Monday, 21 May 2012

விண்வெளி விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ!

Posted Image

சென்னை இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளிப் பொறியியல் ('ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்') இரண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நிலவு, விண்வெளி பற்றி பல திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானிகளையே வியக்க வைத்தவர்.
இந்தியாவில் இத்துறையில் ஆர்வம் காட்டும் இளம்வயதினரில் முதலாவது பெண் என்று ஜெயஸ்ரீயை சொல்லலாம். 'இந்திய மூன் சொசைட்டி'யின் இளம் வயதுத் தலைவராக இருக்கிறார். ஆனால் அடுத்த வீட்டுப் பெண்ணைப் போல அலட்டல் இல்லாத தோற்றம் காட்டும் ஜெயஸ்ரீ, வெகு இயல்பாகப் பேசுகிறார்...
விண்வெளியை நோக்கிய உங்களின் இந்தப் பயணம் தொடங்கியது எப்போது?
சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தபோது. அப்போது பள்ளியில் நடைபெற்ற, விண்ணில் உள்ள கிரகங்களின் அமைப்பு குறித்த முகாமில் எனது 'அசைன்மென்டு'க்கு முதல் பரிசு கிடைத்தது. அதுதான் விண்வெளி குறித்து எனக்குள் ஆர்வத்தை விதைத்த முதல் நிகழ்வு. தொடர்ந்து விண்வெளி தொடர்பான விஷய ஞானத்தை வளர்த்துக்கொண்டதால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல பரிசுகளைப் பெற்றேன். நாசா விஞ்ஞானிகளின் பாராட்டையும் பெற்றேன்.
விண்வெளி ஆராய்ச்சியின் தலைமையிடமாகத் திகழும் அமெரிக்காவின் 'நாசா'வுக்குச் சென்றிருக்கிறீர்களா?
மூன்று முறை சென்றிருக்கிறேன். 'நாசா'வின் 'லூனார் அண்ட் பிளானட்ரி இன்ஸ்டிட்யூட்', சர்வதேச ஆய்வுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது நான் 12-ம் வகுப்பு மாணவி. ஒருவித துணிச்சலில் நான் அனுப்பிய கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, உதவித் தொகையுடன் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் ஒரு பள்ளிச் சிறுமியாக போய் நின்ற என்னை, நீண்ட விளக்கத்துக்குப் பின்னே ஏற்றுக்கொண்டார்கள். அப்போது இந்தியாவில் இருந்து சென்ற ஒரே நபர், மிக இளவயது நபர் நான்தான். நான்காவது முறையாக விரைவில் 'நாசா' செல்லவிருக்கிறேன்.
ஆக, 'நாசா' உங்களுக்கு இரண்டாவது வீடு போல ஆகிவிட்டது. அங்கேயே பணிபுரியும் ஐடியா இருக்கிறதா?
தற்போதைய 'ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்' படிப்பு முடிந்ததும் அதிலேயே முதுநிலைப் படிப்பைப் படிக்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் அமெரிக்கா போகலாம் என்று திட்டம். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, அங்குள்ள பொருட்களைக் கொண்டே இருப்பிடங்களை அமைப்பது, மின்சார உற்பத்தி செய்வது, நிலவுக்கும் பூமிக்கும் இடையில் தெளிவான 'கம்யூனிகேஷன் அமைப்பை' உருவாக்குவது போன்றவை எனது ஆய்வின் அம்சங்கள். எனது ஆய்வுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், நிபுணத்துவ உதவிகளும் 'நாசா'வில் கிடைக்கும். நீங்களே கூறியமாதிரி நான் அங்கு நன்கு அறிமுகமான பெண். எனவே, எதிர்காலத்தில் அமெரிக்காவில் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஆவலாயிருக்கிறேன். எங்களின் உறவினர்கள் பலரும் அந்நாட்டில் இருப்பதும் ஒரு காரணம்.

