Tuesday 1 May 2012

பாஸ்போர்ட் வாங்கும் முறை பற்றி விளக்குகிறார் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி




‘‘உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள்தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் நிதானமாக விண்ணப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்துவிடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷனும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலருக்கு எதிர்காலத்தில் வெளிநாடு போகும் வாய்ப்பும் ஏற்படலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது?

முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந்ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப்போது மிக எளிதாக்கி விட்டோம்.

ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக்கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட்மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வருமானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ்பெற்ற கம்பெனிகளில் வேலை செய்பவராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும்.

இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண்ணப்பிப்பது சிரமமாக இருக்காதா?

இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையைப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.

யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா?

பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியானவர்கள்தான். ஆனால், போலீஸ் விசாரணையில் அவர்களுக்குத் திருப்திகரமாக இல்லையென்றாலோ, அல்லது அவர்கள், ஏதாவது சட்டம் மற்றும் தேச விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை.

ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?

ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது?

அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது. இதற்குப் போய் எதற்காக டென்ஷனாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்!


‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது?

முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென்றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரியிடமிருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார்கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ்வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்றளித்த உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு.

1. வாக்காளர் அடையாள அட்டை 2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை.

3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.)

4. தியாகி அடையாள அட்டை

5. துப்பாக்கி லைசன்ஸ்

6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை.

7. ரேஷன்கார்டு

8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள்.

9. ரெயில்வே அடையாள அட்டை.

10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card)

11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக்.

12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை

13. ஓட்டுனர் உரிமம்.

14. பிறப்பு சான்றிதழ்

பாஸ்போர்ட் கட்டணம்

விண்ணப்பப்படிவம் ரூ.10/_
சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/_
தட்காலுக்கு ரூ. 2,500/_
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/_

No comments:

Post a Comment