில் பட்டப் படிப்புகளே முக்கியத்துவம் பெறத் துவங்கியுள்ளன.

டிப்ளமோ படிப்பைப் படிப்பதால் ஏதாவது தொடக்க நிலை வேலைக்கு உதவலாமே தவிர, பல்கலைக் கழகங்களில் உயர்நிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு உதவாது. பட்டப் படிப்பு இல்லாத காரணங்களால், திரைப்படத் தொழில்நுட்ப டிப்ளமோ படித்தவர்கள் திரைப்படக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களில் சேருவதற்கு தடையாக இருப்பதாக அத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில், தற்போது பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் துவங்கப்படும் திரைப்படம் சம்பந்தமான தொழில்நுட்பப் படிப்புகள் பட்டப் படிப்புகளாகவே விளங்குகின்றன. இதேபோல, அனிமேஷன் துறையில் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தர பல்வேறு தனியார் நிறுவனங்கள் தனிப் பயிற்சியையும் டிப்ளமோ படிப்புகளையும் நடத்துகின்றன.

குறிப்பிட்ட சில பல்கலைக் கழகங்களிலும் மிகச் சில கல்லூரிகளிலும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய பல்வேறு துறைகளில் பட்டப் படிப்புகள் துவங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அனிமேஷன் குறித்து பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்காக இளநிலைப் பட்டப் படிப்பு துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது.

அனிமேஷன் டிப்ளமோ படிப்புக்கு ஆகும் செலவே இந்த அனிமேஷன் பட்டப்படிப்புக்கும் ஆகும். அத்துடன், அவர்களுக்கு படிப்புக்கான சட்டபூர்வ அங்கீகாரமாக பல்கலைக் கழகத்திலிருந்து பட்டச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த மூன்றாண்டு பட்டப் படிப்பில் தியரிக்கு மட்டுமல்லாமல், செய்முறை பயிற்சிக்கும் தொழில் நிறுவனங்களில் நேர்முகப் பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், படித்து முடித்த உடன் தொழில் நிறுவனங்களில் பணியில் சேரும் அளவுக்கு மாணவர்கள் தயார் படுத்தப்படுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. வளர்ந்து வரும் முக்கியத்துறையான
அனிமேஷன் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் பெருகி வரும் சூழ்நிலையில், இத்துறையிலேயே முதுநிலைப் பட்டமோ அல்லது குறிப்பிட்ட சில துறைகளில் சிறப்பு மேற்படிப்போ படிக்கவும் இந்த பட்டப் படிப்பு உதவியாக இருக்கும்.

வெளிநாடுகளில் சென்று இத்துறையில் உயர் படிப்பைப் படிப்பதற்கும் இந்தப் பட்டப் படிப்பு அடித்தளமாக இருக்கும். எனவே தான், குறிப்பிட்ட துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்துடன் இருக்கும் மாணவர்கள், டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிப்பதைவிட பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பது வேலைவாய்ப்பு சாத்தியங்களை அதிகமாக்குவதுடன், எதிர்காலத்தில் உயர்கல்வி படிக்க நினைக்கும்போது அதற்கும் உதவியாக இருக்கும் என நினைக்கிறார்கள்.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்திடமிருந்து பட்டம் என்கிற போது, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களும் தயக்கமின்றி வேலைக்கு எடுத்துக் கொள்ளவும் ஏதுவாகும் என்றும் பல மாணவர்கள் கருதுகிறார்கள்

No comments:

Post a Comment