'இந்திய மூன் சொசைட்டி'யின் தலைவராக நீங்கள் ஆற்றும் பணி?
நிலவு, விண்வெளி தொடர்பான ஆர்வத்தை மாணவர்களிடையே வளர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். இதுதொடர்பான கருத்தரங்குகள், போட்டிகளை பள்ளி, கல்லூரிகளில் நடத்துகிறோம். விரிவுரைகளை ஆற்றுகிறேன். விண்வெளி விஷயத்தில் மாணவர்களின் ஆர்வமும், அறிவும் எனக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றில்லை, சிறுநகரங்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் எனக்கு ஆர்வமாக மின்னஞ்சல் செய்து வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் நான் பலருக்கு முன்மாதிரியாகி இருப்பதாக உணர்கிறேன். நான் 'ஏரோஸ்பேஸ்' படிப்பு சேர்ந்தபோது இதில் ஆர்வம் காட்டியவர்கள் வெகு சிலர். ஆனால் தற்போது எனது ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் பலரும் இப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அதைப் போல நட்பு வட்டாரத்திலும்.
உங்கள் எண்ணம், யோசனை எல்லாமே விண்ணில் உலவுகின்றவனா... மண்ணுக்கு வருவதில்லையா?
உண்மையில் ஆரம்பத்தில் நான் மேற்கொண்ட ஓர் ஆய்வு நமது பூமி, அதாவது உலக வெப்பமயமாதல் பற்றி. வருகிற ஜூலையில் இங்கிலாந்தில் அந்நாட்டு அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு நடைபெறுகிறது. அதில், 'உலக வெப்பமயமாதலின் தாக்கம்' என்ற பெயரில் பேச சிறப்பு அழைப்பாளராக நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். இதற்கான செலவு முழுவதும் எனக்கு அளிக்கப்படும். சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்குக்கும் சென்று வந்தேன்.
விண்ணைப் பற்றி அதிகம் ஆய்வு செய்யும் உங்களுக்கு, விண்ணுக்குப் பறக்கும் ஆசை இருக்கிறதா?
'நாசா'வில், விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை உருவாக்கிய விஞ்ஞானி டாக்டர் ஏஞ்சல் அபுட் மாட்ரிட், 'நீதான் அடுத்த கல்பனா சாவ்லா' என்று கூறிப் பாராட்டி, கல்பனா பயன்படுத்திய 'பேட்ஜை' எனக்குப் பரிசாகக் கொடுத்தார். எனது நகைப் பெட்டியில் அது ஒரு பொக்கிஷமாக உள்ளது. எனக்கும் விண்வெளி வீராங்கனை ஆசை இருந்தது. ஆனால் ஒரே பெண் என்பதால் வீட்டில் அனுமதிக்க மறுக்கிறார்களே? (ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்துச் சிரிக்கிறார்.) எனவே, நீங்கள் எல்லோரும் அயல்கிரகங்களில் வசிப்பதற்கான ஏற்பாட்டை மட்டும் இங்கிருந்தே செய்யப் போகிறேன். விண்கலத்தில் செல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் பயணிகள் விமான பைலட்டாவது ஆக வேண்டும்!

விண்வெளி தவிர்த்த உங்களின் பிற ஆர்வங்கள்?
இசை, நடனம், டென்னிஸ், குவிஸ் என்று பல ஆர்வங்கள் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் ஒதுக்குவதற்குத் தற்போது நேரம்தான் இல்லை! என்று சந்தோஷமாய் அலுத்துக் கொண்டார் ஜெயஸ்ரீ.

பேட்டி அளித்த மகளின் அருகே அமர்ந்து, தெளிவாய் பல விஷயங்களை எடுத்துக் கொடுத்தார், அம்மா ஜெயலட்சுமி.ஜெயஸ்ரீ வெளிநாடு செல்லும்போதெல்லாம் உடன் செல்பவர் இவர்தான். பல இடங்களில் இவரையே 'விஞ்ஞானி' என்று நினைத்து விடுவார்களாம். 'ஓ நீங்க உங்க மகளையும் அழைத்து வந்திருக்கிறீர்களா? என்பார்கள்' என்கிறார், ஜெயலட்சுமி.
இல்லத்தரசியான இவரும், கப்பல் கேப்டனாக உள்ள அப்பா ஸ்ரீதரும் மகளின் விண்வெளி ஆர்வத்துக்குத் தடை போடாமல் வெற்றிநடை போட உதவி வருகிறார்கள். இவர்களும், மென்பொருள் பொறியாளரான 'கசின்' ஸ்ரீனிவாசனும்தான் தனது பின்பலம் என்கிறார், ஜெயஸ்ரீ.
நிலவு போன்ற மாதிரி அமைப்பை இந்தியாவில் நிறுவி, அதுதொடர்பான ஆய்வுக்கு உதவ வேண்டும் என்பது ஜெயஸ்ரீயின் எண்ணம். தனது ஆய்வுப் பணிகளுடன் அதற்கான முனைப்பான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார், இந்த விண்வெளி ராணி!


நன்றி தமிழ்கூடல்

No comments:

Post a Comment